Friday, 24 Apr 2009
மணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்
- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்
சுக்கிர பகவான் கோவிலில் வணங்கப்படும் அத்தி மரம் (FICUS GLOMERATA)
அத்தி
FICUS GLOMERATA, ROXB; MORACEAE
சுந்தரர் பாடிய தேவாரம் - பாடல் :
மற்றுத் தேவரை நினைந்துனை
மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றிருந்து பெறாதொழிகின்ற
பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன்
முற்றும் நீயெனை முனிந்திட
அடியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல்
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய்
ஒற்றி யூரெனும் ஊருறைவானே.
சுக்கிர பகவான் வெள்ளிக் கிரகத்துக்கு வணங்கப்படும் மரம் “அத்தி”. நவக்கிரகங்களில் வெள்ளிக்கிரகம். இதற்கு சுக்கிர பகவான் என்றும், சுகீர்த்திதேவி பெண் தெய்வத்துடன், கருட வாகனத்தில், சந்தன நிற ஆடை அணிவித்து, மொச்சை தானியத்துடன், நவரத்தினத்தில் நீலக்கல் அணிவித்து, கிழக்கு திசையில் ரிஷபம், துலாம் ராசியில் அத்தி மரத்தின் அருகில் பூஜை செய்யப்படுவதை நவக்கிரக ஆலயத்தில் காணலாம்.
அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான். அல்லாவின் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தி பழத்தை சொர்க்கத்தின் பழம் என்றும், இது மூலம், மூட்டு வலிக்கு நல்ல மருந்து என்றும் அறிவித்திருக்கிறார். பைபிளிலும், இஸ்லாமிய நூல்களிலும் ஆதி மனிதர் ஹசரத் ஹவ்வா (ஏவாள்) ஆகியோர் சொர்க்கத்தில் அத்திப் பழத்தைப் பறித்து பழத்தைச் சாப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலோகத்தில் இருந்து பூமிக்கு வந்தவர்கள், தங்களின் உடலை மறைக்க, அத்திமர இலைகளை ஆடையாகப் பயன்படுத்தினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்து மதத்தில் அத்தி மரத்தைக் கடவுளுடன் சேர்த்து பூஜை செய்யப்படுவதை இன்றும் காண முடிகிறது. வெள்ளிக் கிரகத்தை வணங்க அத்தி மரத்தையும் பயன்படுத்துகின்றனார்கள்.
வேலூர் அருகே உள்ள பொன்னை, விநாயகபுரத்தில் அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயம் அமைந்து உள்ளது. இங்கு நவரக்கிரங்களுக்கு, ஒன்பது வகையான கோயில்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. இங்கு வெள்ளி கிரகத்தை வணங்குவதற்காக அத்தி மரமும் வைக்கப்பட்டுள்ளது. எனவே அத்திமரம் தெய்வீக மரம் என்பதிலும், நல்ல பயன் உள்ள மரம் என்பதிலும் சந்தேகம் இல்லை.
அத்தி மரம் பல வகைகளில் உள்ளது. இதில் நாட்டு அத்தி, வெள்ளை அத்தி, நல்ல அத்தி வகைகளும், ஆங்கிலத்தில் (GULAR FIG. COUNTRY FIG. FICUS GLOMERATA, CLUSTER FIG) ஆகிய வகைகளும் கோவில்களில் அர்ச்சனைக்கு வைக்கப்படும் அத்தி மரமாகும்.
பகவான் தத்தாத்திரேயர் அத்தி மரத்திலே அமர்ந்திருக்கிறார் என குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அசுரர்களின் குருவான சக்கிராச்சாரியாரின் மறுபிறவியே அத்தி மரம் என சதுர்மாஸ்ய மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது.
புனிதம் என்றால் மாசு மருவில்லாதது என்பது பொருள். இத்தகைய மகிமையை உடைய அத்தி, புராணக்கதையிலும் இடம் பெற்றிருப்பது நமக்க வியப்பை அளிக்கிறது. அந்த வியப்பு என்ன?
நரசிம்ம அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, ஹிரண்யகசிப்புவைக் கிழித்தக் கொன்றபின், அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என்றும் ஒரு நம்பிக்ககை நிலவி வருகிறது.
ஒவ்வொரு பொருளைப் பார்த்தவுடன் இது பயன்பட்டால் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை நம் எல்லோர் இடத்திலும் எழும். அதேபோல்தான் குஜராத் மக்களும் அத்தியைப் பார்த்து நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை என்னவென்றால் ஒவ்வொரு அத்தி மரத்தினடியிலும் ஒரு நீரோடை மறைந்து ஓடுகிறது என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்க்ள. இந்த விபரம் பரோடா கெஜட்டில் உள்ளது.
அத்தி நடுத்தர மரமாகும். இது சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளரும். மரப்பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். முட்டை வடிவில் சற்று நீளமாக இருக்கும். காய்கள் தண்டிலும், கிளைகளிலும். அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். ரஸகுல்லா அளவில் உருண்டையாக லேசான பச்சை நிறம் கொண்டதாக இருக்கும். காய் பழுத்தபின் கொய்யாப்பழம் போல் லேசான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும். பழுத்ததும் கீழே உதிர்ந்து விழுந்து விடும்.
நல்ல மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.
அத்தி மரததின் மருத்துவ குணங்கள்
* அத்தி மரத்தின் இலை, பால், பழம், அனைத்தும் மருந்தாகப் பயன் அளிக்கின்றன.
* இலைகளை உலரவைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதனைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
* உடலின் எந்தத் துவாரத்தில் இருந்தும் இரத்தம் வெளியேறினால் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள், சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் கணமாக்க, இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.
* மரத்தின் பட்டையை இரவில் உலர வைத்து, காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய், மூட்டு வலிகள் குணப்படும். அழுகிய புண்களைக் கழுவ லோஷனாகப் பயன்படுத்தலாம்.
* மரப்பட்டையை இடித்து, பசுவின் மோரில் உலர வைத்து, அதைக் குடித்தால் பெண்களுக்கு அடிக்கடி உண்டாகும் பெரும்பாடு, மாதவிலக்கு கட்டுப்படும்.
* அத்திப்பழம், அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம். இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும். இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த உதவுகின்றன.
* அத்திக்கள் அத்திமர வேரில் இருந்து எடுக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய், மூலநோயைக் குணப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
பழங்களைப் பயன்படுத்தும் முறை
மலைவாழ் மக்கள் வறட்சிக் காலத்தில் இந்தப் பழங்களையே உணவாக உண்ணுகின்றனர். பழங்களை உலர்த்தி பவுடராக்கி, பால் மற்றும் சர்க்கரையுடன் கலந்து சாப்பிடலாம். பழங்களை வறுத்து, பவுடராக்கி காலை டிபனாக சாப்பிடலாம். பிஞ்சுக் காய்களைச் சமைத்தும் சாப்பிடலாம்.
கால்நடைகள்
இதன் இலைகளை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாகத் தரலாம். கால்நடைகளுக்கு வெட்டைநோய் வந்தால் வெங்காயம், சீரகம், தென்னையின் இளம்பாளை ஆகியவற்றுடன் அத்தி மரப்பட்டையைச் சேர்த்து அரைத்து வினிகருடன் (காடி) கலந்து சாப்பிட வைக்கலாம்.
விஞ்ஞான ஆய்வு
விஞ்ஞானிகள் பழங்களை ஆய்வு செய்து பார்த்ததில் கீழகாணும் சத்துக்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
ஈரம் 13.6%
புரத வகைகள் 7.4%
கொழுப்பு 5.6%
மாவுப்பொருள் 49.00%
வர்ணப் பொருள் 8.5%
நார்ப்பொருள் 17.9%
சாம்பல் 6.5%
இதில் சிலிகா 0.24%
பாஸ்பாரிக் அமிலம் 0.91% ஆகியவை அடங்கி உள்ளன.
இலைகளிலும், பழங்களிலும் குளுயாக்கல், தாவரஸ் பீரால்கள், ஹைட்ரோகார்பன்கள், ஸ்பீரால், ப்ரைடெலின் ஆகிய வேதியியல் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனில் கூறப்படும் அத்தி மரம் சற்று வித்தியாசமாக இருக்கும். இந்தப் பழத்தை உலர வைத்து நாட்டு மருந்து கடைகளில் விற்பார்கள். வடநாட்டில் புதிய பழங்கள் விற்பார்கள். இதை அப்படியே சாப்பிடுவார்கள். இதற்கு “F.G.S” அத்திப்பழம் என்பார்க்ள. அரபு நாட்டில் இந்த வகை மரங்கள்தான் அதிக அளவில் காணப்படுகின்றன. இதுவும் கோவில்களில் காணப்படும் அத்தி மரத்தின் வகையைச் சேர்ந்ததாகும்.
நபி பெருமானாரும் அத்தி மரமும்
ஒரு நாள் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்பு தட்டு நிறைய அன்ஜீர் பழம் வந்தது. அதைப் சாப்பிடும்போது “சொர்க்கத்திலிருந்து பூமிக்கு ஏதாவது ஒரு பழம் வருகின்றது என்றால் அது அத்திப்பழமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அத்திப்பழம் சொர்க்கத்தின் பழம் என்பதில் ச்நதேகம் இல்லை. இதைச் சாப்பிட்டால் மூலநோய், மூட்டு வலிகள் குணமாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக (ஹஜ்ரத் அபு தர்தாரலி) அவர்கள் கூறுகிறார். (ஆதாரம் இப்னே அபுபக்கர் அல் ஜவ்ஸி எழுதிய, அல்திப்புல் நபுவி புத்தகம்).
அன்ஜீர் பழம் (அத்திப்பழம்)
ஹஜ்ரத் ஆதம், ஹஜ்ரத் ஹவ்வா இருவரையும் இறைவன் சொர்க்கத்திலிருந்து நிர்வாணமாகப் பூமிக்கு வெளியேற்றியபோது தங்களின் உடலை மறைக்க, இருவரும் அத்தி மர இலைகளைத்தான் பயன்படுத்தினார்கள் என்று இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் நம்புகின்றனர். “தவ்ராத்” என்ற இறை வேதத்திலும் அத்திப்பழத்தின் பயன் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, கரும் பித்தத்தை வயிர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரல்லிலுள்ள தடுப்புக்களையும் நீக்குகிறது. அத்திப்பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றப் போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குவதுடன் தலை மயிர் நீளமாக வளர்கிறது என்றும் இமாம் அலி மூஸாரிஸத் (ரலி) கூறியுள்ளார்கள். அத்திப்பழம் கை மூட்டுகளில் வலி வராமல் தடுக்கின்றது என்ற ஹதீஸை அபு நயீம் அவர்கள் கூறுகிறார்கள்.
யுனானி வைத்தியம்
இறைவனும், இறைதூதர் எம்பொருமானார் (ஸல்) அவர்களும் அருளிய யுனானி மருத்துவர்கள் பல நூற்றாண்டு காலமாகப் பல தீராத வியாதிகளைக் குணமாக்க லேகியமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பயன்படுத்தும் முறை
* தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
* மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
* நாள்பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
* போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
விஞ்ஞான ஆய்வு
இப்பழத்தை மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரைச் சத்து, கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் இருமபுச்சத்து அதிகளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப் பழத்தில் இந்தச் சத்துக்கள் நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகளவில் உள்ளன. வைட்டமின் பி.டி ஆகியவையும் குைற்நத அளவில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்திப்பழத்தைப் பொதுவான உடல் பலவீனத்திலும், ஜுரத்திலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப் பழங்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இதற்கச் “சீமை அத்திப்பழம்” என்று பெயர். இதுதான் இறைவனும், அண்ணல் நபி நாயகம் (ஸல்) அவர்களும் கூறியுள்ள அத்திப்பழங்கள் ஆகும். அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு தேவையான அளவிற்கு நம் நாட்டில் இவை “சீமை அத்திப்பழம்” என்ற பெயரில் எளிதில் கிடைக்கின்றது.
காட்டு அத்திப்பழம்
நம் நாட்டில் “காட்டு அத்திப்பழம்” என்ற பெயரிலும், “காற்றாடிப்பழம்” என்ற பெயரிலும் ஒரு வகையான அத்திப்பழம் நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது. இது வெண்குஷ்டத்தைக் குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தைத தினமம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். இதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதைத் தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படும் “சபூப் பர்ஸ்” என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.
நபி பெருமானர் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டி உள்ள அத்தி மரம் FICUS CARCA, FIG TREE, SEEMAI ATHI, ANJEER என்று அழைக்கப்படுகிறது.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்
திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் 2வது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது.
இந்து சாஸ்திரப்படி சுக்கிர பகவான் (VENUS) பற்றிய குறிப்புகள்
கிரகப் பெயர் - சுக்கிரபகவான் (வெள்ளி)
அம்மன் - சுகீர்த்திதேவி களத்ரகாரகன் (கணவன், மனைவி ஒற்றுமை) சுகம், வாகனம், சகல ஐஸ்வர்யம்
ராசி - ரிஷபம், துலாம், கிருத்திகை, ரோகிணி, மிருக சீரிஷம், சித்திரை, சுவாதி, விசாகம்.
உலோகம் - வெள்ளி
அதிதேவதை - லஷ்மி
ப்ரீத்தி தேவதை - இந்திரன்
நவக்கிரகத்தில் - கிழக்குமுகம் (வெள்ளிக்கிழமை)
வாகனம் - கருடன்
நிறம் - சந்தனம்
தானியம் - மொச்சை
நவரத்தினம் - வைரம்
விருட்சம் - அத்தி
திக்கு - கிழக்கு
ராசி - ரிஷபம் துலாம்
சங்க இலக்கியம்
சங்க இலக்கியத்தில் ‘அதவம்’ என்றும் கூறப்படும் இச்சிறுமரம், பூத்துக் காய்க்குமாயினும் மலர்கள் வெளிப்படையாகத் தெரியாது. ‘அத்தி பூத்தாற்போல’ என்னும் பழமொழியினாலேயே அத்தி பூக்கும் என்பதாயிற்று.
இருப்பினும், பிற்கால இலக்கியங்கள் கூறும் “பூவாதே காய்க்கும் மரங்களும் உளவே’ என்பதற்கு எடுத்துக்காட்டு “அத்தி, ஆல்” முதலிய மரங்கள் ஆகும் என்பர். உணவாகக் கொள்ளப்படும் அத்திக்காயின் பிஞ்சு, முட்டை வடிவானது. இதற்குள்ளே அத்திப்பூக்கள் நிறைந்திருக்கும். இப்பூக்களைத் தன்னகத்தே கொண்டிருந்தலின் அத்திப்பிஞ்சு - கோளி எனப்படும் தாவரவியல் இதனை ‘ரிசப்டகிள்’ என்று கூறுவர்.
அத்திக்காயின் உள்ள 4 வகையான பூக்கள் உள்ளன. ஆண் பூ, பெண் பூ, மலட்டுப் பூ என்பன. மலட்டுப்பூக்களில் ஆண் மலட்டுப்பூவும், பெண் மலட்டுப் பூவும் ‘ஃபைகஸ் காரிக்கா’ எனும் சிற்றினத்தில் காணப்படுகிறது.
“அதலத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பழற் தூங்க” என் நற்றிணையில் காணலாம்.
அத்திமரம் ஆற்றங்கரையினில் வளரும். இதன் கிளைகள் வெண்ணிறமானவை. இதன் கனி மிக மென்மையானது என்றும் நண்டு மிதித்த இதன் கனி குழையும் என்றும் கூறும் குறுந்தொகை.
“ஆற்றயல் எழுந்து வெண் கோட்தவத்து
எழுகுளிறு மிதித்த ஒரு பழம் போல” என குறுந்தொகை பாடலில் காணலாம். இதன் பேரினத்தில் எறத்தாழ 700 சிற்றினங்கள் உலகில் உள்ளன என்பர். தமிழ் நாட்டில் 27 சிற்றினங்கள் உள்ளன எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பெருமரங்களும், கொடியும் உள்ளன என்று சிறப்பு.
சுக்கிரன்
மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பாதையில் 25கி.மீ தொலைவில் உள்ளது கஞ்சனூர். இது சுக்கிரனுக்கு உரிய தலமாகும். சூரியனார் கோவிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது 64 கலைகளுக்கும் அதிபதி, காதல், சுகபோகம் இவற்றின் அதிபதி. வாகனங்களுக்கும் அதிபதி, ஜனன உறுப்புக்களைக் காப்பவர். சிற்றின்பத்தை நுகர வைப்பவர். உடலில் வீரியம் அணிகலன்கள், ஆபரணம் ஆகியவை இவரது அருள் இருந்தால் மட்டுமே சேரும்.
சுக்கிரபகவான் நவக்கிரகங்களுள் 6-ஆம் இடத்தைப் பெறுபவர்.
அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்
2009/04/17 புதன் பகவான் கோவிலில் வணங்கப்படும் நாயுருவிச் செடி
2009/04/10 அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும் கருங்காலி மரம்
2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்
2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி
































