Tuesday, 17 Mar 2009

Life Is Beautiful

இனிக்கும் இல்லறம்

மோகம் முப்பது நாள்; ஆசை அறுபது நாள் என்று நம்ம பெரிசுங்க சும்மா ஒண்ணும் சொல்லல. அப்படித்தான் இருக்கும். ஆனால், அது மட்டுமே வாழ்க்கை இல்ல அதைத்தாண்டிதான் வாழ்க்கைன்னும் சொல்லியிருக்காங்க.

கல்யாணம் ஆன புதுசல சிட்டுக்குருவி கணக்கா மயங்கிக்கிடக்கறது சகஜம்தான். ஆனால், திருமண உறவு காலங்காலமாக தொட்டுதொடர வேண்டுமானால் விட்டுக்கொடுத்துப் போகாமல் இருக்க முடியாதுங்க.

ஆகா, ஆரம்பத்தில் வச்ச அன்பும் காதலும் இப்ப காணாமல் போயிடுச்சேன்னே புலம்பறது வீண். அதுக்கு இரண்டு பக்கமும்தான் காரணம்.

அன்பும் காதலும் கொஞ்சமாக காணாமல் போக பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

அதை சரி பண்ண, ஏதோ எங்களால் முடிஞ்ச சின்ன சின்ன டிப்ஸ்கள் தரோம். கடைப்பிடித்துப் பாருங்கள்…

* உங்கள் துணையின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து அதன்படி விட்டுக்கொடுத்து நடந்துக்கோங்க. துணையின் விருப்பத்தை அலட்சியப்படுத்த வேண்டாம். உங்களுக்குப் பிடிக்குதோ இல்லையோ அவருக்குப் பிடிச்சதையும் நீங்க ரசிக்கக் கத்துக்கிட்டா அப்புறம் ஏன் அந்தண்ட போகப்போறாங்க.

* உங்கள் துணை உங்களை விட அறிவில், கல்வியில், அழகில், பொருளாதாரத்தில் குறையுடன் காணப்பட்டாலும் அதை குறை கூறி பேசாதீர்கள்.

* மற்றவர்களுடன் ஒப்பிட்டு ஒதுக்கிவிடாதீர்கள். தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும். நாவினால் சுட்டப்புண் ஆறாதுங்கிறத மனதில் வையுங்க.

* உங்க துணைக்குத் தேவைப்படும் சிறு சிறு உதவிகளை செய்ய மறுக்க வேண்டாம்.

* யார் எதிரிலும் உங்கள் துணையை விட்டுக் கொடுத்துப் பேச வேண்டாம்.

* கடுகடு வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்க வேண்டாம். குறிப்பா மற்றவர்கள் முன்னாடி வேண்டவே வேண்டாம். அன்பான, அனுசரணையான வார்த்தைகளை சந்தோஷமான சமயங்களில் மட்டுமல்ல, சங்கடமான சமயத்திலும் பேசுங்கள். பழகின்னா இது கை வரும்.

* மேடைப் பேச்சாளர் கணக்கா வளவளன்னு நீங்க மட்டுமே பேசிக்கிட்டு இருக்காதீங்க. அவங்களுக்கும் வாய் இருக்கு. கேட்கறதுக்கு உங்களுக்கும் காது இருக்கு என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். நிறைய பேசுங்க, நிறைய பேசவிடுங்க.

* ஆங்… சண்டை போட்டுக்கிட்டாலும், அப்படியே படுக்கைக்கு சென்றுவிட வேண்டாம். வந்த சண்டையை சமூகமாகப் பேசி, வெளியே துரத்திவிட்டுட்டு நீங்கள் இருவர் மட்டும் படுக்கை அறைக்குள் போனா அந்த இரவும், அடுத்த விடியலும் சுகமாக இருக்கும்.

* மூன்று வேளை முடியுதோ இல்லையோ ஒருவேளையாவது (இரவு உணவை) ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். மனைவி பரிமாறும் விதத்தில் அன்பை, அக்கறையை வெளிப்படுத்தினால், கணவர் சமையலைப் பாராட்டுவதன் மூலம் அன்பை வெளிப்படுத்தலாம்.

* பரிசு இல்லாத வாழ்க்கை பல நேரம் தரிசாகப் போய்விடும். அதனால் அப்பப்ப சின்ன சின்ன பரிசுகளைப் பரிமாறிக்கொள்ளுங்கள். பரிசு கொடுக்க விசேஷ நாட்கள் மட்டுமே விசேஷமானவை என்று நீங்களாக முடிவுக்கு வந்துவிடவேண்டாம். அந்த விசேஷ நாட்கள் நாம்நினைச்சா வருவதுபோல் மாற்றிக்கொள்ளுங்கள்.

* வீட்டில் யார் இருந்தாலும் சரி, முதல் மரியாதையை உங்கள் துணைக்குத் தாருங்கள். அப்புறம்தான் வாரிசுகள், உறவுகள்.

* நாற்பதைத் தொட்டுட்டா எல்லாத்தையும் விட்டுடனுமா என்ன? அப்பவும் நடை, உடை, பாவனை, அழகு என எல்லாத்திலும் எப்பவும்போல கவனம் செலுத்துங்க.

* தினசரி ஒருமுறையாவது ஐலவ்யூ அல்லது உங்களுக்கு தெரிந்த வார்த்தையில் காதலைச் சொல்ல மறக்காதீங்க. இதை காலையில் செய்தால் அன்றைய பொழுது அட்டகாசமாக அமையும். அதேப்போல இரவில் கொஞ்சம் நேரமாவது ஒதுக்கி உங்கள் துணையுடன் மனம்விட்டு பேசுங்க. கருத்து வேறுபாடு வந்தாலும், அதையும் சாதாரணமான ஒரு கருத்தா எடுத்துக்கிட்டீங்கன்னா….நீங்கள்தான் ஆதர்ஷ தம்பதிகள்.

-கிசே

Related Posts Title


Leave a Reply