Shilpa Shetty will marry Raj Kundra soon

Posted on Tuesday 31 March 2009

திருமண பந்தத்தை உடைப்பவள் நான் அல்ல: ஷில்பா ஷெட்டி
காதலரை விரைவில் கைபிடிக்கிறார்

kundra-shilpa-in-raj-mahal.jpg

திருமண பந்தத்தை உடைப்பவள் நான் அல்ல என்று இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி வாய் மலர்ந்துள்ளார். வருங்கால கணவர் ராஜ் குந்த்ராவுடனான என்னுடைய வாழ்க்கை அவருடைய மனைவியை விவாகரத்து செய்தபிறகே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த நேரம் நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது.

சமீபத்தில் ஐ.பி.என்., சேனலுக்கு அளித்த பேட்டியில் ஷில்பா இவ்வாறு கூறியுள்ளார்.

33 வயதான ஷில்பா ஷெட்டி நடிகையாக பிரபலமானதைவிட, பிரிட்டன் டெலிவிஷன் நடத்திய பிக் பிரதர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானதுதான் அதிகம்.அப்போது சக நடிகையான பிரிட்டனைச் சேர்ந்த டிவி நடிகை ஜேட் கூடி (புற்றுநோயால் தாக்கப்பட்ட  இவர் சமீபத்தில் மறைந்தார்) நிறவெறி காட்டி துன்புறுத்திய நிகழ்வு ஷில்பா ஷெட்டிக்கு அனுதாபம் தேடித் தந்ததுடன், அந்நிகழ்ச்சியில் வெல்லவும் செய்தது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்ததுதான் தொழில் அதிபரும், பிரிட்டனைச் சேர்ந்தவருமான ராஜ் குந்த்ராவுடனான காதல உறவு.

ஷில்பாவை சந்தித்தபோது தன் மனைவி கவிதாவை பிரிந்துதான் இருந்தார் ராஜ் குந்த்ரா.ஆனால், கவிதாவோ ஷில்பாதான் தன் கணவரை தன்னிடமிருந்து பிரித்ததாகக் குற்றம் சாட்டினார்.

கவிதாவின் குற்றச்சாட்டு தன்னை படுக்கையில் சாய்த்துவிட்டாகவும், தன்னை திருமண பந்தத்தை உடைக்கும் ஒரு நபராக சித்திரித்தது மிகவும் கீழ்ததரமான செயல் என்றும், இது எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது என்றும் அப்போதே ரியாக்ஷன் காட்டியிருந்தார் ஷில்பா.

”என் மனத்தை தொட்டுச் சொல்லுகிறேன்.அன்றைக்கே ராஜ் மீது எனக்கு காதல் பிறந்துவிட்டது. அதை ராஜியிடமும் கூறினேன். ஆனால், அவர் முறைப்படி கவிதாவிடமிருந்து விவாகரத்து பெறும் வரை நாம் நண்பர்கள்தான் என்றும் தெளிவுப்படுத்தினேன்” என்று இப்போது  சொல்கிறார் ஷில்பா.

தற்போது, ”திருமண வாழ்க்கையைத் தொடங்க இனியும் காத்திருக்க முடியாது” எனச் சொல்லும் ஷில்பா வரும் அக்டோபர் மாதத்தில் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்வார் எனத் தெரிகிறது.

அதற்கு அச்சாரமாக பிரிட்டன், சுர்ரே நகரில் வேபிரிட்ஜ் எனுமிடத்தில் ஏழு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பெரிய கட்டடத்தை இருவரும் வாங்கியிருக்கிறார்கள்.அதற்கு ராஜ் மகால் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.

”குடும்ப வாழ்க்கையில் இருக்கும் சுகத்தை அனுபவிக்க துடித்துக் கொண்டிருக்கிறேன்.எனக்குக் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.இரண்டு குழந்தைகளாவது நிச்சயம் பெற்றுக்கொள்வேன்” என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் ஷில்பா,

”இப்போதே குழந்தைகளுக்கான அறைகளும் தயார். எங்களைச் சுற்றி சுற்றி குழந்தைகள் ஓடியாடுவதை நினைக்கவே இனிப்பாக இருக்கிறது. எங்கள் அறைகள் போக அவருடைய தாய், தந்தை வசிக்கவும் அறைகள் தயார். ஒரு நல்ல குடும்பமாக நாங்கள் வாழ்வோம்” என்று கொட்டி முடிக்கிறார் ஷில்பா.

admin @ 11:28 pm
Filed under: kollywood
5 Padma awards: Bachchan family makes record

Posted on Tuesday 31 March 2009

பத்ம விருதுகள்: அமிதாப் பச்சன் குடும்பத்தினர் சாதனை

aishwarya-rai.jpg

ணு விஞ்ஞானி அனில் கக்கோத்கர், தமிழ் எழுத்தாளர் டி.ஜெயகாந்தன், கட்டடக் கலைஞர் வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, நடிகை ஐஸ்வர்யா ராய், உட்பட 67 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று பத்ம விருதுகளை வழங்கினார்.

டில்லி ராஷ்டிரபதி பவனில் பத்ம விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஐந்து பேருக்கு பத்மவிபூஷண் விருதுகளையும், 16 பேருக்கு பத்மபூஷண் விருதுகளையும், 45 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நேற்று வழங்கினார்.

இவர்களில் தமிழ் எழுத்தாளர் டி.ஜெயகாந்தன், கட்டடக் கலைஞர் வைத்தியநாதன் கணபதி ஸ்தபதி, பாடகி சம்ஷத் பேகம் ஆகியோர் பத்மபூஷண் விருது பெற்றனர். இதில், சம்ஷத் பேகம் சக்கர நாற்காலியில் வந்து விருது பெற்றார். நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர்  பத்மஸ்ரீ விருது பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இரண்டு வெளிநாட்டவர்களும் பத்ம விருதுகள் பெற்றனர். ஒருவர் டோக்கியோ பல்கலைகழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு முதல் சம்ஸ்கிருதம் பயிற்றுவித்து வரும் பேராசிரியர் மினோரு ஹாரு. இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. மற்றொருவர் ரஷ்யாவில் அமைந்துள்ள பாரதிய வித்யா பவன் பொதுச்செயலர் ஜான் ரால்ஸ்டன் மார். இவர் கல்வித் துறையில் ஆற்றிய சேவைக்காக, இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பரதநாட்டியத்தின் கலாஷேத்ரா பாரம்பரியத்தின் சிறப்பை பாதுகாத்து அதன் புகழை பரப்பியதற்காக, கணவன் மனைவியான தனஞ்செயன் மற்றும் சாந்தா தனஞ்செயன் இருவரும் பத்மபூஷண் விருது பெற்றனர். அணு ஆராய்ச்சி விஞ்ஞானியான அனில் கக்கோத்கர் உயரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் ஐஸ்வர்யா ராய் தான் இளையவர். பத்மஸ்ரீ விருது பெற்றதன் மூலம் ஐஸ்வர்யா ராய் தனது மாமனாரான அமிதாப் பச்சன் குடும்பத்தின் சாதனைக்கு காரணமாகிவிட்டார். அமிதாப் குடும்பத்தில் 5ஆவது நபராக பத்ம விருது பெறுகிறார் ஐஸ்வர்யா ராய்.

ஐஸ்வர்யா ராய்க்கு விருது என்று அறிவிப்பு வந்ததும், அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்திருந்தார். அப்போது அவர் பெருமையாகக் குறிப்பிடுகையில்,

”என் குடும்பத்தில் முதல் பத்ம பூஷன் விருதை எனது தந்தை பெற்றார். அடுத்ததாக நான் பத்மஸ்ரீ விருது பெற்றேன். எனக்கு பத்மபூஷன் விருதும் பின்னர் தரப்பட்டது.சில வருடங்களுக்குப் பிறகு என் மனைவி ஜெயா பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். இப்போது எனது மருமகள் ஐஸ்வர்யா பத்மஸ்ரீ விருது பெற்று குடும்பத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இது எங்கள் குடும்பம் பெறும் 5ஆவது பத்ம விருதாகும். இது  இந்திய அளவில் சாதனையாகும். கடவுள் எங்கள் குடும்பம் மீது அளவு கடந்த கருணை வைத்துள்ளார். எங்கள் மீது அன்பு செலுத்தும் மக்களுக்கு நன்றி” என்றார்.

இந்தி திரையுலகைப் பொறுத்தவரையில் அக்ஷய்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரைத் தவிர முன்னாள் குலுக்கல் நடிகை ஹெலன் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

admin @ 9:50 pm
Filed under: news
5 shot dead by an Indian engineer in America

Posted on Tuesday 31 March 2009

5 பேரைச் சுட்டுக் கொன்று பொறியாளர் தற்கொலை: அமெரிக்க கொடுமை

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் உறவினர்கள் ஐந்து பேரைச் சுட்டுக்கொன்று, தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பு -தேவகி தம்பதியர். இவர்களது மகன் அசோக்(36); பெங்களூரில் உள்ள எச்.பி., சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக இருந்தார். இவர் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கம்பெனி மூலம் அமெரிக்கா சென்று அலுவலகப் பணிகளை கவனிப்பார். கடந்த ஒரு மாதத்துக்கு முன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். இவரது மனைவி சுசித்ரா(32), மகள் அகானா(11 மாதம்).

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள எருமாடு கப்பாலா பகுதியைச் சேர்ந்தவர்கள் ராகவன் - லட்சுமி தம்பதியர். இவர்களின் மகன் தேவராஜன்(43); சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் அமெரிக்காவில், ‘யாகூ’ நிறுவனத்தில் பணியாற்றி வருவதுடன், அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளார். இவர், அசோக்கின் தங்கை ஆபாவை(32) திருமணம் செய்துள்ளார். இவர்களது மகன் அகில்(12); மகள் நேகா(4).

கலிபோர்னியா அடுத்துள்ள சாண்டா கிளாரா பகுதியில், தேவராஜன் புதிய வீடு வாங்கி, கடந்த 29ம் தேதி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், அசோக் குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். அன்று இரவு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, தேவராஜன் - அசோக் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது, தேவராஜன் திடீரென கைத்துப்பாக்கியால் அசோக், அவரது மனைவி சுசித்ரா, 11 மாத கைக்குழந்தை அகானா ஆகியோரைச் சுட்டார். பின், தனது மனைவி ஆபா மற்றும் இரண்டு குழந்தைகளையும் கண்மூடித்தனமாகச் சுட்டார். தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதில், தேவராஜின் மனைவி ஆபாவைத் தவிர அனைவரும் இறந்துவிட்டனர். ஆபா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவராஜ் மற்றும் அவரது குழந்தைகள் உடல்களைத் தவிர அசோக் மற்றும் அவரது குடும்பத்தார் உடல்களை அய்யன்கொல்லி கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

admin @ 8:26 pm
Filed under: American news
MP’s resignation letter, not a drama, says Karunanidhi

Posted on Tuesday 31 March 2009

எம்.பி.,க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தது நாடகம் அல்ல: கருணாநிதி

தி.மு.க., எம்.பி.,க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததை நாடகம் அல்ல என்று ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில்அளித்துள்ளார். சேருவார் தோஷம் காரணமாக ராமதாஸ் அவ்வாறு கூறுவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

‘இலங்கைத் தமிழர் பிரச்னையில் தி.மு.க., எம்.பி.,க்கள் பதவி விலகல் கடிதத்தை லோக்சபா சபாநாயகரிடம் தராமல், தி.மு.க., தலைமையிடம் கொடுத்தது வெறும் நாடகம்’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.பி.,க்களும் பதவி விலகுவர் என்பதே. ராமதாசின் மகன் அன்புமணி, லோக்சபா எம்.பி., அல்ல; ராஜ்யசபா எம்.பி., எனவே, அன்புமணி பதவி விலகும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக, “மக்களவை உறுப்பினர்கள் கூண்டோடு பதவி விலகல்’ என, பா.ம.க., ஆதரவு நாளிதழில் செய்தி வெளியிட்டவர் தான் ராமதாஸ்.

எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் பதவி விலகும்போது, அதை சபாநாயகரிடம் நேரடியாகத் தராமல், கட்சித் தலைமையிடம் கொடுத்து, அவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்த்து சபாநாயகரிடம் கொடுப்பதற்கு, கடந்த காலங்களில் பல முன்மாதிரிகள் உள்ளன. எனவே, தி.மு.க., எம்.பி.,க்கள் பதவி விலகல் கடிதங்களை, தி.மு.க., தலைமையிடம் கொடுத்தது நாடகம் அல்ல.

மேலும், நம் வேண்டுகோளை ஏற்று, இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு பல முயற்சிகளை எடுத்ததாலும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பி வைத்ததாலும், தி.மு.க., எம்.பி.,க்கள் பதவி விலகல் கடிதத்தை கொடுத்தாலும், நான் அவற்றை லோக்சபா சபாநாயகருக்கு அனுப்பவில்லை.

தீர்மானம் நிறைவேற்றிய இரண்டொரு நாட்களிலேயே பதவி விலகல் கடிதத்தைக் கொடுக்க முன்வந்தது நாடகமா? அது ராமதாஸ் மீது குற்றமல்ல; ராமதாஸ் கட்சியும் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, பொழுது போக்கு கூட்டம்; கபட நாடகம் என விமர்சித்த ஜெயலலிதா அணியோடு, கூட்டு சேர்ந்துள்ளார். சேருவார் தோஷம்; அந்த பாணியில் ராமதாஸ் அறிக்கை கொடுத்துள்ளார்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

admin @ 8:03 pm
Filed under: srilanka news
AR Rahman gets Rs.28 crores for Motorola advt.,

Posted on Tuesday 31 March 2009

விளம்பரத்தில் நடிக்க ரூ.28 கோடி:
ஏ.ஆர்.ரகுமானுக்கு தருகிறது மோட்டரோலா

arrahman.jpg

ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பணிக்கான சம்பளம் ஏறியதோ இல்லையோ அவருடைய விளம்பர மாடல் ரேட் எகிறி விட்டது.

உலகில் செல்போன் தயாரிப்பில் இரண்டாவது இடம் வகிக்கும் மோட்டரோலா நிறுவனம் தன்னுடைய நிறுவன விளம்பரத்தில் நடிக்க ஏ.ஆர்.ரகுமானை ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக அவருக்கு அந்நிறுவனம் ரூ.28 கோடி சம்பளம் தருகிறது.

மோட்டரோலா விளம்பரத் தூதுவராகவும், மாடலாகவும் இருந்துவந்த கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் ரூ.22 கோடிதான் பெற்று வந்தார். அவருடைய ஒப்பந்த காலம் முடிவடைவதால், இப்போது ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானுக்கு தரப்படும் சம்பளம் டேவிட் பெக்காமுக்கு தரப்பட்டதைவிட 20 சதவிகிதம் அதிகம்.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பெற்ற 2 ஆஸ்கர் விருதுகள் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. அதனால், அவருடைய விளம்பர மதிப்பும் பலமடங்கு அதிகரித்துவிட்டது. எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து, ஏ.ஆர்.ரகுமானை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

சாதிச்சுட்டான் இல்ல தமிழன்!

admin @ 3:00 am
Filed under: kollywood
Water Packaging Gets changes

Posted on Tuesday 31 March 2009

மாத்தி யோசி… பாட்டில்டு நன்னீரால் கேடு  வராது!

water.jpg

பிளாஸ்டிக் பாட்டிலில் நன்னீரை அடைத்து விற்பவர்கள் நிறைய காசு பார்த்தாலும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் அதிகம். நன்னீரை அடைத்துத் தரும் பிளாஸ்டிக் பாட்டில்தான் அவர்களின் பிரச்னையே.சுற்றுச்சூழல் பேணுபவர்களின் எதிர்ப்பை இந்நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

உண்மையில் பிளாஸ்டிக் பாட்டில்களால் உலக சுற்றுச்சூழலுக்குக் கேடுதான். ஆனாலும் நன்னீர் குடிக்காமல் நம்மால் வாழ முடியாதே.உலகத்திற்குத் தேவையான குடிநீரை, உலகிற்கு கேடு விளைவிக்காமல் தர முடியாதா என்ன?

பெப்ஸிகோ சாதித்து விட்டது.

காகித அட்டையில் குடிநீரை அடைத்து அதற்கு ‘எகோ - பினா பாட்டில் (Eco-Fina bottle)’ என பெயரிட்டு விற்பனைக்கும் கொண்டுவந்துவிட்டது.இது முழுக்க முழுக்க காகிதம் அல்ல. அதேசமயம் முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பாட்டிலும் அல்ல. வழக்கத்தைவிட இதில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு 50 சதவிகிதமே.

ஏப்ரல் முதல் முழுவீச்சில் விற்பனைக்கு வரப்போகும் இந்த பாட்டிலால் 75 மில்லியன் பவுண்ட் மதிப்புமிக்க பிளாஸ்டிக் பயன்பாடு குறையப் போகிறது. அதேபோல இந்த பாட்டிலில் நன்னீரை தக்க வைக்க கீழே அமைக்கப்படும் கார்டு போர்டின் அடர்த்தியை குறைப்பதன் மூலம் வருடத்திற்கு 20 மில்லியன் பவுண்ட் மதிப்புமிக்க கார்டுபோர்டின் பயன்பாட்டையும் குறைக்க இருக்கிறார்கள்.

பாட்டில்டு நன்னீருக்குப் பதிலாக இதுபோன்ற பாக்ஸ்டு செய்யப்பட்ட நன்னீருக்கு வரவேற்பும் இருக்கும் என பெப்ஸிகோ நம்புகிறது.பெப்ஸிகோ மற்றும் பல நன்னீர் நிறுவனங்களை நாம் திட்டும் வேளையில், இந்த உலகத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பாசத்தையும் பாராட்ட வேண்டும்.

பெப்ஸி தன்னுடைய ஆண்டு வருமானத்தில் 20 சதவிகிதத்தை தண்ணீரைக் காப்பாற்றும் செயலில் ஈடுபட்டுவரும் அமைப்புகளுக்கு நன்கொடை செய்து வருகிறது.

அதுமட்டுமல்ல தற்போது தயாரித்துவரும் காகித கண்டெய்னரில் 60 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்டவை. மேலும், பெப்சிகோ தரப்பில் விற்பனையாகும் ஒவ்வொரு நன்னீர் பாட்டிலுக்கும் மரக்கன்று நடப்படும் என்று உறுதி கூறப்பட்டிருக்கிறது. (குடிமகன்கள் உள்ளே தள்ளுகிற ஒவ்வொரு குவார்ட்டருக்கும் ஒரு மரத்தை நட்டா எப்படியிருக்கும்!)

மாற்றங்களே இல்லாதபோது சில விஷயங்களை மாற்றியமைப்பது நல்ல விஷயம்தான். அதாங்க சொல்றோம் மாத்தி யோசிங்கன்னு.
-கிசே

admin @ 1:30 am
Filed under: American news
April fools day: Who are you?

Posted on Monday 30 March 2009

நீங்கள் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

april-fool.jpg

ப்ரல் -1… தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள் எல்லாம் உண்மையான புத்திசாலிகளை(அன்று ஒரு நாள் மட்டும்) முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம்(இது எப்படி இருக்கு?). நேரடியாகச் சொல்லவேண்டுமானால், இதை முட்டாள்கள் தினம் என்று சொல்வதைக் காட்டிலும், மற்றவர்களை முட்டாள்களாக்கி மகிழ்ச்சியடைபவர்களின் தினம் என்று சொல்லலாம்.

இங்கே யார் முட்டாள்கள்? யார் புத்திசாலிகள்?

ஏமாற்றுபவர் புத்திசாலி! ஏமாறுபவர் முட்டாள்!

அப்போ தானும் ஏமாறாமல் மற்றவர்களையும் ஏமாற்றாமல் இருப்பவர் முட்டாளா, புத்திசாலியா?

அப்படி பார்த்தால் புத்திசாலிகள் பல நேரங்களில் முட்டாள்களே. முட்டாள்கள் பல நேரங்களில் புத்திசாலிகளே.

முட்டாள்களாக அடிக்கடி சித்திரிக்கப்படுபவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அப்பாவிகளும் முட்டாள்கள் இல்லை. தங்கள் வேலையில், தங்கள் செயலில் அதிகபட்ச புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி நல்ல பெயர் எடுக்கும் இவர்கள், மற்ற விஷயங்களில் அதிக அக்கறைக் காட்டாமல் முழி பிதுங்குவதால் அப்பாவிகளாகவும், முட்டாள் என்ற அடைமொழியோடு உலவி வருகிறார்கள்.

புத்திசாலிகளில் நூற்றுக்கு 50 சதவிகிதம் பேர் நல்ல நடிகர்கள். அவர்களுக்கு புத்திசாலிகளாக நடிக்க நன்றாக வரும். (அதுவும் திறமைதானே என்கிறீர்களா?) ஒரு விஷயம் தெரியுமா நல்ல புத்திசாலி முட்டாள் போன்றே தோற்றம் தருகிறார்.அதனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சரி, புத்திசாலிகள் வேறு கெட்டிக்காரர்கள் வேறா?

இது முட்டையா கோழியா போன்ற சிக்கலான பிரச்னை. புத்திசாலிகள் தங்கள் வேலையில், தாங்கள் சார்ந்த இடத்தில் திறமையுடையவர்களாக காட்சி அளிக்கிறார்கள். இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னுடையத் திறமையை வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்ற விருப்பத்துடன், அதில் தனக்கும் ஆதாயம் தேடிக் கொள்கிறான் பாருங்கள் அவனை கெட்டிக்காரன் என்று வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு அரசியல்வாதிகள் நல்ல உதாரணம். இவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ இல்லையோ கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம் காரியத்தில் கண்ணாய் இருந்து, எப்போதும் அதை தனக்குச் சாதகமாகவே ஆக்குபவர்கள் கெட்டிக்காரர்கள். இவ்விஷயத்தில் புத்திசாலிகளுக்கு அவ்வளவு கெட்டிக்காரத்தனம் போதாது.

இங்கு திறமை என்பது அடிப்பட்டு நேரத்தை, காலத்தை, மனிதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதத்திற்கு அரியணை ஏறும் அரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது.

புத்திசாலிதனத்திற்கு கெட்டிக்காரத்தனத்திற்கும் நம் திரைத்துறையில் இருநதே உதாரணம் தரலாம்.

ரஜினியும் கமலும் சமகாலத்தவர்களாக இருந்தாலும், ரஜினிக்கு எங்கும், எப்போதும் முதலிடமும், கமலுக்கு அடுத்த இடமும் ஏன் தரப்படுகிறது. நிச்சயமாகச் சொல்லலாம் திரைத்துறை திறமையைப் பொறுத்தவரையில் ரஜினி, கமலை விட புத்திசாலி இல்லை.

கமல் திரைத்துறையில் கொடிகட்டி பறக்கவும், நட்சத்திரமாக மின்னவும் அதற்குத் தேவையான விஷயங்களைத் தேடித்தேடி அறிந்து சேர்த்துக் கொண்டவர். கலைஞர் குறிப்பிட்டபடி தன்னை கலைஞானியாக காட்டிக்கொள்ள முயல்பவர்.

ரஜினி அப்படியா? இல்லவே இல்லை.

அவர் அளவுக்கு அறிந்ததையே போதும் என்று நினைத்தவர். அதையே முதலீடாக ஆக்கி வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றவர். அவரிடம் புத்திசாலித்தனத்தைவிட தன்னம்பிக்கையும், மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்ளாத தன்மையும் இருந்தது.

கமல் படங்களில் அதிக புத்திசாலித்தனம் இருக்கும். இது பல நேரம் நம்மை குழப்பிவிடும்.
ரஜினியின் எந்தப் படமாவது புரியவில்லை என புகார் வந்ததுண்டா? நன்றாக இல்லை என்று வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். இருந்தாலும் அந்தப் படத்தையும் அவருடைய ரசிகர்கள் ஓட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர் ரசிகர் நெஞ்சில் ஒட்டியவர்.
ரஜினியைப் போலவே ரஜினி ரசிகர்கள் சரியா?

கமலைப்போலவே கமல் ரசிகர்கள். ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் தங்கள் தலைவர் படமானாலும் ஒதுக்கி ஓரம் கட்டிவிடுவார்கள். 

ரஜினியைப் போன்ற சாதாரணமானவர்கள் நிறைந்த நாடு இது. இது ரஜினியின் முதலிடத்திற்கு காரணம்.கமலைப் போல அதிகம் சிந்திப்பவர்கள் குறைவாக உள்ள நாடு இது. அதே சமயம், அவருடையத் திறமையை யாரும் மொத்தமாக ஒதுக்கிவிடாமல் இரண்டாம் இடத்தை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். அவரவர் இடத்தை தக்கவைத்துக்கொள்ள இருவருமே போராட வேண்டும் என்பதுதான் மக்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகம் சங்கதி.

ஆக, கமல் புத்திசாலியாகவும் இருக்கிறார். சில நேரம் கெட்டிக்காரராகவும் இருக்கிறார். ரஜினியோ எப்போதுமே  கெட்டிக்காரராகவே இருக்கிறார்.

தன்னிடம் உள்ள திறமையை அறியாதவன், தன்னுடைய திறமையைத் தக்கசமயத்தில் வெளிப்படுத்தாதவன் முட்டாள்.

தன்னுடையத் திறமையை அறிந்தவன், மேலும் தேவையானத் திறமைகளை வளர்த்துக் கொள்பவன், அதை தன்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தி வெல்பவன் புத்திசாலி.

அட, திறமையே இல்லாவிட்டாலும் ஏதோ திறமை தனக்குள் ஒளிந்திருப்பதுபோல பாவனை காட்டியாவது உச்சத்தை எட்டுபவன் கெட்டிக்காரன்.

நீங்கள் யார் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

-கிருஷ்ணாசேகர்

admin @ 11:08 pm
Filed under: news
Vijay introduces his son to Kollywood

Posted on Monday 30 March 2009

விஜய் வாரிசு வர்றார் பராக் பராக்

vijay-and-son.jpg

ங்கள் வாரிசுகளை அவ்வளவு சீக்கிரம் வெளியுலகுக்குக் காட்டாத நட்சத்திரங்களுக்கு மத்தியில் விஜய் வித்தியாசமானவர். மகன் விஜய் ஜேசன் சஞ்சய்யை வெளியே அழைத்து வந்துவிட்டார்.

ஐபிஎல் தொடரின்போது தனது மகனை முதுகில் சுமந்தபடி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டம்போட்டார் விஜய்.

இப்போது வாரிசை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யும் வேலையில் இறங்கிவிட்டார்(விஜய்யும் சின்ன வயதிலேயே நடித்தவர்தானே).

இப்போது நடித்து வரும் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு தன் மகனை ஆடவிட்டிருக்கிறார் விஜய். நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் விஜய் ஜேசன் சஞ்சய் ஆடிய இப்பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

admin @ 9:53 pm
Filed under: kollywood
Lanka Tamils: Ramadoss attacks Karunanidhi

Posted on Monday 30 March 2009

ராஜினாமா: கருணாநிதியின் கடைந்தெடுத்த பித்தலாட்டம்: ராமதாஸ் தாக்கு

லங்கைத் தமிழர் பிரச்னைக்காக, ராஜிநாமா செய்வது தொடர்பாக இப்போது பா.ம.க., மீது வீண் பழி போட்டு, அரசியல் ஆதாயம் தேட முற்படுவது கடைந்தெடுத்த அரசியல் பித்தலாட்டம். இப்படி முன்னுக்குப் பின் முரணாகவும், குழப்பத்திலும் உள்ள கருணாநிதி, தேர்தல் வந்ததும், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க, பா.ம.க., மீதும், மற்ற கட்சிகள் மீதும், பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து, நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

‘இலங்கை தமிழர் பிரச்சனையில் தி.மு.க., எம்.பி.,க்கள் பதவி விலக முன்வந்தனர். ஆனால், பா.ம.க., மற்றும் கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் தான் பதவி விலக முன்வரவில்லை’ என்று, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார்.தமிழர்களுக்கு மறதி அதிகம் என்று நினைத்து பேசுபவர் தான் கருணாநிதி.இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தி.மு.க., எம்.பி.,க்கள் யாரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தனர்? 2008 அக்டோபர் 17ம் தேதி இது தொடர்பாக கருணாநிதி அளித்துள்ள பேட்டியை மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தால், இதில் உள்ள உண்மை தெரியும்.

செய்தியாளர்: உங்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் அனைவரும் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டார்களா?

கருணாநிதி: இன்றைக்கே வரவேண்டும் என்று அழைப்பு ஏதும் கொடுக்கவில்லை. பார்லிமென்டுக்கு இன்று (அக்., 17) வந்தவர்களையெல்லாம் டி.ஆர். பாலு டில்லியில் இருந்து அழைத்து வந்திருக்கிறார்.  

செய்தியாளர்: தீர்மானத்தில், இரண்டு வாரங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள்; இரண்டு வாரம் கூட காத்திருக்காமல் இப்போதே விலகல் கடிதம் கொடுக்க காரணம் என்ன?

அமைச்சர் பாலு: பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டும் என்று தலைவர் சொல்லவில்லை; தலைமைக் கழகத்திலும் சொல்லவில்லை; நாங்களாகத் தான் வந்து கொடுத்திருக்கிறோம்.

செய்தியாளர்: பார்லிமென்டில் வாக்கெடுப்பு வரலாம்; முன்தேதியிட்டு பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்திருப்பதால், பாதிப்பு ஏதாவது வருமா?

கருணாநிதி: பதவி விலகல் கடிதங்கள் எல்லாம் என்னிடம் தான் இருக்கின்றன. கட்சித் தலைமையிடம் தான் அந்தக் கடிதங்களை கொடுத்திருக்கின்றனர்.எம்.பி.,க்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும்; அது தான் மரபு; கொடுக்க வேண்டிய இடம் டில்லி.

ஆனால், அன்று டில்லியில் இருந்த தி.மு.க., எம்.பி.,க்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்து வருகிறார்.கட்சித் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தால் அதன் விளைவு என்ன என்பது யாருக்கும் தெரியாததல்ல. தி.மு.க., எம்.பி.,க்களின் பதவி விலகல் கடிதம் சபாநாயகரிடம் எந்த நாளில், எந்த நேரத்தில் சேர்க்கப்படுகிறதோ, அதே நாளில் அதற்கு அடுத்த நொடியிலேயே பா.ம.க., எம்.பி.,க்கள் பதவி விலகல் கடிதம் சேர்ப்பிக்கப்படும் என்று பல முறை தெரிவித்திருக்கிறேன்.இப்போது பா.ம.க., மீது வீண் பழி போட்டு, அரசியல் ஆதாயம் தேட முற்படுவது கடைந்தெடுத்த அரசியல் பித்தலாட்டம். இப்படி முன்னுக்குப் பின் முரணாகவும், குழப்பத்திலும் உள்ள கருணாநிதி, தேர்தல் வந்ததும், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க, பா.ம.க., மீதும், மற்ற கட்சிகள் மீதும், பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்’ கூறியுள்ளார்.

admin @ 9:19 pm
Filed under: srilanka news
Lanka govt., needs Lanka Tamils voice over LTTE

Posted on Monday 30 March 2009

அப்பாவி மக்களை வெளியேற்ற புலிகளுக்கு நெருக்கடி தாருங்கள்:
வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களிடம் அரசு வலியுறுத்தல்

போர் நடந்து வரும் பகுதிகளில் சிக்கியுள்ள அப்பாவித் தமிழர்களை வெளியேற்றச் சொல்லி, விடுதலைப் புலிகளைக் கேட்டுக்கொள்ளுமாறு வெளிநாட்டில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களை இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அதிபர் ராஜபக்ஷேவின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘இலங்கையில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களிடம் தற்போதைய நிலையை எடுத்துக் கூறும் முயற்சிகள் நடந்து வருகின்றன.  வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்று அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், சண்டை நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும்படி புலிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது. இதுபோன்ற கூட்டங்கள், இரு தரப்புக்கும் இடையே சீர்குலைந்துள்ள உறவை புதுப்பிப்பதற்கு உதவும்.

இந்தக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகலகாமா பேசுகையில், ‘புலிகள் வசம் மனித கேடயமாக உள்ள அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்கு சர்வதேச சமுதாயத்துடன் சேர்ந்து வெளிநாடு வாழ் இலங்கைத் தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும்’ என்றார்’ என்று கூறப்பட்டுள்ளது.

admin @ 8:35 pm
Filed under: srilanka news