நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசு தயார்: நரேஷ் குப்தா பேட்டி
சென்னை:”ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை உடனே இடமாற்றம் செய்யுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது” என்று நரேஷ் குப்தா தெரிவித்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
”வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு, ஓட்டுப்பதிவு மற்றும் பயிற்சிக்காக மொத்தம் 68 ஆயிரத்து 400 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். தற்போது மொத்தம் 74 ஆயிரம் இயந்திரங்கள் உள்ளன. ஒரு தொகுதியில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் தேவையும் அதிகரிக்கும்.பெங்களூரு ‘பெல்’ நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சோதனையிடும் பணி நடந்து வருகிறது. பேட்டரிகள், பச்சை பேப்பர் சீல்கள், மெட்டல் சீல்கள், ஓட்டுப் போடுவதற்கான தடுப்புகள், பாலித்தீன் ஷீட்கள் மற்றும் ஓட்டுச் சாவடிகளுக்கு தேவைப்படும் இதர ஸ்டேஷனரி பொருட்கள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அடையாள மையின் தேவை முடிவு செய்யப்படும். படிவங்கள், கவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கான கையேடுகள், தேர்தல் ஆணையத்தின் விதிகள் போன்றவற்றை அச்சிடும் பணி, சென்னையில் உள்ள அரசின் மத்திய அச்சகத்தில் நடக்கிறது.அச்சிட்டு முடித்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். மாவட்ட தேர்தல் நிர்வாக திட்டம் மற்றும் தகவல் தொடர்பு திட்டம் ஆகியவற்றை தயாரிக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரே இடத்தில் பணிபுரிவோர் ஆசிரியர்களாக இருக்கக் கூடாது: இதனடிப்படையில் தேர்தல் நடைமுறைகளை ஆணையம் கண்காணிக்கும்.காவல்துறை, வேட்பாளர்கள் போன்றோருக்கான பயிற்சி மற்றும் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தேர்தல் பணியில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கிகள் உட்பட பொதுத் துறை ஊழியர்கள் கலந்திருக்கும் வகையில் ஈடுபடுத்தப்படுவர்.ஒரு ஓட்டுச்சாவடியில் பணியில் அமர்த்தப்படுவோர், ஒரே துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரே ஓட்டுச்சாவடியில் பணியாற்றும் அனைவரும் ஆசிரியர்களாக இருக்கக் கூடாது. வெவ்வேறு துறையினர் கலந்திருக்க வேண்டும்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிவோர் மற்றும் ஏற்கனவே தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு உள்ளானவர்களை விரைவில் இடமாறுதல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கும் முன், இடமாறுதல் பணிகள் முடிக்கப்பட்டு, தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஏற்கனவே நடவடிக்கைக்கு உள்ளானவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்ப்பது பற்றி அவர்கள் கள ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல, ஓட்டுச்சாவடி ஏஜென்ட்களை நியமிக்கும்படி அரசியல் கட்சிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.அந்த ஏஜென்ட்கள், வரும் 23ம் தேதிக்குள் நியமிக்கப்பட வேண்டும். 27ம் தேதிக்குள், பூத் அலுவலர்களிடம் அந்தந்த பகுதியில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இடமாறிய வாக்காளர்கள் பற்றிய விவரங்களை அவர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
திருமங்கலம் இடைத்தேர்தலில் அதிகாரிகளின் பதிலால் சந்தேகம் எழுந்துள்ளதாக நரேஷ் குப்தா தெரிவித்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:
”திருமங்கலம் இடைத்தேர்தலில், வாக்காளர்கள் காண்பித்த அடையாள ஆவணங்கள் குறித்து பதிவேட்டில் குறிப்பிடாத ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நிலை 2 மற்றும் மண்டல அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மீண்டும் மீண்டும் இதுபற்றி வலியுறுத்தியும், ஆவணங்களின் விவரங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பதிவு செய்யாதது, தேர்தல் விதிமுறை மீறல் தான்.மண்டல அலுவலர்கள் அனைவரும் ஒரே மாதிரியான விளக்கத்தை அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு எழுதியுள்ளோம். திருமங்கலம் இடைத்தேர்தலில் நடந்த நிர்வாக குளறுபடிகள், வரும் லோக்சபா தேர்தலிலும் ஏற்படாத வகையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளோம்.தேர்தல் முடிந்து ஆவணங்கள் “சீல்’ வைக்கப்பட்ட பின், அதை மீண்டும் திறந்து பார்க்க சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளின் அனுமதியைப் பெற வேண்டியுள்ளது.”
Related Posts Title































