Friday, 9 Jan 2009

Travel around Taiwan

national-palace.jpgதைவான் சென்று வந்தேன்

தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

தைப்பே நகரில் நாங்கள் உணவு உண்ணச் சென்ற பாகிஸ்தானிய உணவகத்தின் பெயர் அலிஜா என்பதாகும். இதன் உரிமையாளர் பெயர் நசீர்.

”எப்படி உங்களுக்கு இந்த ஓட்டல் அறிமுகம் ஆனது?” என்று சுரேஷ்குமாரிடம் கேட்டேன்.

”அது ஒரு சுவாரசியமான கதை.”

”சொல்லுங்க.”

”இருங்க. உணவிற்கு ஆர்டர் பண்ணிடுவோம்.”

”இதுவும் நல்ல யோசனைதான். சிறந்த நேர நிர்வாக உத்திகளுள் ஒன்று.”

“எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்” என்று ஒரு போடு போட்டார் சுரேஷ்குமார்.

நசீர் வந்தார். நன்கு வரவேற்றார். உரிமையாளர் தோரணையெல்லாம் காட்டாமல் அவரே என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக உள்ளவர்போல் காணப்பட்டார். இவரைத் தவிர ஒருவர் மட்டுமே அந்த உணவகத்தில் தென்பட்டார். அடுக்களையில் எத்துணைப் பேர் இருந்தனர் எனத் தெரியவில்லை. இங்கு பெருமளவு சம்பளம் கொடுக்க வேண்டும என்பதால் சிக்கன நடவடிக்கை போலும்!

நசீருக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டபோது புருவங்களை ஏகமாய் உயர்த்தி ”ஓ! எழுத்தாளரா? நான் பெரும் பேறு செய்தவன்” என்றார்.

பத்திரிகையின் பெயர் உட்பட அனைத்தையும் பெயருக்குக் கேட்காமல் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்.

அவர் வளைந்து நெளிந்து உடல்மொழி மூலம் எங்களுக்குச் செலுத்திய மரியாதையை ஓர் ஊழியர் செய்தால் வியப்பு அடைந்திருக்க மாட்டேன். அப்படி ஓர் எளிமை.

பாகிஸ்தானியர்கள் என்று நமக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இனம் புரியாத அந்நியம் மெல்ல அகல ஆரம்பித்தது. சே! என்னமாய்ப் பழகுகிறார்! என்று தோன்றியது.

“பாகிஸ்தானிய உணவு வகை தேவையா, இந்திய உணவு வகை தேவையா?”என நசீர் கேட்க, “இரண்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லீங்க” என்றார் சுரேஷ்குமார் என்னிடம்.

“ஏதாவது ஒன்று சொல்லுங்க. இங்கே தால், அதான் பருப்புவகை உணவு ஒன்று பிரமாதமா இருக்கும். அது சொல்றேன்.”

“சொல்லுங்க. வண்ணச் சாயம் சேர்த்துடாமல் பார்த்துக்குங்க.”

“சரிசரி.” உணவுப் பட்டியல் சொல்லப்பட்டது.

நசீர் அடுக்களைக்குள் போய்விட்டு வந்து எங்களுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.

அவர் சொன்ன ஒரு தகவல் ஆச்சரியமாக இருந்தது. ஈவா விமான நிறுவனத்தில் சமையல் பொறுப்பில் இருக்கும் தமிழர் சகீர் அலி, நசீருக்கு நல்ல நண்பராம். இந்த உணவகம் ஆரம்பிக்க மிக உதவியாக இருந்தாராம். அவரது தொழில்நுட்ப உதவிகள், மானசீக உதவிகள் இல்லாமல் இந்த உணவகம் இல்லையாம்.

“ஒரு பாகிஸ்தானிய ஓட்டல் முதலாளிக்கு ஒரு தமிழரின் உதவி. அரிய கைகோர்ப்புதான் போங்கள்” என்றேன்.

“அலிஜா இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு நான் சகீர் அலிக்கு என்றென்றும் கடமைப்பட்டவன்” என்றார் நசீர்.

“சகீர் அலியைப் பார்க்கணுமே!” இது நான்.

“நாளை தான் வருவார். நாளையும் வருகிறீர்களா?”

“நாளை வருவது கடினம். பரவாயில்லை. உங்கள் மாநிலத்துக்காரன் வந்து சாப்பிட்டு விட்டுச் சென்றதாகச் சொல்லுங்கள் போதும்.”

“அவசியம் சொல்கிறேன். இப்பத்தான் தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்.” நான் பொதுவாக சகீர் அலியின் மாநிலத்துக்காரன் என்று சொல்ல, நசீரோ தமிழ்நாடு என்றே குறிப்பிட்டுச் சொன்னதும் எனக்குள் ஏக வியப்பு. இவருக்கு எங்கே தெரியப் போகிறது என்கிற என் கணிப்புத் தவறு. தமிழ்நாடு என்று நசீர் சொன்னதிலிருந்து நசீர்-சகீர் அலியின் நெருக்கத்தை என்னால் உணர முடிந்தது.

எங்கள் உணவு தயாராகிவிட்டதா என நசீர் உள்ளே பார்க்கப் போக, “உங்களுக்கு நசீர்-இந்த அலிஜா எப்படிப் பழக்கம் என்ற கேட்டிருந்தேன்” என சுரேஷ்குமாருக்கு நினைவூட்டினேன்.

“நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க. எங்க பல்கலைக் கழகத்துல இந்தியன் கல்சுரல் ஆசோசியேஷன் என்று ஓர் அமைப்பு உண்டு. அண்மையில் முடிந்த தீபாவளியன்று, அதைக் கொண்டாட முடிவு செய்தோம்.”

“எவ்வளவு பேர் உறுப்பினர் இந்தியன் கல்சுரல் அசோசியேஷன்ல?”

“300 பேர்.”

“அடேயப்பா. இந்த ஊருக்கு இந்த எண்ணிக்கை மிகப் பெரிய விஷயம்”.

“ஆமா, கேட்டதுக்கு ஒருத்தர்கூட மறுக்கலை”.

“சரி அந்த விழாவுல?”

“உணவுத் தயாரிப்பு பெரிய வேலையாகப்பட்டது. இங்கே உள்ள எதாச்சும் ஓர் ஒட்டல்ல ஆர்டர் கொடுத்துடலாம்னு தேடினோம். இங்கே நமக்குப் பொருந்துற மாதிரி 20-25 ஓட்டல்கள் இருக்கு”.

‘ஓ! அவ்வளவு இருக்கா? பரவாயில்லையே!”

“ஒரே ஒரு தமிழக உணவகம் கூட உண்டு. இட்டிலி, வடை, தோசையெல்லாம் கிடைக்கும்.”

“எப்படி இருக்கும்?”

“வேண்டாம் கேட்காதீங்க.”

“சரிசரி, விட்டுடறேன். இந்தியன் கல்சுரல் அசோசியேஷன் உணவு முடிவு என்னாச்சு?”

“அன்னைக்கு முடிவானதுதான் அலிஜா ஓட்டல்.”

“அட, இந்தியத் தீபாவளி உணவு பாகிஸ்தான் ஓட்டலிலிருந்து! வித்தியாசமா இருக்கே”

“எங்களுக்கெல்லாம் ஒரே பயம். பெயரைக் கெடுத்துடுவாரேன்னு. பிரமாதப்படுத்திட்டார் நசீர். அதுலேர்ந்து எங்க மாணவர்களுக்கு அலிஜா ஓட்டல் பிடிச்சுப் போச்சு. நசீரே ஓடியாடி எங்களைக் கவனிச்சார். ரொம்ப நல்ல பேரை எடுத்துட்டார். எங்க மாணவர்கள் எல்லோருக்குமே நசீர்னா பிடிக்கும். அப்படி அறிமுகமானதுதான் இந்த ஓட்டல்.”

“சுவாரசியமா இருக்கு உங்க அறிமுகம்.”

“சைவம் அசைவம் ரெண்டுமே பிரமாதமாக இருந்துச்சு. இதை நம்பித்தான் உங்களை இங்கே கூட்டிட்டு வந்தோம். தந்தூரி வகைளில் இவுங்க ரொம்ப எக்ஸ்பர்ட்.”

“பொதுவாக தைவானியர்களின் உணவுப் பழக்கத்தைப் பற்றிச் சொல்லுங்க.”

உணவு வகைகள் வந்தன. ஏகமாய்ச் சொல்லிவிட்ட மாதிரித் தெரிந்தது.

“வீணாயிடப்போகுது. நான் மிகக் குறைவாகவே சாப்பிடுகிறவன்.”

“நல்லாச் சாப்பிடுங்க. வீணாகுறதைப் பத்திக் கவலைப்படாதீங்க.”

“அப்படியில்லை சுரேஷ்குமார். உணவை மட்டும் வீணாக்கக் கூடாது. அதற்காக வீணாகுதேன்னு வயிற்றைப் போட்டுக் குப்பைத் தொட்டி மாதிரி அடைக்கிறதுலேயும் எனக்கு உடன்பாடு இல்லை.”

“தெரியும் உங்களைப் பத்தி. நாங்க நல்லாச் சாப்பிடுவோம்ல?”

“அப்படீன்னா சரி.”

“தைவானியர்களின் உணவுப் பழக்கத்தைப்பத்திக் கேட்டீங்க. உணவு விஷயத்துல தைவானியர்களைப் போன்ற இரசனை உள்ளவர்களைப் பார்ப்பது கடினம்!”

“எந்த விதத்துல?”

“வீட்ல சமைக்கிறதை விட வெளியில சாப்பிடுறதைத்தான் ரொம்ப விரும்புவாங்க”.

“சீனர்களும் இப்படித்தான்.”

“சீனர்கள் இப்படிச் சாப்பிடுவார்களான்னு தெரியலை. இந்த வாரம் பிரெஞ்ச் ஓட்டல். அடுத்த வாரம் கொரியன் உணவு. அதுக்கு அடுத்த வாரம் இந்த உணவகம்ன்னு மாற்றிமாற்றிச் சாப்பிடுவாங்க.”

“நம்ம உணவை விரும்பிச் சாப்பிடுறாங்களா?

“நல்லா. ஆனால் இந்திய உணவுன்னாலே இங்கே வடஇந்திய ஓட்டல்தான் அதிகமாக கிடைக்குது. நல்ல தரமான தென்னிந்திய உணவை இவுங்க இன்னும் சாப்பிடலை என்பேன். அதற்கு ஏற்ற நல்ல உணவகம் இங்கே இல்லை. புதுவகை உணவாகத் தேடித் தேடிச் சாப்பிடுவது தைவானியர்களின் இயல்பு. இப்படி யாராவது உலகில் இருக்கிறார்களா லேனா சார்.”

“அநேகமாக இல்லைதான்!”

“அதுமட்டுமல்ல, பிறநாட்டுக் கலாசாரங்கள் பற்றி ரொம்ப ஆர்வம் காட்டுவாங்க. அது என்ன, இது என்னன்னு கேட்டுக் குடைஞ்சிடுவாங்க. அவுங்களுக்கு விளக்கம் சொல்லவே நம் கலாசாரத்தில் நமக்கு ஏகமாய்த் தெளிவு தேவை.”

“வாரம் முழுக்கவா புதுப்புது உணவகங்களுக்குப் போவாங்க?”

“இல்லையில்லை. வாரத்தில் ஐந்து நாள் தங்கள் உணவு. வீக் எண்ட்களின்போது புதுநாட்டு உணவுகள்.”

“நல்ல கொள்கை”.

“நாம என்ன பண்றோம்? எந்த நாட்டுக்குப் போனாலும் எங்கே இட்லி, எங்கே தோசை என்று தேடுவோம். தைவானியர்கள் அப்படி இல்லை. உலக உணவுகளை ஒரு வலம் வந்துவிடத் துடிப்பார்கள். இந்திய ஓட்டலில் ஒரு முறை சாப்பிட்ட உணவை மறுபடி தேடிப் போகாமல், அந்த ஓட்டலில் வேறு என்னென்ன சாப்பிட விட்டுட்டோம்னு தேடுவாங்க.”

‘அடப் புதுமையா இருக்கே.”

அலிஜா உணவு பரவாயில்லை. சாப்பிட்டு முடிந்து பில் கேட்ட போது எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெரிய பில் தொகையாக்கும்? என்கிறீர்களா?

அதுதான் இல்லை.

“முதல் முறையாக என் ஓட்டலுக்கு ஒரு பிரபல (?) எழுத்தாளர் வந்திருக்கிறார். அவருக்கு இந்த உணவு என் அன்பளிப்பாக இருக்கட்டும்” என்றாரே பார்க்கலாம் அந்த ஓட்டல் உரிமையாளர் நசீர்!

நாங்கள் எங்கள் முகங்களை ஒருவரை ஒருவர் திகைப்புடன் பார்த்துக்கொண்டு சிலைகளானோம்.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Posts Title


Leave a Reply