» Disease relief plants - Akbar Kausar .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 10 Apr 2009

Disease relief plants - Akbar Kausar

akbar-kausar.jpgமணிமேகலை பிரசுரத்தின்…
நோய்களை குணப்படுத்தும் இந்துக்கோவில் மரங்கள்

- வாணியம்பாடி டாக்டர் அக்பர் கவுஸர்

அங்காரக பகவான் கோவிலில் வணங்கப்படும்
கருங்காலி மரம்()

கருங்காலி
DIOSPHYRUS EBENUM, KOENIG ; EBENACEAE
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் - பாடல்
அடையார் புரம்மூன்றும்
அனல்வாய் விழவெய்து
மடையார் புனலம்பர் மாகா
ளம்மேய
விடையார் கொடியெந்தை
வெள்ளைப் பிளைசூடும்
சடையான் கழலேத்தச்
சாரா வினைதானே.

செவ்வாய்க் கிரகத்தை இந்து சமுதாய மக்கள் அங்காரக பகவான் என்று அழைக்கிறார்கள். இந்தக் கிரகம் சுகாதார அமைச்சராக இருந்து நம்மை ஆட்சி புரிகிறது. சகல வியாதிகளையும் குணமாக்குகிறது. கஷ்ட நஷ்டத்தில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

மேஷம், விருச்சிக ராசி உள்ளவர்கள் மீது ஆட்சி புரிகிறது. இந்தக் கிரகம் கருங்காலி மரத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு உள்ளது. இந்தக் கிரகத்தின் நன்மைகள் பெறவும், கெடுதல்களில் இருந்து விடுதலை பெறவும், செவ்வாய்க் கிரகத்திற்கு கோவில் அமைத்து அதற்குள் அங்காரக பகவான், சக்தி தேவி அம்மன் சிலைகளை வைத்து, கருங்காலி மரத்தை நட்டும் ஒரே சமயத்தில் மூன்றையும் வணங்குவார்கள். கருங்காலி மரம் சகல நோய்களையும் குணப்படுத்தும் என்பார்கள்.

வேலூர் மாவட்டம் பொன்னை அருகே விநாயகபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீநவக்கிரக கோட்டை ஆலயத்தில் அங்காரக பகவானுக்குத் தனி கோவில் அமைத்து, சக்தி தேவியுடன் கருங்காலி மரத்துக்கும் தினசரி காலை, மாலை இரண்டு வேளைகளில் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்து செல்கின்றனர். இதனால் அவர்களின் உடல நலம் குணம் பெறுகிறது என்று நம்புகின்றனர்.

உயிர் காக்கும் மரங்கள் கோவில்களில் பாதுகாக்கப்பட்டால் அது மக்களின் பார்வையில் படும். மரங்களும் பாதுகாப்பாக இருக்கும். அவை தேவைப்படும் போது முறையாகவும் பயன்படுத்துவார்கள் என்று கருதப்பட்டது. அவைதான் பின்னர் கோவில் மரங்களாக உருவெடுத்தது.

கருங்காலி மரம் பல கொடிய நோய்களைக் குணமாக்குகின்றது என்று வேதங்களில் கூறப்பட்டிருக்கின்றது. இம்மரத்தின் அடித்தண்டு, வேர்ப்பட்டை, பூக்கள், பிசின் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். மரப்பட்டையை மனநோய், கண் நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தருவார்கள்.

மரத்தூள் - ஜுரம், பேதி, வயிற்று நாக்குப்பூச்சி, வலி நீக்கம், உடல் பலவீனம், வெண்குஷ்டம், குஷ்டம், தோல் அரிப்பு, அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றைக் குணமாக்குகின்றது. சீமைக்காசிக்கட்டி என்னும் இதன் பிசினை வெற்றிலை பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணைக் குணமாக்குகிறது. கருங்காலி மரம் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர் போன்ற நோய்களில் இருந்து காப்பாற்றுகின்றது என மூலிகை நூல்கள் கூறுகின்றன.

இப்போதெல்லாம் கிட்னி ஃபெயிலியர், ஹார்ட் ஃபெயிலியர், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய்கள் இருந்தால் இந்து மக்கள் இறைவனை வணங்குவதுடன், கருங்காலி மரத்தையும் வணங்கி அதை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். மருத்துவர் கருங்காலி மரத்திலிருந்து மருந்தைத் தயாரித்துக் கொடுப்பார். இறைவன் குணம் அளிப்பான். குணம் அளித்ததற்கு நன்றி செலுத்தும் வகையில் மரங்களையும் நவக்கிரகங்களையும் இந்து மக்கள் வணங்கத் தொடங்கினார்கள்.

பழங்காலத்தில் உடல் நலம் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஒன்று மூலிகை மருந்து தருதல், இரண்டாவது இறைவனிடம் முறையிட்டு அவரின் அருளாசி பெறுவது. இப்போதெல்லாம் சிறுநீரகங்கள் பழுதடையும் நிலையில் சிறுநீரகச் சிகிச்சை நிபுணர்கள்தான் பகவானாகவும், மருத்துவராகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது தெய்வ வாக்கு என்று மக்களை நம்ப வைக்கின்றனர்.

சிறுநீரக மாற்று சிகிச்சை மறைந்த முதல்வர்கள் மாண்புமிகு எம்.ஜி.ஆர் அவர்கள், மாண்புமிகு ஜானகி அம்மாள், நடிகை திருமதி பண்டரிபாய், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் போன்றவர்களைக் காப்பாற்ற முடியாத நிலையில், மற்றவர்களை எப்படி காப்பாற்றப் போகின்றார்கள் என்பது புரியவில்லை. அறுவை சிகிச்சை டயாலிஸிஸ் அறிமுகமாவதற்கு முன் இந்திய மக்கள் மரங்களையும், இறைவனையும் நம்பி இருந்தார்கள் என்பது உண்மை.

யுனானி மருத்துவத்தில் கருங்காலி மரத்தின் பூக்கள், இலைகள், வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

செவ்வாய்: மாயவரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தூரத்திலும் உள்ளது வைத்தீஸ்வரன் கோயில். இங்கு மூல தெய்வமாக ஸ்ரீவைத்தியநாத சுவாமி உள்ளார். இது செவ்வாய்க்கு உரிய தலமாகும். இதன் பழைய பெயர் புள்ளிருக்கு வேளூர். ஜடாயு வீழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இன்னும் கூட ஜடாயு குண்டம் கோவிலில் உள்ளது.

வேதகாலத்தைச் சேர்ந்த மரம் ஒன்றும் இங்கே காணலாம். அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் எனப் பல பெயர்களால் அழைக்கப்படும். நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன், உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழிநடத்துபவன், விளையாட்டு வீரர்களுக்கு அருள்பவன், வழிபடுவோரின் விருப்பத்தை நிறைவேற்றுபவன், தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படைத்தளபதிகள், தீயைப்போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோரின் நாயகன் ஆவார்.

தலவிருட்சம் கொண்ட திருக்கோயில்: திரு அம்பர் மாகாளம் எனும் திருக்கோவிலின் தலவிருட்சமாக கருங்காலி வணங்கப்படுகிறது.

சங்க இலக்கியம்: கபிலர் கூறும் சிறுமாரோடம் என்பதற்குச் ‘செங்கருங்காலிப்பூ’ என்று உரை கண்டார் நச்சினார்க்கினியர். ‘மாரோடம்’ என்பது இதன் பெயர். இது தழைத்திருப்பதைக் குறிக்கப் ‘பசு மாரோடம்’ எனவும், இதன் மலர் மணத்தைக் குறிக்க ‘நறு மாரோடம்’ எனவும், மலரின் அளவைக் குறிக்க ‘சிறு மாரோடம்’ எனவும் புலவர்கள் இதனை வியந்து பாடியுள்ளனர். இது பெரிய மரம், உயரமாக வளரும். இதன் மலர் மஞ்சள் நிறமானது. சிறந்த நறுமணம் உடையது.

சங்க இலக்கியப் பெயராக சிறு மாரோடம், மாரோடம் எனவும், உலக வழக்குப்பெயராக கருங்காலி, ஆச்சாமரம், மாரோடம் எனவும், ஆங்கிலப் பெயராக ‘ரோஸ்வுட்’ எனவும் அழைக்கப்படுகிறது.

‘குல்லை பிடவம் சிறுமாரோடம்’ என குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிட்டுள்ளார். பாலை பாடிய பெருங்கடுங்கோ ‘நறுமோரோட மோடு’ என்பார். நற்றிணை, ஐங்குறு நூறு ஆகியவையும் சிறிப்பித்து பாடியுள்ளது. இம்மலர் நறுமணம் உடையது. இதனை மகளிர் கூந்தலில் அணிவர்.இதன் நறுமணம் விவரிக்கும் பாடல் ஒன்று நற்றிணையில் காணலாம்.

‘உலகம் படைத்த காலம் முதலாக பொருளீட்டி வாழ விரும்புவோர், தம்மை அடைக்கலம் புகுந்தாரைக் காத்து உடனுறைந்து அவளது கூந்தலின் பெரும் பயன் கொள்ளாது மறுத்தனர் போலும். அவளது கதப்பில் நறுமணம் வீசுகின்றது. வேனிற் காலத்துபூத்த மோசி மல்லிகை மலரையும், பாதிரியின் சிறந்த மலரையும் மாரோடத்தின் நறிய மலரையும் கொய்து, ஒருங்கே அடைத்து வைத்திருந்த பூஞ்செப்பைத் திறந்து வைத்தாற் போலும் நறிய மணம் வீசும் அவளின் கூந்தலில் முகம் புதைத்து நுகர்ந்து மகிழும் பெரும் பயனைத் துறக்க எண்ணினார் போலும்’ என்கிறாள்.

‘உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர் கொல்லே சிறந்தசி னோரே’ எனத் தொடங்கி
‘அரும் பெறற் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்துறை மரபின் பொருள் படைத்தாரோ” என முடியும் பாடல் நற்றிணையில் காணலாம்.

இக்கருங்காலி மரம் மிக வலிமையானது. வேலைபாடுகளுடன் கூடிய மரவேலைக்குப் பெரிதும் பயன்படுவது. இதன் மலர் பசிய மஞ்சள் நிறமாக இருக்கும். ‘டையோஸ் பைரஸ்’ என்னும் இப்பேரினத்தில் 24 சிற்றினங்கள் தமிழ்நாட்டில் வளர்கின்றன. பெரும்பாலும், இவை வறண்ட மலைப் பகுதிகளிலும், பசுமை காடுகளிலும் வளரும் மரங்களும், பெரும் புதர்களும் ஆகும். பல சிற்றினங்களின் மரங்கள் மரவேலைக்குப் பயன்படுகின்றன.

அக்பர் கவுஸரின் முந்தைய கட்டுரைகள்

2009/04/03 சந்திர பகவான் கோவிலில் வணங்கப்படும் முருக்கன் மரம்

2009/03/27 சூரிய பகவான் கோவிலில் வணங்கப்படும் வெள்ளை எருக்கன் செடி

Related Posts Title


Leave a Reply