தைவான் சென்று வந்தேன்எட்டு எனக்கு லட்டு!
தைப்பே நகரில் உள்ள பாகிஸ்தானிய ஓட்டல் அதிபர் நசீர், நீங்கள் எழுத்தாளர் என்பதால் உங்களிடம் நான் காசு வாங்க மாட்டேன் என்று சொன்னபோது அந்த இனிய அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு வெகுநேரம் பிடித்தது.
ஆனால் இதைப் பற்றி ஒருவர் நியாயப்படி வெகுவாக மகிழ்ந்திருக்க வேண்டும். அந்நிய மண்ணில் காசை மிச்சம் செய்யக் கிடைத்த வாய்ப்பை ஒருவர் அரிய வாய்ப்பாகவும் இனிய வாய்ப்பாகவுமே கருதுவார்கள்.
நசீர் இப்படிச் சொன்னது சுரேஷ்குமாருக்கேகூட மிகுந்த வியப்புதான். காரணம், இதுவரை அவர் அப்படிச் சொன்னதே இல்லை. ஒவ்வொரு முறையும் தயக்கமின்றிக் காசு வாங்கிக் கொள்ளும் நசீர் இம்முறை ஓர் இந்திய எழுத்தாளருக்கு இப்படி ஒரு சலுகையை வழங்குவார் என்று எதிர்பார்க்கவே இல்லை.
நாங்கள் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டோம். நசீர் சரளமாக ஆங்கிலம் பேசுபவராக இருப்பதால் நானே அவரிடம் நேரிடையாகப் பேசினேன்.
”நசீர் சார். உங்கள் அன்பான உணவுக்கு நன்றி. ஆனால் நீங்கள் பில் தொகையை வாங்கிக் கொண்டால்தான் எனக்கு மகிழ்ச்சி. என்னை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் உங்கள் நோக்கமாக இருந்தால், பணத்தை நீங்கள் வாங்கிக் கொண்ட பிறகே எனக்கு அது வரும். எனக்கென ஏதும் செய்ய விரும்பினால் ஒரு சிறு கழிவு மட்டும் கொடுங்கள் பில் தொகையில். போதும்.”
மறுபடியும் அவர், ”நோநோ! ஓர் எழுத்தாளருக்கு நான் செய்யக்கூடிய சிறிய மரியாதை இது. நீங்கள் அவசியம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”
உரையாடல் கனத்த அடையாளங்களுடன் மாறிப்போக ஆரம்பிக்க, அதனை மாற்ற எண்ணி, ”இதை நீங்கள் முன்கூட்டியே சொல்லியிருந்தால் இன்னும் கூடச் சில உணவுகளைச் சேர்த்து ஆர்டர் செய்திருப்பேன்!” என்றேன்.
நசீர் இதைக் கேட்டு வெகுவாகச் சிரிக்க, சென்டிமீட்டர் சிரிப்பே வழங்கும் சுரேஷ்குமார் கூட இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தார்.
”சுரேஷ்! நீங்களாவது சொல்லுங்க பில்லுக்குப் பணம் வாங்கிக்கச் சொல்லி!” என்றேன்.
சுரேஷ், பணத்தை உத்தேசமாகச் கணக்கிட்டு மேசையில் வைத்துவிட்டு எழுந்தேவிட்டார்.
”ஐயையோ! இவ்வளவெல்லாம் இல்லை.”
”அப்படி வாங்க வழிக்கு!”
நசீர் ஒரு தொகையை எடுத்துக் கொண்டு மீதத்தை மேசையிலேயே வைத்துவிடடார்.
சுரேஷ் மீதத் தொகையை எடுக்காமல், ”இது எங்க அன்பளிப்பு” என்றாரே பார்க்கலாம்.
நசீர் மேசையை நோக்கிப் பார்த்து, பணத்தை எடுத்து, சுரேஷ் பாக்கெட்டில் திணிக்க, இந்த இரசனையைப் பார்க்க அடுக்களை மனிதரே வெளியில் வந்துவிட்டார்.
உணவகங்களில் நடக்கும் எத்தனையோ கலாட்டாக்களைப் பார்த்திருப்பார் இவர். ஆனால் பணத்தை வாங்கமாட்டேன். கொடுக்காமல் விடமாட்டேன் என்கிற இரகளையை இதுவரை இவர் பார்த்திருக்கமாட்டார் என்றே நம்புகிறேன்.
ஓர் எதிரி (?) நாட்டவராக இருந்தும், ஓட்டலில் அப்படி ஒன்றும் பெரிய கூட்டமோ வருமானமோ வராதிருக்கும், வந்த ஒரே (!) வாடிக்கையாளரிடமும் பணம் வாங்க மறுத்த அந்தப் பாகிஸ்தானிய நசீரின் அன்பை என்னால் மறக்கவே முடியவில்லை.
நாங்கள் இருந்த ஒன்றே கால் மணி நேரமும் வேறு ஒருவர்கூட வந்து அமர்ந்து உணவு உண்ணவில்லை. இதுவேகூட நாங்கள் பில் பணத்தை எப்படியும் சேர்த்துவிட வேண்டும் என்பதில் குறிப்பாக இருக்க வைத்ததது எனலாம்.
ஓட்டலைவிட்டு வெளியேறி மையச் சாலையை நோக்கி நடந்தோம்.
”நான் இந்த ஓட்டலின் வழக்கமான வாடிக்கையாளன். ஆனால் இப்படி அவர் நடந்துகிட்டதே இல்லை லேனா சார்” என்றார் சுரேஷ்குமார் இன்னமும் வியப்பு அடங்காமல்.
”சுரேஷ் சார்! இப்படி இருக்குமோ?”
”எப்படி?”
”நீங்கள் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் பலரின் பிரதிநிதிபோல் இருக்கிறீர்கள். உங்களின் நண்பரை - அதாவது என்னை மகிழ்விப்பதன் மூலம் நீங்கள் பல்கலை மூலம் தொடர்ந்து நல்ல பெரிய ஆர்டர்களை வழங்குவீர்கள்; நல்ல வாடிக்கையாளர்களை அழைத்து வருவீர்கள்; விலகிப் போய்விடாமல் இருப்பீர்கள் என்பதற்காக என்னை, உங்களை மகிழ்விக்குமுகமாக இந்த பில்லை வாங்க வேண்டாம் என்று நினைத்திருப்பாரோ நசீர்?”
”சேச்சே! நான் அப்படி நினைக்கவில்லை. எழுத்தாளர்கள் மீது சில நாட்டவர்களுக்கு அளவுக்கதிகமா பிரியம், மரியாதை இருக்கும். நசீர் அந்த இரகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.”
”சரி, அப்படியே இருக்கட்டும். மகிழ்ச்சி!”
”நாளை எங்கே போகலாம்? நான் உடன் வருகிறேன்.”
”அப்படியா? மகிழ்ச்சி. தைப்பேவின் உயரமான கட்டடமான தைப்பே 101க்குப் போகலாமா?”
”நல்ல யோசனை. நீங்க அவசியம் பார்க்கணும் அதை. காலைல 8.00 மணிக்கு ஓட்டலுக்கு வந்து அழைச்சிக்குறேன். நான் சொன்ன நேரம் உங்களுக்கு ஒ.கே.தானே? இல்லை, தாமதமாக வரவா?”
”எட்டு எனக்கு லட்டு. நான் சீக்கிரம் எழுகிற பழக்கம் உள்ளவன். ஒரு சிரமமும் இல்லை.”
”வருகிற இடத்திலுமா அப்படி?”
”எந்த நாட்டிலும் அப்படித்தான்.”
”இப்ப ஒரு யோசனை.”
”சொல்லுங்க.”
”நீங்களா ஓட்டலுக்குப் போயிருவீங்களா? நான் கொண்டு வந்து விடட்டுமா?”
”ஒய்.எம்.சி.ஏ. உங்களுக்குப் பல்கலைக்கழகம் போகிற வழியா, இல்லை சுற்றுப் பாதையா?”
”கொஞ்சம் சுற்றுதான்.”
”அப்ப ஒண்ணும் யோசிக்காதீங்க. ஒரு டாக்சியைப் பேசி ஏற்றி விட்டுடுங்க. அது சரி, என்னை ஏன் தனியா அனுப்ப யோசிக்குறீங்க? நான் தனியாப் போறது பாதுகாப்பு இல்லைன்னு நினைக்கிறீர்களா?”
”அதெல்லாம் இங்கே ஒரு பயமும் இல்லை. டாக்சிக்காரங்க ரொம்ப நல்ல டைப்.”
”டாக்சிக்காரங்க ஏமாத்திடுவாங்கன்னு நெனைக்கிறீங்களா?”
”அதெல்லாம் இல்லை. நாங்க இருக்கிற நாட்டுக்கு எங்க விருந்தினரா வந்திருக்கீங்க. உங்களைப் போயிட்டு வாங்கன்னு சொல்றது நல்லாயில்லைல்ல?”
”நாளைக் காலையில சீக்கிரம் எழுந்து என்னை அழைச்சிக்க வெகுதூரம் வேற வரப்போறீங்க. நேரம் நள்ளிரவு ஆகிப்போச்சு. நீங்க பல்கலைக்கழகம் திரும்புங்க. ஒரு டாக்சி மட்டும் பேசிவிட்டுடுங்க.”
நாங்கள் மையச் சாலைக்கு வந்து ஏழெட்டு நிமிடம் டாக்சியே வரக்காணோம். குளிர் வேறு. தடதடவென்றது உடம்பு. கடைசியாக ஒன்று வந்தது. கை காட்டி நிறுத்தினார். அந்த டாக்சி டிரைவர் முகமே சரியில்லை. முகத்தில் அடர்த்தி மீசையுடன் ஒரு வெட்டுக்காயம் வேறு. கையில் கிளவுஸ் வேறு அணிந்திருந்தான்.
”சினிமா வில்லன் மாதிரி இருக்கானே இவன்!”
”சேச்சே! பார்க்கத்தான் அப்படி இருக்காங்க. ரொம்ப நல்லவங்க” டாக்சிக்காரரிடம் தைவானிய மொழியில் ஏதோ பேசினார். ஒய்.எம்.சி.ஏ. என்கிற நான்கு எழுத்து மட்டும் புரிந்தது.
டாக்சிக்காரனும் பலமாகத் தலையாட்டினான்.
கைகுலுக்கி கையசைத்து விடை பெற்றேன்.
டாக்சி புறப்பட்டு ஓட ஆரம்பித்ததும், சுரேஷ்குமாரின் அன்பும், பாகிஸ்தானிய ஓட்டல்காரர் நசீரின் அன்பும் நெஞ்சு முழுக்க ஆக்கிரமித்திருப்பதை நன்கு உணர முடிந்தது.
என்ன செய்தோம் இவர்களுக்கு? என்ன செய்யப்போகிறோம் இவர்களுக்கு? எல்லாம் ஒரு பேனாவுக்குக் கிடைத்த மதிப்பல்லவா இது?
நினைவலைகள் விதவிதமாகப் பாய, கவனமெல்லாம் கற்பனை உலகில் இருந்தது.
மீண்டு வந்து சாலையைக் கவனித்தபோது -
டாக்சி நகரத்தின் பாதையை விட்டு விலகி ஓடுவதாகவே உணர்ந்தேன். அவசரப்படக்கூடாது என்று பொறுமை காத்தேன். பல்கலைக்கழகத்திற்கும் ஓட்டலுக்கும் ஒய்.எம்.சி.ஏ.வுக்கும் இடையே அப்படி ஒன்றும் தூரமாக இருக்க முடியாது. மேலும் இது நகரப் பாதையே அல்ல, ஏதோ இருளை நோக்கி நகரத்தைவிட்டு விலகி ஓடுவதாகவே பட்டது.
இருதயத் துடிப்பு சற்றே மாற டாக்சிக்காரனிடம், ”எங்கே போறே? நான் போகவேண்டியது ஒய்.எம்.சி.ஏ.வுக்கு” என்றேன்.
‘தெரியும். சும்மா வா! பேசாதே!’ என்பதுபோல் கையை மட்டும் உயர்த்திக் காட்டினான்.
நான் மீட்டர் கட்டணத்திற்காக ஏமாற்றப்படுகிறேன்; அல்லது கடத்தப்படுகிறேன். இரண்டில் ஒன்று உறுதி என்று மட்டும் எனக்குத் தீர்மானமாகப் பட்டது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































