» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 8 May 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

ராகு பகவான் கோவிலில் வணங்கப்படும்
அருகம் புல்
()

அருகம் புல்

நவக்கிரகங்களில் இங்கு பளூட்டோ () என்னும் ராகு பகவானைப் பற்றியும், அதற்கான விருட்ச செடி அருகம்புல் பற்றியும் அறிவோம். இந்த கிரகத்திற்கு நிரந்தர இடமோ, வீடோ கிடையாது. அதனால் ஏழு கிரகங்களில் நாடோடியாக சுற்றிக் கொண்டே இருப்பார்.

இந்தக் கிரகத்தின் பிடியில் வருபவர்கள் மன நிம்மதி இழந்து, உடல் பலம் இழந்து, மனநோயாளியாக மாறி கோர்ட்டு, கேஸ், போலீஸ் ஸ்டேஷன், அடிதடி, குடும்பத்தில் சிக்கல் என ஏற்பட்டு தவிப்பார்கள். ராகு பகவான் நல்லவர்கள் மத்தியில் கெடுதல், கெட்ட பெயர் கலகத்தை உண்டாக்கும் பணியைச் செய்பவர். அதனால் பொதுவாக இந்து சமய மக்கள் ராகு காலத்தில் நல்ல காரியங்களைத் தொடங்க மாட்டார்கள். நல்லவர்களையும் காணமாட்டார்கள். ஏனென்றால் அந்நேரத்தில் ராகு வந்த விட்டால் கலகத்தை உண்டாக்கிச் சென்றுவிடுவார்.

இந்தச் கிரகத்துடன் அருகம்புல்லுக்கு நெருக்கம் உள்ளதால் இந்துக்கள் ராகு பகவானுக்கு என தனி கோவில் கட்டி அந்தக் கோவிலில் ராகு பகவான் சிலை அமைத்து, அவருடன் சிம்ஹீதேவியை அமர வைத்து அருகம்புல்லையும் வைத்து தினசரி வணங்குகிறார்கள். இப்படிச் செய்தால் அவர்கள் ராகு பகவானின் அன்பைப் பெறுவார்கள். அவருடைய கலகச் செயல், கெடுதல்கள் மனிதர்களுக்குப் பலிக்காது என நம்புகின்றனர்.

பழங்காலத்தில் கிட்னி ஃபெயிலியர் நோய் ஏற்படும்போது, இது ராகு தசைக் காலத்தின் கெட்டச் செயலாக நினைத்து ராகு பகவானை வணங்கிவிட்டு அருகம்புல் சாற்றைக் குடிப்பார்கள். அதனால் கிட்னி ஃபெயிலியர் குணம்பெற்று உயிர் வாழ்ந்தார்கள் என்று வேதங்கள் கூறுகின்றன. முன்பெல்லாம் ஆன்மீகமும் மருத்துவமும் இணைந்து செயல்பட்டதால் உயிர் குடிக்கும் நோய்கள் எளிதில் குணம் பெற்றன. இன்றைய நிலை அப்படி அல்ல. சிறுநீரகங்கள் பழுதடையும் நிலையில் சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றுகின்றார்கள். டயாலிஸிஸ் செய்கிறார்கள். ஆயினும் உயிர்களுக்கு உத்திரவாதம் கிடையாது.

அருகம்புல் முழுச்செடியும் மருந்தாகப் பயன் அளிக்கிறது. சிறுநீரில் இரத்தம் கசிதல், சீறநீரகங்களில் கட்டிகள் தோன்றுதல், மேகம், வெட்டை, பால்வினை நோய்கள், எய்ட்ஸ், கிட்னி ஃபெயிலியர் போன்ற நோய்களுக்கு மூலிகை மருத்துவர்கள் அருகம்புல்லைத் தருகின்றனர்.

இந்து சமய சடங்குகளில் அருகம்புல்லைப் பயன்படுத்துகின்றனர். விநாயகருடன் தொடர்ப்பு படுத்துகின்றார்கள். உயிர் குடிக்கும் நோய்களில் மாமருந்தாகப் பயன்படுத்துகின்றார்கள். நீல அருகம்புல் சளி, பித்தம், இரத்த நோய்கள், அக்கி என்னும் () தோல் நோய், நாக்கு வறட்சி, எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்குகிறது.

இன்றைய பெரிய வியாதிகளில் கிட்னி ஃபெயிலியர்தான் முதலிடம் பெறுகிறது. இந்த கிட்னி ஃபெயிலியர் எதனால் ஏற்படுகின்றது என்பதை சிறுநீரக சிகிச்சை நிபுணர்களாலேயே கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றார்கள்.

யுனானி, சித்தா, ஆயுர்வேதம் இதற்கு விளக்கம் அளிக்கின்றது. இரத்தம், கபம், வாதம், கரும்பித்தம் ஆகிய நான்கு தோஷங்கள் நம் உடலில் இருக்கின்றன. அவைகளை உருவாக்கும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் சுத்தமான தோஷங்கள் சுரக்கும். இந்த தோஷங்கள் சூடு, வறட்சி, குளிர்ச்சி, ஈரத்தன்மை ஆகிய நான்கு விதமான நிலையில் இருக்கும்.

சிறநீரகங்களில் அதிகமான உஷ்ணம், வறட்சி, ஏற்படும் நிலையில் சிறுநீரகங்கள் சுருங்கி சிறுத்து விடுகின்றன. நெஃப்ரான்ஸ் என்னும் இரத்தக் குழாய்கள் வறண்டு விடுகின்றன. அதனால் சிறநீரகம் செயலிழந்து தன் பணியைச் செய்ய முடியாததால் யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் போன்ற கழிவுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துவிடும். அதனால் வாந்தி, இளைப்பு, விக்கல், கை, கால் வீக்கம், சிறுநீர் அடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துவிடுவார்கள். இதற்கு () CRF என்பார்கள்.

இந்நிலையில் பழங்காலத்தில் இறைவனையும், அருகம்புல்லையும் வணங்கிவிட்டு மக்கள் அருகம்புல் மருந்தைச் சாப்பிடுவார்கள். சிறுநீரகம் உஷ்ணம் தணிந்து மீண்டும் இயங்கும்.

இரத்த சுத்தி மருந்துகளைக் கொடுத்து யூரியா, கிரியாட்டினின்கள் போன்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுவார்கள். இன்று ஆங்கில மருத்துவத்தில் சிறுநீரகத்தை மாற்றுகினறார்கள். டயாலிஸிஸ் செய்கின்றார்கள். ஆயினும் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.

முன்பு இறைவனும், மருந்தும் மனிதனின் நோயைக் குணப்படுத்தியதால் இந்திய மக்கள் கடவுளுக்கும் செடி, கொடி, மரங்களுக்கும் நன்றியைச் செலுத்தும் வகையில் வணங்கி வந்தனர் என்ற உண்மை விளங்குகின்றது.

யுனானி மருத்துவத்தில் அருகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

சங்க இலக்கியம்

அருகம்புல், மழை பெய்தவுடன் நன்கு தழைத்து தானே வளரும். இதனைக் கன்றுகளும், மான் இனம் பிணையோடும் கறித்து உண்ணும் எனவும், பாழ்படுத்தப்பட்ட பகைவர் நாட்டிலே நடந்து வந்த பெரிய திருநாளின்றாகிய அச்சம் முதிர்ந்த மன்றத்திடத்தே நெருஞ்சிப்பூக்களுடன் அருமம்புல் வளர்ந்துள்ளது எனவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

‘பழங்கன்று கறித்த பாம்பு அமல் அறுகைத்
தழங்கு குரல்வானின் தலைப் பெயற்கு ஈன்ற’
(அகநானூறு) எனவும், மேலும் பட்டினப் பாலையிலும் பாடப்பெற்றுள்ளது. தோன்றிய நாள்தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் இந்த அருகம்புல் மட்டுமே. புல்லின் இலை ‘ஓலை’ என்றும், மலரிதழ் ‘தோடு’ என்றும் தொல்காப்பிய மரபியலில் குறிக்கப்பெறுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் கருத்து
இப்புல் இறவாமல் என்றும் நிலைத்து வளர்ந்து வாழ்ந்து வருவது எதனால் என்பதை ருஷ்ய நாட்டு உயிரியல் அறிஞர்கள் ஆய்ந்து வருகின்றனர்.

இப்புல்லின் வளருங்குருத்தில் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் காணும்போது அவற்றில் செல்லின் கரு ‘நியூக்ளியஸ்’ காணப்படும். அதில் உள்ள ‘நியூக்கிளியோலஸ்’ என்ற உட்கருவை எலக்ட்ரான் நுண்ணோக்கி மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மடங்கில் பெரிதாக்கிப் பார்த்ததில் அவற்றில் உள்ள டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. மூலக்கூறு அமிலங்கள் தென்பட்டன.

அவற்றின் பாரம்பரியத்தைத் தொடச்செய்யும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகள் கணந்தோறும் சிதைந்து கொண்டு வருவதையும், அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து சீர்படுத்தும் மிக அற்புதமான சுரப்பி நீர் இம்மூலக்கூறு அமிலத்தாலேயே உண்டாக்கப்படுகிறது என்பதையும், அவையே சிதைந்து மூப்பைத் தரும் ஆர்.என்.ஏ. அமிலத்தின் மூலக்கூறுகளையும் சிதையாமல் செப்பனிடுகின்றன என்பதையும் துல்லியமாக ஆய்ந்து கண்டுள்ளனர். இந்த அற்புதமான சுரப்பிநீர் வேறு எந்தவிதமான உயிர்களின் ‘நியூக்கிளியோலஸ்’களிலும் உணடாவதில்லையாம்.

எப்படியாவது இந்த அற்புத நீரைச் சுரக்குமாறு மனிதக் கருவில் செய்துவிட்டால் ஆர்.என்.ஏ. மூலக்கூறுகளைச் சிதையாமல் காக்கலாம் என்றும், அப்போதுதான் மனிதன் மூப்பு வராமல் வாழ்வான் என்றும், இது தொடர்பான பேராய்வுகளை நெடிது வாழும் வகை தேடும் ஆய்வுத் துறைகள் மேற்கொண்டுள்ளன எனும் தகவல்கள் புதுமையானவை.

அருகம்புல் ஆடு, மாடு, மான், குதிரைகளுக்கு மிகச்சத்துள்ள உணவுப்பொருள் ஆகும். இதனை வெள்ளை நீர், மழைநீர் நிலத்தை அறிந்துவிடாமல் காப்பதற்கு ஆங்காங்கே வளர்த்து வருகின்றனர். அருகம்புல்லை மாலையாகத் தொடுத்து பிள்ளையாருக்குச் சூட்டுவர் என குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

ராகு
கும்பகோணத்துக்கு அருகில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கு ராகு கிரகத்துக்கு உரிய கோவில் உள்ளது. இக்கோவிலில் பாலாபிஷேகம் செய்தபின், மேலப்பெரும்பள்ளத்தில் உள்ள கேதுவுக்கு அர்ச்சனை செய்தால் தோஷங்கள் விலகும்.

ராகு பகவானுக்கு ராகு காலத்தில் அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு இக்கோவிலுக்கு வருகின்றனர்.

இக்கோவிலில் பாலாபிஷேகம் செய்யும்போது சுவாமியின் மேல் அபிஷேகம் செய்யும் பால் நீலநிறமாக மாறுகிறது. அதேபோல் ராகுவின் மேனியில் நீலநிறமாக வழிந்து பாதத்தை அடைந்து, தூய வெண்மை நிறமாக மாறி தரையில் ஓடுகிறது. அரசு பதவி , புகழ்பெற ராகுவின் அருள் வேண்டும். நவக்கிரகங்களின் வரிசையில் 8ஆவது இடத்தைப் பெறுபவர்.

இந்து சாஸ்திரப்படி ராகு பகவான் (PLUTO) பற்றிய குறிப்புகள்

கிரக பெயர் - ராகு பகவான்
அம்மன் - சிம்ஹீதேவி அபவாதகாரகன் தோஷநிவர்த்தி (வீண் கெட்ட பெயர் உண்டு பண்ணக் கூடியவர்) உடல் பலம், கண், கோர்ட், கேஸ், சர்வ ராசி (எல்லா ராசிக்கும் உரியவர்)
அதிதேவதை - சர்பம்
ப்ரீத்தி தேவதை - துர்கை
நவக்கிரகத்தில் - தெற்கு முகம் - உடல் பாம்பு (ராகு கால நேரம்)
வாகனம் - சிங்கம்
நிறம் - நீலம்
தானியம் - உளுந்து
நவரத்தினம் - கோமேதகம்
விருட்சம் - அருகு
திக்கு - தென்மேற்கு
ராசி - திருவாதிரை, சுவாதி, சதயம்

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/05/01 சனி பகவான் கோவிலில் வணங்கப்படும் வன்னி மரம்

2009/04/24 சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம்

2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி

2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Related Posts Title


Leave a Reply