89% polling in Tirumangalam
திருமங்கலம் மக்கள் சாதனை: 89% வாக்குப்பதிவு

திருமங்கலம்: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 88.8 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தேர்தல் வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனை எனக் கருதப்படுகிறது.
திருமங்கலம் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 647. இதில் ஆண்கள் 76ஆயிரத்து 726 பேர். பெண்கள் 78 ஆயிரத்து 921 பேர்.
திருமங்கலம் ம.தி.மு.க. உறுப்பினர் வீர. இளவரசன் இறந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது.
தி.மு.க. சார்பில் லதா அதியமான், அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க.சார்பில் தனபாண்டியன், ச.ம.க. சார்பில் பத்மநாபன் உள்பட 26 பேர் போட்டியிட்டனர்.
மொத்தம் உள்ள 190 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 6.30 மணி முதலே வாக்குப்பதிவு நடக்கத் துவங்கியது. மாலை 5.30 மணிவரையிலும்கூட வாக்குப் பதிவு தொடர்ந்து அமைதியாக நடைபெற்றது. பெண் வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு முழுவதும் விடியோ வில் பதிவு செய்யப்பட்டது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, தேர்தல் பார்வையாளர்கள் சுனில்குமார் குஜூர், ஆனந்தசிங் ஆகியோர் ஒவ்வொரு வாக்குச்சாவடியாகச் சென்று கண்காணித்னர்.
அசம்பாவிதம் ஏதுமின்றி இந்த இடைத் தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 88.8 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.
வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னனு இயந்திரங்கள் தேர்தல் ஏஜெண்டுகளின் முன்னிலையில் சீலிடப்பட்டு, மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு துணை ராணுவம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை மதியத்திற்குள் முடிந்து முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படும்.
திருமங்கலம் தேர்தல் அதிகாரி ராமச்சந்திரன் கூறுகையில், ”இந்தத் தேர்தலில் 88.8 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த அளவிற்கு இதுவரை எந்தத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்திருக்க வாய்ப்பில்லை. திருமங்கலம் தொகுதி சாதனை படைத்திருக்கிறது” என்றார்.
அதிக அளவிலான வாக்குப்பதிவு எந்தக் கட்சிக்குச் சாதகமாக இருக்கும் என்பது தேர்தல் முடிவின்போது தெரியும்.
Related Posts Title
Tags: tirumangalam bypoll, ச.ம.க., திருமங்கலம் இடைத் தேர்தல், நரேஷ் குப்தா, முத்துராமலிங்கம், லதா அதியமான்