காஞ்சிவரம் - திரை விமர்சனம்

நடிப்பு: பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி
இசை: ஸ்ரீகுமார்
ஒளிப்பதிவு: திரு
இயக்கம்: பிரியதர்ஷன்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்திருக்கும் தமிழ்த் திரைப்படம் காஞ்சிவரம். நெசவாளியின் துயரத்தை இதில் பதிவு செய்திருக்கிறார் பிரியதர்ஷன்.
காஞ்சிவரத்தில் (இப்போதைய காஞ்சிபுரம்தான்) பட்டு நெசவாளி பிரகாஷ் ராஜ். அவருடைய மனைவி ஸ்ரேயா ரெட்டி. இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அதன் திருமணத்தின்போது பட்டுப்புடவை தருவதாக வாக்கு த்தருகிறார் பிரகாஷ்ராஜ். இதைக் கேட்டு ஊரே அதிர்ச்சி அடைகிறது. ஒரு பட்டு நெசவாளி பட்டுப்புடவை வாங்குவது எவ்வளவு சிரமம் என்று மனைவி ஸ்ரேயா ரெட்டியும் கோபித்துக் கொள்கிறார். பெண்ணுக்காக தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை க்காட்டுகிறார் பிரகாஷ் ராஜ்.
இதற்கிடையே, தங்கை கணவர் வந்து, வியாபாரம் செய்ய பணம் கொடுத்தால் அவரை அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். பெண்ணுக்காகச் சேர்த்த பணத்தை கொடுத்து தங்கையையும், அவளுடைய கணவரையும் அனுப்பி வைக்கிறார் பிரகாஷ்ராஜ்.
எங்கே தனது பெண்ணுக்கு பட்டுப்புடவை வாங்க முடியாமல் போய் விடுமோ என்று அஞ்சுகிறார். அதனால் ஜமீனுக்கு நெய்து தரும் புடவைகளில் இருந்து பட்டு நூல்களை கொஞ்ச கொஞ்சமாக திருடி வைக்கிறார். ஒருநாள் சிக்கிக் கொள்கிறார். அதன்பிறகு அவருடைய வாழ்க்கை பாதை மாறிப் போவதுதான் கதை.
நெசவாளி பட்டுப் புடவை நெய்தாலும், அவனால் அதை வாங்கமுடியாத அளவுக்கு வறுமை வாட்டுகிறது என்று சொல்கிறது காஞ்சிவரம் திரைப்படம்.
வேங்கடம் என்கிற வேடத்தில் வரும் பிரகாஷ் ராஜ் காஞ்சிவரம் படத்திற்கு ஒரு வரம். அவருடைய நடிப்பில் அவருடைய பழையப் படங்களின் பாதிப்பு எதையும் நம்மால் உணரமுடியவில்லை. மகளுக்காக உருகும்போதெல்லாம் பிரகாஷ் ராஜ் கண்களில் மட்டுமல்ல, நம் கண்களிலும் கண்ணீர் கசிகிறது. ஸ்ரேயா ரெட்டி, மகளாக வரும் ஷம்மு, நண்பர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் நெஞ்சில் நிற்கிறார்கள். திருவின் ஒளிப்பதிவு நம்மை பழைய காஞ்சிவரத்திற்கே அழைத்துச் செல்கிறது. ஸ்ரீகுமாரின் பின்னணி இசையும் பொருத்தமாக இருக்கிறது.
குத்து பாட்டு, கவர்ச்சி ஆட்டம், சண்டை என தமிழ் சினிமா போய்க்கொண்டிருக்கையில், தமிழனின் அவலத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் பிரியதர்ஷன்.
Related Posts Title































