பிறர் கையை ஏந்தாமல் நித்தம் உழைத்து உண்ணும் அனைத்து கைகளையும் குலுக்கி உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பிறர் கையை ஏந்தாமல் நித்தம் உழைத்து உண்ணும் அனைத்து கைகளையும் குலுக்கி உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுங்கள்: ஒபாமாவுக்கு, வைகோ இ-மெயிலில் கடிதம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மின் அஞ்சலில் (இ-மெயில்) அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இனப்படுகொலை தாக்குதல்களை, கண்ணீருடனும், வேதனையுடனும் தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இருண்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்கள் வாழ்வில், அமெரிக்காவின் உடனடித்தலையிடு தான் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாக தெரிகிறது. 1977-ம் ஆண்டில், அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
அமெரிக்காவின் மசாசூசெட், மாநில சட்டமன்றத்தில் மேரி எலிசபெத்ஹோவே, ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து மிக முக்கியமான தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து, மசாசூசெட் மாநில ஆளுநர் எட்வர்டு ஜெ கிங், 1977 மே மாதம் 22-ம் நாளை 8216;தமிழ் ஈழம் நாள்8217; என்று அறிவித்தார்.
இலங்கையில் இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என்று தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, விடுதலைப்புலிகள் உடனடியாக போர் நிறுத்தம் அறிவித்து விட்டனர். ஆனால், திட்டமிட்டு இனப்படுகொலையை நடத்துகின்ற இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தவில்லை. இலங்கை அரசின் தலைவர் மகிந்தா ராஜபக்சே, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறார்.
விமான குண்டுவீச்சையும், கனரக ஆயுத தாக்குதல்களையும் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27-ந் தேதி அவர் சொன்னார். ஆனால் அன்று மாலையிலே விமானங்கள் குண்டுகளை வீசியதிலும், 27, 28 ஆகிய இரண்டு நாள்களிலும் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
நாற்பதுகளில் யூதர்களை நாஜிகள் இனப்படுகொலை செய்தது போல், இன்று இலங்கையில் தமிழ் இனத்தையே இலங்கை அரசு கரு அறுத்து வருகிறது. இந்த பிரச்சினையில் தாங்கள் நேரடியாக உடனே தலையிட்டு உலகின் தொன்மையான பழங்குடிகளுள் ஒருவரான தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தேர்தலுக்காக பஸ் கட்டணம் குறைப்பதா?: ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதே சட்டத்தையும், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. அவை நடைமுறையில் இருக்கும்போது அரசின் நடவடிக்கைகள் பற்றியோ, திட்டங்கள், உதவிகளை குறித்தோ நாளேடுகளில் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால் தி.மு.க. அரசு அதை அப்பட்டமாக மீறி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று சொல்லிக்கொண்டே மிதவை பேருந்து, சொகுசு பேருந்து, சிறப்புப் பேருந்து, இடையில் நிற்காத பேருந்து என்ற எல்லாம் பல்வேறு பெயர்களில் பேருந்துகளை இயக்கி சாதாரணக் கட்டணத்தை விட மூன்று- நான்கு மடங்கு கட்டணத்தை உயர்த்தின.
இன்றைக்கு திடீரென்று அனைத்து வகை பேருந்துகளுக்கும் ஒரே வகையான கட்டணம் என்ற கட்டணக் குறைப்பை சத்தமின்றி செயல்படுத்தி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகின்ற இன்னொரு ஒரு கபட நாடகமாகும். தேர்தலுக்காக கட்டணத்தைக் குறைத்து, தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள்.
தி.மு.க. அரசின் இந்த மோசடி வேலையில் மக்கள் ஏமாறமாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற திடீர் நடவடிக்கைகள் தி.மு.க.வின் தோல்வியை தடுத்து நிறுத்த உதவாது.
இப்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றின்பின் ஒன்றாக காலில் போட்டு மிதிப்பதை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இதர மாநிலங்களில் 8216;உம்8217; என்றால் குற்றம் என்று நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்ற தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இந்த மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறி கொண்டிருக்கிறது.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
இரயிலை கடத்தியவன் தற்கொலை படையை சேர்ந்தவனாக இருக்கலாம்:
இல. கணேசன் கணிப்பு
மர்ம நபர் இரயிலைக் கடத்தி விபத்து ஏற்படுத்திய சென்னை சம்பவம் குறித்து பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் இல. கணேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
8216;இதுநாள் வரையில் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ போன்ற வாகன கடத்தல் மட்டுமே அறிந்த தமிழகம், இப்போது ஒரு ரயிலையே கடத்தும் அளவிற்கு முன்னேறியுள்ளது.
ஒரு ரயிலை இயக்குவதற்கு நிபுணத்துவம் தேவை. ஆகவே, அந்த ரெயிலை கடத்தியவன் ரயிலை இயக்குவதற்கான நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், அந்த விபத்தில், அவன் மரணமடைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவன் ஒரு தற்கொலைப்படையைச் சார்ந்தவனாக இருக்கலாம்.
அவனுக்கு அந்த ரெயிலை இயக்குவதற்கான சாவி எப்படிக் கிடைத்தது? ஒருவேளை அந்த சாவி ரயிலிலே விட்டுவிட்டு வந்திருந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் யார்? இதற்கான விடைகளை நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழகம் மேம்போக்காக அமைதிப் பூங்காப்போல் தோற்றமளித்தாலும், இங்கே தீவிரவாதம் தலைதூக்குவதற்கான அறிகுறியாகவே இந்த சம்பவத்தை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இறந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் காலத்தே வழங்க வேண்டும்.
மேலும் தரம் குறைந்த, ஊழலில் போடப்பட்ட தண்டவாளங்களினால் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட ரயில் விபத்து சம்பவங்கள் நடைப்பெற்றுள்ளதை நினைவு கூர்ந்து, இது போன்ற சம்பவங்கள் ரயில் வண்டி தொடர் போல் இனியும் நிகழாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட வேண்டும்.
இவ்வாறு இல. கணேசன் கூறி உள்ளார்.
மரத்தரையில் பதிந்த சாமியாரின் பாதச்சுவடுகள்: சீன அதிசயம்: விடியோ

நம்பினால் நம்புங்கள் கடவுளை வணங்கிய அடையாளத்தை யாராலாவது ஏற்படுத்த முடியும்? முடியும். நம்மூர் பெண்கள் அடிப்பிரதட்சணம் செய்வதால், சில கோயில்களில் அதன் அடையாளங்கள் இருக்கும். அவை பல பெண்கள் பல முறை நடந்ததால் ஏற்பட்டவை.
ஆனால் சீனா சாமியார் ஒருவர் தன்னுடைய இரு பாதச்சுவடுகள் மரப்பலகையில் அப்படியே பதியும் அளவுக்கு ஆண்டவனை வணங்கியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
சீனாவில் டோங்ரன் என்ற ஊரில் உள்ள புத்தர் ஆலயத்தில்தான் இந்த அதிசயம். அங்குள்ள மரத்தரையில் 70 வயது சாமியாரான ஹுவா சீயின் இரண்டு பாதங்களும் பதிந்து போயிருக்கின்றன. கடந்த 20 வருடங்களாக அவர் இங்குவந்து வணங்குவதால் இப்படி நேர்ந்துள்ளது.
அந்த மரத்தரையில் சுமார் ஒன்றரை இன்ச் ஆழத்திற்கு அவருடையப் பாதச்சுவடுகள் பதிந்துபோயிள்ளன.
தொடக்க காலத்தில் தினசரி 3 ஆயிரம் முறை விழுந்து விழுந்து தொழுவாராம். தற்போது, வயோதிகம் காரணமாக அது தினசரி 1000 முறை என்று குறைந்திருக்கிறதே தவிர அவருடைய ஆன்மிக ஈடுபாடு குறையவேயில்லை.
பெளத்த மதக்கோட்பாட்டின்படி நிர்வாண நிலையை அடைய தியானமும் தொழுதலும் தேவைதான் என்றாலும், தினசரி 3 ஆயிரம் முறை தொழல் என்பது மிகவும் அதிகபட்சம் என்றும் சமானியர்களால் செய்ய முடியாதது என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் ஹுவா சீ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தொழுதலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருடைய இந்த சிறப்புத் தொழுகையால் அந்தக் கோயில் அனைவர் கவனத்தையும் கவர்ந்து இழுக்கிறது. தினசரி நூற்றுக் கணக்கான மாணவர்களும், பக்தர்களும் கோயிலுக்கு வந்து புத்தரை தரிசிப்பதுடன் ஹுவா சீ யின் பாதங்கள் பதிந்து காட்சியளிக்கும் மரத்தரையை ஆச்சரியமாக பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
ஹுவா சீயின் அன்றாட செயல்களில் வேறுபாடு எதுவும் கிடையாது. காலையில் சூரியோதயத்திற்கு முன்பு எழுந்திருருப்பவர் குளித்துவி்ட்டு நேராக கோயிலை நோக்கி நடைபோடுகிறார். வழக்கமாக தான் விழுந்து வணங்கும் இடத்தில் தன் பாதங்களைப் பதித்து
வணங்கத் தொடங்குகிறார். வணங்கி முடித்தவுடன் கோயிலை ஒரு சுற்று சுற்றுகிறார். பிறகு தொழவேண்டும் என்னும்போது மீண்டும் சென்று அதே இடத்தில் வணங்குகிறார். இப்படியே அவர் வணங்கியபடியே இருக்கிறார்..
8221;2 ஆயிரம், 3 ஆயிரம்னு வணங்கிக்கொண்டு இருந்தேன். இப்பல்லாம் ஆயிரம் முறை தான் தொழ முடிகிறது8221; என்று வருத்தம் தொனிக்க கூறும் ஹுவா சீ, 8221;இந்தக் கோயிலை புனரமைத்துள்ளேன். கோயிலைச் சுற்றி சுற்றி வருகிறேன். அதனால் இறந்த பிறகு என் ஆன்மா சிரமப்படாது8221; என்கிறார் நம்பிக்கையுடன்.
ஹுவா சீ ஒரு பாரம்பரிய சீன வைத்தியரும்கூட. கடவுளை வணங்குவதையும், கடவுளின் பிள்ளைகளான மக்களின் நோய்களைத் தீர்ப்பதிலும் இவர் சுகம் காண்கிறார்.
இப்படியும் ஆட்கள் இருப்பதால்தான் பூமி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறதோ!
நடிகையாக மாறிய மருத்துவ மாணவி தனன்யா

குங்குமப்பூவும் கொஞ்சம்புறாவும் திரைப்படத்தில் பாவாடை, சட்டைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போனவரா இவர் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு கிளாமரில் பின்னுகிறார் தனன்யா.
முதல் படத்தில் கிராமத்துக் கிளியாக வந்தாலும் தனன்யா ஒரு அல்ட்ரா மாடர்ன் பொண்ணுங்க. சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரி ஒன்றில் 4ஆம் ஆண்டு பயிலும் மாணவி என்றால் நம்ப முடியலைங்க.
மருத்துவராகப் போகிறவர் எப்படி சினிமாவில்? ஸ்டெத் பிடிக்காமல் அவர் சொன்னது இது.
8221;கல்லூரியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். கலைநிகழ்ச்சி ஒன்றில் என்னைப் பார்த்துவிட்ட இயக்குநர் ராஜமோகன் (இயக்குநர்களுக்கு இதே வேலையாப் போச்சு) குங்குமப்பூவும் கொஞ்சும்புறவாவில் நடிக்க முடியுமா எனக் கேட்டார் (கேட்டுட்டாரா?).
ஆனால் உடனே ஒத்துக்கலை(அதானே). டாக்டராகறது தான் லட்சியம்னு சொன்னேன். அவர் விடலை. மீண்டும் கேட்டார். அப்பா அம்மாவும் டாக்டருங்க அவங்க ஒத்துக்கிட்டா நடிக்கிறேன்னேன்.
இயக்குநர் என்னிடம் கதை சொன்னார். நான்தான் அதுக்குப் பொருத்தம்னு வலியுறுத்தினார். எங்க வீட்டிலும் சம்மதிச்சாங்க.
முட்டம் மற்றும் கடற்கரை ஓர கிராமங்களில் படப்பிடிப்பு நடந்தது. அந்த மக்களிடம் பழகியது மறக்கமுடியாத ஒன்று. முதல் படத்தில் கனமான கதாபாத்திரம் (எவ்வளவு கனம்ங்க?) கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ரசிகர்கள் எனக்குக் கொடுத்திருக்கும் வரவேற்பு உற்சாகம் தருகிறது(வந்தாரை வாழ வைப்பவர்களாயிற்றே நாங்கள்). நல்ல கதை (நல்ல கதை!) நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் குணச்சித்திர வேடங்கள் அமைந்தால் மட்டுமே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் (இப்படிச் சொல்லிட்டா எப்படி?).
இதுதாங்க மருத்துவராகப் போகும் ஸ்வாதி சினிமா நடிகை தனன்யாவாக மாறியக் கதை. இனி, தனன்யாவைப் பார்த்தாலே போதும் நோய் பறந்துடும்ங்க!
தேர்தலில் வெற்றிபெற கருணாநிதி- ராஜபக்சே சதி: ஜெயலலிதா போட்ட சூப்பர் குண்டு
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக கருணாநிதி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்
நாமக்கல்லில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
8221;நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதியும், ராஜபக்சேவும் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ராஜபக்சேவை தொடர்பு கொண்டு கருணாநிதி பேசியுள்ளார். இலங்கைப் பிரச்னை காரணமாக மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு சாதகமான சூழலும், வெற்றி வாய்ப்பும் மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிமுக-வின் பேச்சை கேட்கும் மத்திய அரசு அமைந்தால் இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழர்கள் நலன்காக்க நடவடிக்கை எடுப்பார். ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார். அவரது முடிவு உறுதியானதாக இருக்கும். தன்னலத்துக்காக.. இலங்கைக்கு இந்திய ராணுவம் வராமல் தடுக்க வேண்டுமெனில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான மே 13-ம் தேதி வரை உண்மையாக போர்நிறுத்தம் செய்யுங்கள். அவ்வாறு செய்தால் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் எனது பேச்சை கேட்கும் மத்திய அரசு அமையும். அப்போது உங்கள் விருப்பம்போல இலங்கையில் அனைத்து வேலைகளையும் செயல்படுத்தலாம்.
எனவே, தேர்தலில் நீங்கள் எனக்கு உதவ வேண்டும். தேர்தலுக்குப் பின் நான் உங்களுக்கு உதவுவேன் எனக் கூறியுள்ளார் கருணாநிதி.
தனது பதவி பறிபோகிறது என்றால் எதையும் செய்யத் துணிபவர், தன்னலத்துக்காக ஆட்சி நடத்துபவர்தானே கருணாநிதி. எனவே, வருகிற தேர்தலில் கருணாநிதி மீண்டும் தலைதூக்க முடியாதபடி ஒரு முடிவை மக்கள் தர வேண்டும்.
அவர் நடத்திய உண்ணாவிரத நாடகத்தால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இலங்கையில் இன்னமும் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், தங்கள் முயற்சியால் போர் நின்றுவிட்டதாக கருணாநிதியும் மத்திய அமைச்சர் சிதம்பரமும் கூறிவருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக -காங்கிரஸ் மேற்கொண்டுள்ள மோசடி செயல்கள், தேர்தல் களத்தில் அவர்களுக்கு எந்தப் பயனையும் தராது.
நாடகம் ஆடுவதிலும், அரசியல் ஆதாயம் தேடுவதிலும் காட்டும் அக்கறையை, தமிழர்களின் துயரைப் போக்குவதில் இக் கட்சிகள் காட்டவில்லை.
காங்கிரஸ் தேய்ந்து கொண்டே வருகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகின்றனர்.
தனி ஈழம் அமைப்பது தொடர்பாக நான் கூறிய கருத்து தேச விரோதமானது என்கின்றனர். வங்கதேசத்தில் இந்திரா காந்தி தலையிட்டது, இலங்கைக்கு ராஜீவ்காந்தி ராணுவம் அனுப்பியது எந்த சட்டத்தின் கீழ் வருமோ அதே வகையில், இப்போதும் செயல்படலாம் என்பதுதான் எனது கருத்து8221; என்றார் ஜெயலலிதா.
சென்னையில் பயங்கரம்: இரயிலைக் கடத்தி விபத்து

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கடத்தப்பட்டு தறிகெட்டு ஓடிய மின்சார ரயில், வியாசர்பாடியில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.11 பேர் காயமடைந்தனர்.
சென்னை சென்ட்ரல்- எம்.எம்.சி. வளாகத்தில் இருந்து திருவள்ளூருக்குச் செல்லும் புறநகர் மின் ரயில் புதன்கிழமை அதிகாலை 12-வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக நின்றிருந்தது.
இந்த ரயிலின் என்ஜின் அருகே அதன் ஓட்டுநர் கருணாநிதி பிளாட்பாரத்தில் நின்றவாறு, பயணிகள் ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். ரயிலில் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் இருந்தனர் அப்போது நேரம் அதிகாலை 4.55.
அப்போது, திடீரென ரயில் நகரத் தொடங்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர் கூக்குரலிட்டார். அதே நேரத்தில், ஒலி பெருக்கியிலும் ரயிலை இயக்குவது யார், உடனடியாக ரயிலை நிறுத்துங்கள் என்று எச்சரிக்கப்பட்டது.
ஆனால், ரயிலில் ஏறிய மர்ம நபர், லீவர் விசையை தொடர்ந்து இயக்கியதால், கண் இமைக்கும் நேரத்தில் ரயில் தனது உச்சக்கட்ட வேகத்தை எட்டியது.
உடனே, திருநின்றவூர் வரை இவ் வழித்தடத்தில் சிவப்பு சிக்னல்கள் ஏற்றப்பட்டன.
அதிகாலை நேரத்தில் ரயில்வே அதிகாரிகள் மிகுந்த பரபரப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர். ரயிலை நிறுத்த என்ன வழி என்று செய்வதறியாமல் தவித்தனர்.
அசுர வேகத்தில் சென்ற இந்த ரயில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தை நெருங்கியது.
ஏற்கெனவே, அரக்கோணத்தில் இருந்து 4 காலி டேங்கர்களுடன் பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் டீசல் நிரப்புவதற்காக வந்த ஒரு சரக்கு ரயில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில் சிக்னலுக்காகக் காத்திருந்தது.
இந்த ரயிலின் என்ஜினில் இருந்த அதன் ஓட்டுநர் பிரதீப் குமார், தூரத்தில் மின் ரயில் வேகமாக வருவதை அறிந்து, பிளாட்பாரத்தில் குதித்து பாதுகாப்பான இடத்துக்குத் தப்பியோடினார்.
அதே நேரத்தில் கட்டுப்பாடில்லாத வேகத்துடன் வந்த மின் ரயில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் இரு ரயில்களின் என்ஜின்களும் மோதி தீப்பிடித்தன.
மேலும் மின் ரயிலின் 3 பெட்டிகள் உருக்குலைந்து சேதமுற்றன. இதர பெட்டிகளும், சரக்கு ரயிலின் டேங்கர்களும் தடம் புரண்டன.
மின் ரயிலில் இருந்து, உயிர் தப்பிய பயணிகள் அனைவரும் கீழே குதித்து தப்பியோடினர்.
விபத்தில் சிக்கி இறந்த ஒருவர், சீசன் டிக்கெட் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஆவடி அருகே உள்ள மேட்டூர் நந்தவனம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த எம். மோகன் ராஜ் (28) என்பது தெரியவந்தது.
விபத்தில் காயமுற்ற 11 பேரின் விவரம்:
வியாசர்பாடி கமலா (45), பெரம்பூர் ஆறுமுகம் (38), முருகேசன் (40), இவரது மனைவி சண்முகவல்லி (30), கொடுங்கையூர் கோமதி (46), பம்மல் மணி (53), மயிலாப்பூர் டி.எஸ். சங்கரி (56), வில்லிவாக்கம் ஏழுமலை (46), ஜெயவேல் (25), ஆழ்வார் திருநகர் கிறிஸ்டோபர் (54) (சரக்கு ரயிலின் கார்டு,). கண்ணதாசன் நகர் பூங்குழலி (18).
இவர்களில் 10 பேர் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உருக்குலைந்த ரயிலின் ஒரு என்ஜின், வியாசர்பாடி ரயில்நிலைய பிளாட்பாரத்தில் எரிந்து சேதமுற்றது. சம்பவம் நடந்த பகுதியே போர்க் களம் போல காணப்பட்டது.
இதனால், ரயில்வே துறைக்கு ரூ. 50 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் (பொறுப்பு) எம்.எஸ். ஜெயந்த் புதன்கிழமை கூறியதாவது:
சென்ட்ரலில் இருந்து மின் ரயிலை ஓட்டிச் சென்றவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா அல்லது இதில் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் இல்லை. இவரது சடலம் சேதமுற்ற மின் ரயில் என்ஜினுக்குப் பின் உள்ள பெட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த 4 பேருக்கு தலா ரூ. 15 ஆயிரமும், காயமுற்ற 11 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரமும் நிவாரண நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது ரயில்வே துறை.
இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை முடிந்த பின், உயிரிழந்தோரின் குடும்பத்தினர் மனு செய்தால், ஆணையம் அதை பரிசீலித்து தலா ரூ. 4 லட்சம் வழங்கும்.
விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்து வியாழக்கிழமை காலையில் ரயில் சேவை சீராகும் என்றார் ஜெயந்த்.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில்

பெரிய கோயில் என்று சிறப்பு பெயரோடு அழைக்கப்படுகிறது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இதன் சிறப்புகளைப் பற்றி அறிவோம்.
சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட ராஜ ராஜ சோழன், அவருக்கு பிரமாண்டமாக கோயில் அமைக்க நினைத்தான். அதன்படி எழுந்ததுதான் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில். இந்த கோயில் கட்டுவதற்கு வெளிமாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது.
கி.பி. 1004ல் கோயில் கட்டும்பணி ஆரம்பமா ஆறே ஆண்டுகளில் சிறப்பாக முடிந்து கி.பி. 1010ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக ராஜகோபுரம் உயரமாகவும், மூலஸ்தான விமானம் உயரம் குறைத்தும் கட்டப்படுவது வழக்கம். சோழர்களின் கட்டடக்கலை முறைப்படி, ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் பெரிதாகவும் கட்டப்படுவது மரபாக இருந்தது. அதுபோல், தஞ்சாவூர் கோயில் விமானம் 216 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.
தலைசிறந்த கட்டடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் தமிழகத்திலேயே மிக உயரமானது. அதன் உச்சியில் உள்ள பிரம்ம மந்திரக்கல் 80 டன் எடையுள்ளது. இந்த கல்லை விமானத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
கும்பகோணம் அருகிலுள்ள சாரபள்ளம் என்ற ஊர் (50 கி.மீ.)வரை மணல் கொட்டி, பாலம் போல் அமைத்து, யானைகளைக் கொண்டு, பிரம்ம மந்திரக் கல்லை கட்டி இழுத்து கொண்டு போய் கோபுரத்தின் உச்சியில் வைத்தார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தார்களாம். இக்கோயிலின் அமைப்பைப் பார்த்து, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுனர்கள் வியப்பின் உச்சிக்குச் செல்கின்றனர்.
லிங்கங்களில் மிகப் பெரியது தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம். இதனாலேயே இக்கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படுவதுண்டு.
மூலவர் பிரகதீஸ்வரர் அம்மன் பெரியநாயகியுடன் அருள் செய்கிறார். சிவலிங்கத்தில் பாணத்தின் உயரம் 12.5அடி. சுற்றளவு 23 அடி. ஆவுடையார் 55 அடி சுற்றளவு. இந்த லிங்கம், மத்தியபிரதேச மாநிலம், நர்மதா நதிக்கரையிலுள்ள ஒரு மலையிலிருந்து கொண்டு வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் உடுத்தும் வேட்டியின் நீளம் 35 மீட்டர். பக்தர்கள் வஸ்திரம் சாத்த விரும்பினால், இதற்கென ஆர்டர் கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஒன்பது அடி உயரமுடைய அம்மன் பெரியநாயகி நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருளுகிறாள்.
சோழர்களின் வெற்றிக்குரிய தெய்வம் துர்க்கை. இங்கு துர்க்கையின் தளபதியான வாராஹிக்கு சன்னதி உள்ளது. கோயிலில் நுழைந்ததும் இடதுபுறம் இவளது சன்னதி உள்ளது. சப்த மாதாக்களில் பிரதானமானவள் வாராஹி. ராஜராஜ சோழன் இந்த அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து விட்டுத்தான் எந்தச் செயலையும் ஆரம்பிப்பான்.
இத்தலத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் ராஜராஜ சோழன் விழா, இந்த அம்மனுக்கு பூஜை செய்த பின் தான் தொடங்குகிறது.
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடைகிறார்கள்.
பெரிய நந்தி: இங்குள்ள நந்தி 12 அடி உயரம், 19.5 அடி நீளம், 9 அடி அகலம், 25 டன் எடையுடன் பிரமாண்டமாக அமைந்துள்ளது. இதை அமைப்பதற்காக திருச்சி அருகிலுள்ள பச்சைமலையிலிருந்து கல் கொண்டு வரப்பட்டது.
மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கு சன்னதி உள்ளது. கருவூர் சித்தர் இப்பகுதியில் தியானத்தில் இருந்துள்ளார். இவரது அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. தஞ்சை பெயர்க்காரணம்: புராண காலத்தில் தஞ்சகன், தாரகன், தண்டகன் என்ற மன்னர்கள், தங்களை யாராலும் வெல்ல முடியாது என்ற வரத்தை சிவனிடம் பெற்றிருந்தனர். இதனால் தேவலோகம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டி அதிகாரம் செலுத்தினர். வரம்பு மீறிய இவர்களின் செயல்கண்ட சிவன், திருமாலையும், காளியையும் அனுப்பி அவர்களை வதம் செய்தார். இருப்பினும், சிவபக்தர்களாக இருந்த அவர்களது பெயர் விளங்கும்படியாக, தஞ்சகனின் பெயரால் தஞ்சாவூரும், தாரகனின் பெயரால் தாராசுரமும், தண்டகனின் பெயரால் தண்டகம்பட்டு என்ற ஊரும் உருவானது.
2009/01/30 குற்றாலநாதர் திருக்கோயில்
2008/12/12 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
2008/10/24 கயிலையே மயிலை, மயிலையே கயிலை!
2008/10/17 கலியுகக் கடவுள் ஸ்ரீஜெகந்நாத்
2008/10/10 சைதை திருக்காரணீஸ்வரர் ஆலயம்
2008/10/03 நலம் தரும் நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர்