» Actor Nagesh is no more .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Saturday, 31 Jan 2009

Actor Nagesh is no more

nagesh.jpgநகைச்சுவை சிகரம் சரிந்தது… நாகேஷ் மறைந்தார்

சென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட குடும்பத்தில் 1933-செப். 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத நகைச்சுவை மற்றும் குணச்சி்த்திர நடிகராக மாறினார்.

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் ரெயில்வேயில் பணியாற்றினார். ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். வெகுவாக பாராட்டினார்.

சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்த பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன் அவர் நடித்த தருமி வேடம் எல்லோர் மனத்திலும் நீங்காத இடம்பெற்றது.

எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ். குறிப்பாக வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் என அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களின் மக்களின் மனங்களை கவர்ந்தவை.

ரஜினி - கமல் காலத்திலும் அசராமல் தாக்குப் பிடித்தவர் தான் நாகேஷ்.

நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருது நாகேஷுக்குக் கிடைத்தது.

திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

நாகேஷின் மறைவுச் செய்தி அறிந்ததும் திரையுலகினர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோரமா, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வாலி உள்ளிட்டோர் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

Related Posts Title


Leave a Reply