LTTE, Naxalites mixed with advocates Subramaniasami

Posted on Saturday 28 February 2009

subramaniasami.jpgவழ‌க்க‌றிஞ‌ர்களு‌க்கு‌ள் விடுதலைப் புலிகள், ந‌க்சலை‌ட் ஊடுரு‌வ‌ல் : சுப்பிரமணியசாமி

சென்னை: வழ‌க்க‌றிஞ‌ர்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப் புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர். அவர்களை வழ‌க்க‌றிஞ‌ர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும் எ‌ன்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி  வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கையில்,

‘சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நடந்த சம்பவத்தை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் விசாரித்து, காவ‌ல்துறை‌யின‌ர் நடத்திய தடியடி பிரயோகத்துக்கும், வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு மட்டும் வருத்தம் தெரிவித்தது.

கடந்த 17ஆ‌ம் தேதி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்கு‌ள் என் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தில், 20 வழ‌க்க‌றிஞ‌ர்களின் அநாகரீக நடவடிக்கை பற்றி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.சந்துரு ஆகியோர் எழுத்துபூர்வமாக பதிவு செய்துள்ளனர் என்பதையும் நினைவுபடுத்துகிறேன். இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தின் நேரடி கண்காணிப்பில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்.

சென்னையில் நடக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணையின் போது, வழ‌க்க‌றிஞ‌ர்களின் நடவடிக்கை பற்றி புகார் கொடுப்பதற்கு காவ‌ல்துறைக்கும் உரிமை உள்ளது. காவ‌ல்துறை அதிகாரி ஒருவரின் உடைகளை களைந்தது, பெண் காவல‌ரிட‌ம் தவறாக நடந்தது பற்றியும் காவ‌ல்துறை‌யின‌ர் புகார் தெரிவிக்கலாம்.

உண்மை நிலவரம் என்னவென்றால், வழ‌க்க‌றிஞ‌ர்களுக்குள் நக்சலைட், விடுதலைச் சிறுத்தைகள், விடுதலைப்புலிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 5 சதவீதம் பேர் ஊடுருவி உள்ளனர். இப்படிப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி, அவர்களை வழ‌க்க‌றிஞ‌ர்களாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும். ஜனநாயகத்தின் பிடியில் இருந்து அவர்கள் தப்பித்து ஓடவிடக் கூடாது’ எ‌ன்று சு‌ப்‌பிரம‌ணியசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 2:55 am
Filed under: news
Poongothai Aladi Aruna became minister again

Posted on Saturday 28 February 2009

poongothai-aladi-aruna.jpgஅமைச்சர் பதவி ஏற்றார் பூங்கோதை

சென்னை: தமிழக தகவ‌ல் தொட‌ர்பு‌த்துறை அமை‌ச்சராக பூ‌ங்கோதை ஆலடி அருணா வெள்ளிக்கிழமை பத‌வி ஏ‌ற்று‌க் கொ‌ண்டா‌ர். அவரு‌க்கு த‌மிழக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா பத‌விப் ‌பிரமாண‌ம் செ‌ய்து வை‌த்தா‌ர்.

தி.மு.க. அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இரு‌ந்த பூங்கோதை, லஞ்சப் புகாரில் சிக்கிய தனது உறவினரைக் காப்பாற்ற, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் தொலைபேசியில் பேசியதாக எழுந்த குற்றச்சா‌ட்டைத் தொட‌‌ர்‌ந்து அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து விலக‌ினா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் வெள்ளிக்கிழமை அவரு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் அமை‌ச்ச‌ர் பத‌வியை வழ‌ங்‌கினா‌ர் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி. தகவ‌ல் தொட‌ர்பு‌த்துறை அமை‌ச்சராக பூ‌ங்கோதை வெள்ளிக்கிழமை பதவி ஏற்று‌க் கொ‌ண்டா‌ர்.

ஆளுநர் மா‌ளிகை‌யி‌ல் நட‌ந்த இ‌ந்த பத‌வி ஏ‌ற்பு ‌விழா‌வி‌ல் அவரு‌க்கு ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌‌ங் ப‌ர்னாலா பத‌விப் ‌‌பிரமாண‌மு‌ம், ரக‌சியப் கா‌ப்பு பிரமாணமு‌ம் செ‌ய்து வை‌த்தா‌ர். இ‌ந்த ‌விழ‌ா‌வி‌ல் அமை‌ச்ச‌ர்க‌‌ள், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், ப‌ல்கலை‌க்கழக துணைவ‌ே‌ந்த‌ர்க‌ள், முதலமை‌ச்ச‌ர் துணை‌வியா‌ர் ராஜா‌த்‌‌தி அ‌ம்மா‌ள் ஆ‌கியோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் அமைச்சர் பூங்கோதை செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகையில், ”அமைச்சர் பதவி மீண்டும் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக முதலமைச்சர் கருணாநிதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட இந்த பொறுப்பை சிறப்புடன் செய்வேன்” என்றார்.

admin @ 2:52 am
Filed under: news
DMK calls advocates to join duty

Posted on Saturday 28 February 2009

வழக்கறிஞர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்: தி.மு.க., வேண்டுகோள்

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு ஏற்ப வழக்கறிஞர்கள் ப‌ணி‌க்கு ‌திரு‌ம்ப வே‌ண்டு‌ம் எ‌ன்று தி.மு.க., சட்டத்துறை செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 19.2.2009 அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கொடுத்த வழக்கில் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் அதையொட்டி முதல் நிலை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் உடனடியாக நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்குகொள்ள வேண்டுமென்றும் அறிவுரை வழங்கியுள்ளது.

நீதிமன்ற ஆணையை ஏற்று சம்பவத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் காவல்துறை அதிகாரிகளை தமிழக அரசு உடனடியாக இடமாற்றம் செய்துள்ளது. முதலமைச்சர் கருணாநிதி சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.5000 இடைக்கால நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு ஏற்ப வழக்கறிஞர்கள் வரும் 2.3.2009 அன்று முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கு கொண்டு பொதுமக்களின் இன்னலைப் போக்கி ”நடந்தது நடந்ததாக இருக்கட்டும்; இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும்” என்ற மனப்பான்மையோடு நடந்து கொண்டு சுமூக சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று வழக்கறிஞர்களை, தி.மு.க வழக்கறிஞர்கள் அணியின் சார்பாக பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 2:47 am
Filed under: news
High Court clash: Krishna Commission starts enquiry today

Posted on Saturday 28 February 2009

sri-krishna.jpgஉயர்நீதிமன்றத்தில் இன்று ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் விசாரணை

சென்னை: உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கறிஞர்கள்-காவல்துறையினர் மோதல் சம்பவம் குறித்து இன்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், தன் விசாரணையை துவக்குகிறது.

கடந்த 19ம் தேதி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வைகை மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயகுமாரும் மனு தாக்கல் செய்தார். இம்மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பாஞ்சால் அடங்கிய ‘பெஞ்ச்’, சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் அமைத்தது. முடிந்தால் ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனை ‘பெஞ்ச்’ கேட்டுக்கொண்டது.

கமிஷன் முன் அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் வழக்கறிஞர்களின் பிரதிநிதிகள் தாக்கல் செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்காலிக தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல், உயர்நீதிமன்றவளாகத்தில் ஆயுதம் தாங்கிய காவல்துறையினரை அனுமதித்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கலாமா என்பதை கமிஷன் முதலாவதாக பரிசீலிக்கலாம் எனவும்,  உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இன்று காலையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தன் விசாரணையை துவக்குகிறது. வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து மனுக்களை தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

காயமடைந்த வக்கீல்கள், காவல்துறையினரிடம் விசாரணை நடத்த வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளை இன்று அல்லது நாளை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பார்வையிடும். உச்ச நீதிமன்றத்தில் 3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதால், அதற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என வக்கீல்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

admin @ 2:44 am
Filed under: news
Bharatmatrimony.com tie-up with Idea cellulor

Posted on Saturday 28 February 2009

பாரத் மேட்ரிமோனி.காம் - ஐடியா செல்லுலா கூட்டு

செ‌ன்னை: இந்தியாவின் முன்னணி திருமண இணையதளமான பாரத்மேட்ரிமோனி.காம் 40 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட முன்னணி மொபைல் நிறுவனமான ஐடியா செல்லுலாருடன் கூட்டு சேர்ந்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கான விருப்பத்திற்கு ஏற்ற திருமண சேவையை வழங்க உள்ளது.

ஐபிஆர்எஸ் சேவை வசதி கொண்ட செல்போன் வைத்திருக்கும் ஐடியா வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பெறலாம்.

இந்த சேவை மூலம், ஐடியா வாடிக்கையாளர்கள் தங்கள் மனதிற்குப் பிடித்த மணமகன் மற்றும் மணமகளைத் தேடுவது, அவர்களின் தனி விவரங்களைப் பார்வையிடுவது, தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்துவது போன்ற பலன்களைப் பெறலாம்.

மாதம் தோறும் ரூ.100 செலவில் எவ்வளவு தனி விவரங்களை வேண்டுமானாலும் பார்க்கும் வசதி, இலவசமாக 5 பேரின் தொடர்பு விவரங்களை பெறும் வசதி அளிக்கப்படும். இந்த சேவை ஐடியாவின் டபிள்யூஏபி போர்ட்டலான http:/wap.ideafresh.com அல்லது http:/idea.bharatmatrimony.com -ல் மட்டும் ஐடியா ஜிபிஆர்எஸ் வசதி உள்ள மொபைல் இண்டெர்நெட் பிரவுசரில் மட்டும் கிடைக்கும்.

இதுகுறித்து ஐடியா செல்லுலார் அதிகாரி பிரதீப் ஸ்ரீவத்சவா கூறுகையில், ”ஐடியா பிரஷ் போர்ட்டலில் பாரத்மேட்ரிமோனி.காமை தொடங்கியிருப்பதன் மூலம் எங்கள் மொபைல் இண்டர்நெட் கால்தடத்தை திருமண வரன்கள் பிரிவிலும் பதித்துள்ளோம்.

மொபைலை ஒரு மேட்ச் மேக்கராக மாற்றி வாடிக்கையாளர்களை கவர உள்ளோம்” என்றார்.

இதுகுறித்து பாரத்மேட்ரிமோனி சார்பில், அதன் தலைவர் முருகவேல் ஜானகிராமன் கூறுகையில், ”பாரத்மேட்ரிமோனி - ஐடியா செல்லுலார் கூட்டின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சேவையை நாங்கள் எங்கள் வெப் சேவையுடன் ஒருங்கிணைத்து அளிக்கிறோம்என்பதுதான். இதன் மூலம் இரண்டு வாடிக்கையாளர்களும் தங்கு தடையின்றி ஊடகங்களுக்கிடையே தகவல் பரிமாறிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்” என்று குறிப்பிட்டார்.

admin @ 2:41 am
Filed under: news
Rajapaksa tries to convince Lanka Tamils: Video

Posted on Saturday 28 February 2009

நான் தமிழர்களின் சொந்தக்காரன்!: ராஜபக்சே தங்சிங்கிளிஷ் பேச்சு

பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளை நம்பாதீர்கள். அரசை நம்புங்கள். நான் உங்களுக்கும் தலைவன். உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத் தரவேண்டியது என் கடமை என்றெல்லாம் தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில ராஜபக்சே பேசியிருக்கிறார்.

ஈழத் தமிழர்களின் நெஞ்சை உருக்கப் பார்க்கும் அவருடைய தங்சிங்கிளிஷ் பேச்சு இதோ:

admin @ 2:35 am
Filed under: news
Raja Kannappan return to ADMK

Posted on Saturday 28 February 2009

பழைய முகாமுக்கு திரும்பினார் ராஜ கண்ணப்பன்

செ‌ன்னை: தி.மு.க.விலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெள்ளிக்கிழமை மாலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அக் கட்சியில் த‌ன்னை இணை‌‌த்து‌க் கொ‌ண்டா‌ர்.

சென்னையில் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் பொதுக் குழு கூட்டம் இ‌ன்று நடைபெற்றது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் தென் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டன‌ர்.

இந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் அ.‌தி.மு.க‌.‌வி‌ல் மக்கள் தமிழ் தேசம் க‌ட்‌சியை இணை‌த்து‌க் கொ‌ள்வது எ‌ன்று ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌‌ற்ற‌ப்‌ப‌ட்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை வெள்ளிக்கிழமை மாலை ராஜ கண்ணப்பன் சந்தித்து அ‌க்க‌ட்‌சி‌யி‌ல் த‌ன்னை இணை‌‌த்து‌க் கொ‌ண்டா‌ர். அவருட‌ன் செ‌ன்ற 500 தொ‌ண்ட‌ர்களு‌ம் அ.‌தி.மு.க‌.‌வி‌ல் த‌ங்களை இணை‌‌த்து‌க் கொ‌ண்டன‌ர்.

‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், ‘ஜெயல‌லிதா உ‌த்தர‌வி‌ட்டா‌ல் நாடாளும‌ன்ற‌த் தே‌ர்‌த‌லி‌ல் போ‌ட்டி‌யிட‌த் தயா‌ர்’ என்று கூறினார்.

admin @ 2:28 am
Filed under: news
TN journalists assoc., condemns Srilanka govt.,

Posted on Saturday 28 February 2009

பத்திரிகையாளர்கள் மீது இராணுவ அடக்குமுறை:
இலங்கைக்கு பத்திரிகையாளர்கள் கண்டனம்

சென்னை: இலங்கை ராணுவத்தால் கடத்தப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் பத்திரிகையாளர் ந.வித்யாதரனை உடனே விடுதலை செய்யவேண்டும். அவருடைய மற்றும் அவருடைய குடும்பத்தினரின் பாதுகாப்பை சர்வதேச சமூகம் ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு ‘ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம்’ கூறியுள்ளது.

‘ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர்’ மன்றத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர்களான டி.அருள்எழிலன், சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் எழுந்துள்ள போர்ச்சூழல் என்பது அங்கு வாழும் தமிழ் மக்களின் இயல்பான சமூக வாழ்வை முற்றிலுமாக

சீர்குலைத்திருப்பது நீங்கள் அறிந்ததே! இலங்கையை ஒரு ஜனநாயக நாடாக அனைத்துலக சமூகம் அங்கீகரித்திருக்கும் சூழலில் சிறிலங்காவின் போர் வெறி மிக மோசமான அளவுக்கு பரவி வருகின்றது.

மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கூட போர் பூமிக்குள் எப்பக்க சார்புமற்று பணி செய்ய முடியாத சூழல்.

ஒட்டுமொத்தமாக இந்தப் பிரிவினர் அனைவரும் சிறிலங்கா அரசால் அச்சுறுத்தப்படுகின்றனர். இம்மாதிரி மனித உரிமையாளர்களையும் சமூகப் பணியாளர்களையும் அச்சுறுத்த சட்டவிரோதக் குழுக்களை சிறிலங்கா அரசு உருவாக்கி வைத்திருக்கின்றது.

வெள்ளை வான் எனப்படும் சட்டவிரோத ஆயுதக்குழுவால் அரசியல் பணியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கடத்திக்கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இலங்கை, பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நாடாக மாறிவிட்டது. போருக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கொண்டே அரசியல் கருத்துக்களை வெகு மக்களிடையே பகிர்ந்து கொள்ள நினைக்கும் பத்திரிகையாளர்கள் மிகக் கோரமாக கொல்லப்படுகின்றனர்.

2006 ஆம் ஆண்டில் இருந்து 2008 ஆம் ஆண்டு வரை இருபதுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கை சுட்டிக்காட்டியும் விமர்சித்தும் எழுதியவர்களே!

இன்று கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு முல்லைத்தீவுக்குள் சிறிலங்கா இராணுவம் நுழைந்திருக்கும் சூழலில் பெரும் இராணுவ அடக்குமுறை இலங்கையில் உள்ள சிங்கள, தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

நீண்டகால கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதன் அடையாளமாக, ஜயாத்துரை நடேச‌ன், மயில்வாகனம் நிமலராஜ‌ன், ரிச்சர்ட்டி டி சொய்ச, தேவிஸ் குருக, தர்மரத்தினம் சிவரா‌ம், ரேலங்கி செல்வரா‌ஜ், நடராஜா அற்புதராஜா, ஐ.சண்முகலிங்க‌ம், சுப்ரமணியம் சுகிர்தராஜ‌ன், சின்னத்தம்பி சிவமகாரா‌ஜ், சம்பத் லக்மால் சில்வ, இசைவிழி செம்பிய‌ன், ரி.தர்மலிங்க‌ம், சுரே‌ஸ், கேதீஸ் லோகநாத‌‌ன், சந்திரபோ‌‌ஸ், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி எனப் பலரும் படுகொலையாகி வீழ்ந்திருக்கின்றனர்.

அறம் சார்ந்து எழுத நினைக்கும் ஒரு படைப்பாளி இன்று சிறிலங்கா அரசின் பேரினவாதத்திற்கு பலியாகும் சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஜனவரி மாதம் 8 ஆம் நாள் புகழ்பெற்ற ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியரும் வழக்கறிஞருமான லசந்த விக்ரமதுங்க கொழும்பில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

சமீபத்தில் அவரது மனைவி தனது மூன்று குழந்தைகளுடனும் இலங்கைத் தீவை விட்டு வெளியேறி உள்ளார். ‘இதுவரை தன் கணவரின் கொலைக்கான விசாரணையை சிறிலங்கா அரசு தொடங்கவில்லை’ என்று குற்றம் சுமத்தியும் இருக்கின்றார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக எப்படி சோனாலி சமரசிங்க வெளியேறினாரோ அதுபோல சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் அரசியல் அடைக்கலம் கேட்டு தலைமறைவாக இலங்கையில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையின் புகழ்பெற்ற பத்திரிகையாளாரான இக்பால் அத்தாஸ் கூட இலங்கையில் வாழ முடியாமல் வெளியேறி இருக்கின்றார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (26.02.09) யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையின் ஆசிரியரும் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘சுடரொளி’ பத்திரிகையில் ஆசிரியருமான நடேசபிள்ளை வித்தியாதரன் (வயது 51) கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

மூன்று வெள்ளை வான்களில் வந்த ஆயுததாரிகளும், காவல்துறை சீருடையில் வந்தவர்களும் இவரை கல்கிசையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே கடத்தியதாக தெரியவந்துள்ளது.

சிறிலங்கா அரசு நடத்தும் போர் தொடர்பாகவும் பாதிக்கப்படும் மக்கள் பற்றியும் செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் சுடரொளியும், உதயனும் மிக முக்கிய ஊடகப்பங்களிப்பை ஆற்றி வந்தன.

இந்நிலையில்தான் இந்த ஜனநாயக விரோத நிகழ்வு நடந்திருக்கின்றது.

இந்நிலையில் வித்தியாதரன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் என்று இலங்கையின் ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கின்றார்.

இலங்கைக்குள் வாழும் சிங்கள தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலும் துணைத் தூதுவர் அம்சாவின் நடவடிக்கைகள் ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரான ஒன்றாக மாறிவருகின்றது.

அக்கிரமான போரில் மடிந்து வரும் தமிழ் மக்கள் சார்ந்து செய்தி வெளியிட்ட ‘நக்கீரன்’ இதழை மிரட்டும் வகையிலான அம்சாவின் அறிவிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

‘மக்கள்’ தொலைக்காட்சியை ஒளிபரப்பு செய்ய விடாமல் அச்சுறுத்தும் சிறிலங்கா அரசு ஊடகங்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

ஒரு ஊடகவியலாளரை அரசே கடத்திக் கைது செய்து விசாரிக்கும் விசாரணை முறைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

சந்தேகிக்கப்படும் நபர்களை விசாரணைக்கு உட்படுத்த வென்று நீதிமன்ற நடைமுறைகள் இருக்கும் போது இவ்விதமான நடவடிக்கைகள் அச்சமூட்டுகிற ஒன்றாக இலங்கையில் வளர்ந்து வருவது கவலையளிக்கின்றது.

சிறிலங்கா அரசின் இவ்விதமான ஊடக ஒடுக்குமுறைகளை, பத்திரிகையாளர்களின் படுகொலைகளைகளை ஒடுக்குமுறைக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் என்ற முறையில் ந.வித்தியாதரனின் கைது அல்லது கடத்தல் குறித்து மிகந்த கவலை அடைகின்றோம். மனித உரிமைகள் மீறப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சுழலில், இந்தக் கைதும் சிறிலங்கா அரசின் போர் வெறியை நமக்கு உணர்த்துகிறது.

ஏனைய பத்திரிகையாளர்களுக்கு நேர்ந்த கதி வித்தியாதரனுக்கும் நடந்து விடுமோ என்று அச்சப்படுகின்றோம்.

அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்க வேண்டிய கடமை அனைத்துலக சமூகங்களுக்கு உண்டு. ஜனநாயகப் படுகொலைகளைச் செய்யும் சிறிலங்கா அரசை கண்டிப்பான முறையில் அனைத்துலக சமூகம் அணுக வேண்டும்.

உடனடியாக ந.வித்தியாதரன் விடுதலை செய்யப்பட வேண்டும். வித்தியாதரன் மற்றும் அவரது உறவினர்களின் பாதுகாப்பை அனைத்துலக சமூகங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக இலங்கையில் வாழும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்துக்கும் அனைத்துலக சமூகங்கள் ஒரு உறுதிப்பாட்டை வழங்க வேண்டும் என கோருகின்றோம்.

சிறிலங்கா அரசின் இனப்படுகொலைகளுக்கு எதிராக நாம் பேசுவோம்! எழுத்து உரிமைக்காக குரல் கொடுப்போ‌ம்.’

இ‌வ்வாறு அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

admin @ 2:25 am
Filed under: news
ADMK had hit on head by SC, says Karunanidhi

Posted on Saturday 28 February 2009

அ.தி.மு.க.,வுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த குட்டு!: கருணாநிதிசென்னை: தி.மு.க., ஆட்சியைக் கலைக்கக் கோரிய அ.தி.மு.க., வுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஜெயக்குமார், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகவும், அதனால் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தாரே?

கருணாநிதி: 1989ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்கு வந்து முதல் நிதி நிலை அறிக்கையை நான் அவையிலே சமர்ப்பிக்க முனைந்த போதே, என் கையிலிருந்த நிதி நிலை அறிக்கையைப் பிடுங்க முற்பட்டு, என்னை தாக்கவும் செய்து, என் கண்ணாடியை உடைத்து, ஒரு பெரிய கலவரத்தை ஏற்படுத்தி, அதனை ஏடுகளில் வெளி வரச் செய்து, தன் தலையை தானே கலைத்து விட்டுக் கொண்டு சட்டம்-ஒழுங்கு தமிழகத்திலே கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற பல்லவியை ஆரம்பித்தவர், தொடர்ந்து டெல்லியில் சந்திரசேகரையும், ஆர். வெங்கட்ராமனையும் பிடித்து இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பயன்படுத்திக் கொண்டு 1991ம் ஆண்டு ஜனவரியில் கழக ஆட்சியைக் கலைக்கச் செய்தார்.

அந்த ஒரு அனுபவத்தில் தற்போதும் 2006ம் ஆண்டு தி.மு.க., மீண்டும் பதவிக்கு வந்த நாள் முதல், தமிழகத்திலே ஏதாவது ஒரு சிறிய பிரச்னை ஏற்பட்டாலும், உடனே சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று அறிக்கை விடுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். எந்தப் பிரச்னை குறித்த அறிக்கையானாலும், அதிலே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்ற கருத்து இடம் பெறாமல் இருக்காது. அறிக்கையால் பயனில்லை என்றதும், இப்போது உச்ச நீதிமன்றத்திற்கே சென்று வழக்கு போடும் வேலையைத் தொடங்கியிருக்கிறார்.

உயர் நீதிமன்றத்திலே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறுக்காக ஒரு ஆட்சியையே கலைக்க வேண்டுமென்றால், நள்ளிரவில் முன்னாள் முதலமைச்சரான என்னை வீடு புகுந்து காவல் துறையினரை விட்டு தாக்கி கைது செய்தார்களே, அது பற்றி கேள்வி கேட்ட மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோரை காவல் துறையினரை விட்டுத் தாக்கி கைது செய்தார்களே, அதற்கெல்லாம் என்ன செய்வது?.

ஏன் மாநில ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி காரிலே சென்று கொண்டிருந்த போது, கட்சிக்காரர்களை விட்டு திண்டிவனத்தில் காரை மறித்து தாக்கச் செய்தார்களே, அதற்காக என்ன செய்வது?.

மத்திய தேர்தல் கமிஷனராக இருந்த டி.என். சேஷனை விமான நிலையத்திலிருந்து வெளியே வர விடாமல் “கேரோ” செய்ததோடு, அவர் தங்கியிருந்த விடுதியைத் தாக்கி நாசம் செய்தார்களே, அதற்காக என்ன செய்வது?

மத்திய அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தை திருச்சியிலே தாக்கினார்களே, வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், விஜயன் போன்றவர்களை கொலை செய்யவே முயற்சி நடந்ததே, அதற்காக என்ன செய்வது?.

நீதியரசர் ஏ.ஆர். லெட்சுமணனின் மருமகன், எம்.ஜி.ஆர். அலுவலக மேலாளர் முத்து மீதெல்லாம் ‘கஞ்சா” வைத்திருந்ததாக வழக்கு போடப்பட்டதே, அதற்காக என்ன செய்வது? இப்படி கேட்டுக் கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட வன்முறைகளுக்கும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவிற்கும் காரணமானவர்கள் தான் தற்போது திமுக ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது, ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார்கள். அதன் உச்ச கட்டமாகத்தான் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்துள்ளார்கள்.

தற்போது ஆட்சியைக் கலைக்க ஜெயலலிதாவும், ஜெயக்குமாரும் சொல்கின்ற காரணம் தமிழகத்தில் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன என்பதாகும். ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், ஏன் நீதிமன்றங்கள் உட்பட முடங்கிக் கிடந்தனவே.

பத்து லட்சம் அரசு அலுவலர்கள் பணிக்கு வராமல் வீட்டிலேயே கிடந்தார்கள். அ.தி.மு.க., அரசு இரண்டு லட்சம் அலுவலர்களை ஒரே ஆணைப்படி டிஸ்மிஸ் செய்தது. இருபதாயிரம் பேர்களை இரவோடு இரவாக புதிதாக வேலையிலே நியமித்தது. மாநிலமே ஸ்தம்பித்து கிடந்தது.

அரசு அலுவலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்து நியாயம் பெற்றார்களே, அப்போது அ.தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டதா என்ன?

சுப்பிரமணிய சாமி மீது வழக்கறிஞர்கள் அழுகிய முட்டைகளை வீசியதற்காக தற்போது கவலைப்படும் அ.தி.மு.க., அவர்கள் ஆட்சிக் காலத்தில் அதே சுப்பிரமணிய சாமியை, அதே உயர் நீதிமன்றத்தில் என்ன பாடுபடுத்தினார்கள்? எத்தகைய காட்சியையெல்லாம் அன்றைய தினம் சுப்பிரமணிய சாமியும், பத்திரிகையாளர்களும் காண நேரிட்டது? மக்கள் அவைகளை எல்லாம் மறந்து விட்டார்களா என்ன?

அ.தி.மு.க., சார்பில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதால், 356வது பிரிவைப் பயன்படுத்தி, தமிழக அரசைக் கலைக்க வேண்டுமென்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது அரசியல் உள் நோக்கம் கொண்டது - 356வது சட்டப் பிரிவைப் பயன்படுத்த நாங்கள் கவர்னர் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

”ஆட்சியைக் கலையுங்கள்” என்று சொல்வதற்கு எங்கே செல்ல வேண்டும், யாரிடம் முறையிட வேண்டும் என்று கூட தெரியாமல் உச்ச நீதிமன்றம் சென்று, அங்கே குட்டுப்பட்டவர்களுக்கு, பாவம் தலை மிகவும் வீங்கத்தான் செய்யும். அவர்கள் பக்கமுள்ள பத்திரிகையாளர்கள் தான் மருந்து போட வேண்டும்.

கேள்வி: மாநில அரசு அலுவலர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவித்திருக்கிறீர்களே?

கருணாநிதி: ஆமாம், மத்திய அரசு தனது அலுவலர்களுக்கு ஊதிய உயர்வினை அறிவித்த அதே நாளில், அதைப் பற்றி கோரிக்கையை யாரும் எழுப்பாத நிலையில் - மாநில அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு விட்டது.

மேலும், மத்திய அரசு அந்த அகவிலைப்படி உயர்வினை முன் தேதியிட்டு இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அளிக்கப்படும் என்று அறிவித்திருப்பதைப் போலவே, தமிழக அரசும் 1.1.2009 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்றும், அதுவும் ரொக்கமாகவே அந்தத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தோம்.

அதிமுக ஆட்சியில் எஸ்மா, டெஸ்மா கொடுமைகளால் அவதிப்பட்டு, சிறைச்சாலை, நீதிமன்றம் என்று அலைய நேரிட்ட அரசு அலுவலர்கள், தற்போது உற்சாகம் மேலிட பணியாற்றும் கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி: திருமங்கலம் தேர்தல் குறித்து முழு ஆய்வு செய்யும்படியும், மறு தேர்தல் நடத்தும்படியும், மக்களவை தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையருக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளாரே?

கருணாநிதி: ஜெயலலிதா சுட்டிக்காட்டுகிற அதிகாரிகளையெல்லாம் அவர் சொல்லுகின்ற இடங்களுக்குப் பந்தாடி விட்டு - வாக்களிக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், அவர் இஷ்டப்படி வாக்குகளைப் போட்டுக் கொள்ளலாம், வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் வாய் திறந்து சொல்லுகிற வரையில் தேர்தலுக்குத் தேர்தல் ஜெயலலிதா இப்படித் தான் விண்ணப்பங்களை அனுப்புவார், விசித்திர வாதம் செய்வார். ஜனநாயகம் என்றாலே அத்தனை கசப்பு அவருக்கு!.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

admin @ 2:16 am
Filed under: news
Kiwi’s wins 2nd T-20 too! Indian’s unlucky

Posted on Friday 27 February 2009

: 2ஆவது ஆட்டத்திலும் நியூசியிடம் இந்தியா சரண்

india-new-zealand match

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு சென்றுள்ள தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு குளிர்விட்டு போச்சா அல்லது அங்கு அடிக்கும் குளிரால் கிரிக்கெட் விட்டுப் போச்சா என்றே புரியவில்லை.

வெற்றிகரமாக ஆட்டத்தில் 2ஆவது தோல்வியை தழுவியிருக்கிறது இந்திய அணி.

இன்று வெலிங்டனில் நடந்த 2 ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் பிடித்த இந்தியா முக்கி, முனகி 20 ஓவர்களில் (அப்பாடா முடிஞ்சதே) 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. யுவராஜ்- 50, சேவாக்-24, தோனி-28 (இதுவே எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?).

அப்புறம் வந்தாங்க நம்ம புது எதிரிகளான (வேற என்ன சொல்றது) நியூசிலாந்துக்காரங்க. மடமடவென பந்தை விரட்டி, 19.5 ஓவரில் 149 ரன்னைத் தொட்டுட்டாங்க.

கடைசி பந்து… ஒரு ரன் எடுத்தால் வெற்றி இல்லாவிட்டால் ஆட்டம் யாருக்குமில்லை (அதாங்க ‘டை’ன்னு ஆயிடும் நிலை. )

இந்தியா ‘டை’() ஆகணும்னு தலையில எழுதியிருக்கும் போது ஆட்டம் எப்படிங்க ‘டை’ ஆகும்?

நம்ம தோணி எல்லா வியூகமும் வகுத்தாரு ‘டை’ பண்ண.

ஆனால், அதிர்ஷ்டம் அவங்கப் பக்கம் இருக்கும்போது நம்மால என்ன செய்யமுடியும்? பத்தானின் ஷாட் பிட்ச் பந்தை மெக்கல்லம் அடிக்க முயல பந்து டாப் எட்ஜ் எடுத்து கேட்சாக மாறியிருக்க வேண்டியது. ஆனால் ஃபீல்டர்கள் முன்னால் இருந்ததால் ரோஹித் ஷர்மா உயிரைக் கொடுத்து அதனை பிடிக்க முயன்றும் பந்து தரையில் விழுந்தது. உடனே ஓடி, தேவையான ஒக்க ரன்னை எடுத்தே விட்டனர் நியூசிக்காரர்கள் (தோனி சாதனையை முறியடிக்க வந்த பாவிங்க).

அப்புறம் என்ன, அவங்க ஜெயிச்சுப்புட்டாங்க அவ்வளவுதான்!

ஆனாலும் 149 ரன் மட்டுமே எடுத்து, நியூசிலாந்து எளிதாக வெற்றிப் பெற வழிவகை செய்த இந்திய ஆட்டக்காரர்களை பாராட்டியே ஆகணும். T20-யே இந்த கதின்னா மிச்சம் மீதி ஆட்டங்களை நினைத்தால் பயமாகத்தான் இருக்கு!

admin @ 7:30 am
Filed under: cricket