Actor Nagesh is no more

Posted on Saturday 31 January 2009

nagesh.jpgநகைச்சுவை சிகரம் சரிந்தது… நாகேஷ் மறைந்தார்

சென்னை: பழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட குடும்பத்தில் 1933-செப். 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் தமிழ்த் திரையுலகின் அசைக்க முடியாத நகைச்சுவை மற்றும் குணச்சி்த்திர நடிகராக மாறினார்.

சென்னையில் மேற்கு மாம்பலத்தில் ஒரே அறையில் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் தங்கியிருந்தார்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் ரெயில்வேயில் பணியாற்றினார். ரெயில்வேயில் பணியாற்றிய போது அங்கு நடைபெற்ற ஒரு நாடகத்தில் வயிறு வலியால் துடிக்கும் நோயாளியாக நடித்தார். அவரது நடிப்பை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். வெகுவாக பாராட்டினார்.

சின்ன சின்ன வேடங்களில் நாடகங்களில் நடித்து வந்த பின்னர் தயாரிப்பாளர் பாலாஜி உதவியுடன் அவர் சினிமாவில் நடிக்க வந்தார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடங்களில் அவர் நடித்துள்ள போதிலும் இன்றும் திருவிளையாடல் படத்தில் சிவாஜியுடன் அவர் நடித்த தருமி வேடம் எல்லோர் மனத்திலும் நீங்காத இடம்பெற்றது.

எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களில் நடித்தவர் நாகேஷ். குறிப்பாக வேட்டைக்காரன், எங்க வீட்டுப் பிள்ளை, அன்பே வா, ஆயிரத்தில் ஒருவன் என அவர் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களின் மக்களின் மனங்களை கவர்ந்தவை.

ரஜினி - கமல் காலத்திலும் அசராமல் தாக்குப் பிடித்தவர் தான் நாகேஷ்.

நம்மவர் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருது நாகேஷுக்குக் கிடைத்தது.

திரையில் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், நாகேஷ் நீண்ட நாட்களாகவே சர்க்கரை வியாதி மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மூன்று மகன்கள். ஆனந்தபாபு மட்டுமே திரையுலகுக்கு வந்தார். மற்றவர்கள் வேறு தொழில்கள் செய்து வருகின்றனர்.

நாகேஷின் மறைவுச் செய்தி அறிந்ததும் திரையுலகினர் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோரமா, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வாலி உள்ளிட்டோர் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

admin @ 3:36 am
Filed under: kollywood
Muthukumar’s cremations today

Posted on Saturday 31 January 2009

முத்துக்குமார் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி:
சனிக்கிழமை மாலை உடல் தகனம்

muthukumar2.jpg

சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்க கோரி தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது

முத்துக்குமாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் உடலுக்கு, தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்து இளைஞர்கள், வக்கீல்கள், மருத்துவ மாணவர்கள், சட்ட மாணவர்கள், பல்வேறு கல்லூரிகளின் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்

அன்னை சத்யா நகர் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள கொளத்தூர் நாடார் சங்க அலுவலகம் அருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள முத்துக்குமார் உடலுக்கு, இந்திய கம்ïனிஸ்டு தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமையில் கட்சி தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், முத்துக்குமார் தந்தைக்கு நல்லகண்ணு ஆறுதல் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி எம்.பி., வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குரு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், துணைசெயலாளர் மகேந்திரன், திராவிடர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆஸ்டின், நெல்லை அமுதன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க. அகில இந்திய பொதுச்செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், கவிஞர் காசி முத்துமாணிக்கம். தே.மு.தி.க. சார்பில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர். தனபாலன், பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ், தமிழ் தேச பொதுவுடைமை கட்சி தலைவர் மணியரசன், பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் முத்துக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஷரவண சுப்பையா, அமீர், சேரன், வி.சி. குகநாதன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேல், ஆர்.சுந்தரராஜன், பாடலாசிரியர் தாமரை ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து முத்துக்குமார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது, அவர்கள் ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள்.

முத்துக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொளத்தூர் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மாணவர்களும், பெரும் திரளான இளைஞர்களும், பிறரும், முத்துக்குமாரின் லட்சியம் ஈடேறும் வரை உடலை தகனம் செய்ய விட மாட்டோம். முடிந்தவரை போராடுவோம் எனக் கூறி இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை தடுத்தனர்.

பல்வேறு கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் அவர்கள் கேட்பதாக இல்லை. இதனால் வெள்ளிக்கிழமை மாலை இறுதிச் சடங்குகளை நடத்த முடியவில்லை.

மாலையில் புரசைவாக்கம், ஓட்டேரி ஆகிய பகுதிகளிலும் இறுதி ஊர்வலம் வரும் என்று கருதி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. கொளத்தூரில் வெள்ளிக்கிழமை பஸ் போக்குவரத்தும் நடைபெறவில்லை.

கொளத்தூர் சுற்றுவட்டார நாடார் முன்னேற்ற சங்கம், நாடார் நல சங்கம், பூம்புகார் வட்டார வியாபாரிகள் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் சார்பில் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் என்று படத்துடன் ஏராளமான சுவரொட்டிகள் கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன.

முத்துக்குமார் உடல் வைத்திருக்கும் இடத்தின் அருகே உள்ள கொளத்தூர் மெயின் ரோட்டில் பல்வேறு மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் மத்திய, மாநில அரசை கண்டித்தும், இலங்கை அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால், அந்த பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வடசென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., தலைமையில் தி.மு.க. தொண்டர்கள் நேற்று பிற்பகல் முத்துக்குமார் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்தி வெளியே வந்த போது, அங்கிருந்த சிலர் வி.எஸ்.பாபு மீது கற்களை வீசினர். காவல்துறையினரும், தி.மு.க. தொண்டர்களும் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சில தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர். அவற்றை எரிக்கவிடாமல் தடுத்த காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டன.

முத்துக்குமாரின் உடல் சனிககிழமை மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மூலக்கொத்தளத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரின் இறுதி ஊர்வலத்தி்ல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்கிறார்கள்.

admin @ 2:34 am
Filed under: srilanka news
UN warns Lanka govt.,

Posted on Saturday 31 January 2009

கொல்லப்படும் பொதுமக்கள்: இலங்கைக்கு ஐ.நா., எச்சரிக்கை

லங்கை போரில் பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருவது குறித்து இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் நவி பிள்ளை வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இலங்கையில நடக்கும் போரில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். அங்கு மனித உரிமை மீறல்கள் அப்பட்டமாக நடக்கிறது.

இது தொடர்பாக ஐ.நா., பொதுச் செயலாளர் மனித உரிமைகள் அமைப்பு மற்றும் உயர் அதிகாரிகள் இலங்கை அரசிடம் கவலை தெரிவித்துள்ளனர். எசச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

தற்போது ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் முல்லைத் தீவு பகுதியில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது

கடந்த நவம்பர் மாதம் முதல் தற்போது வரை புலிகள் வசமுள்ள பகுதியில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் அரசு கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்துள்ளனர்” என அவர் தெரிவித்தார்.

பாதுகாக்கப்பட்ட பகுதி எனக் கூறி, மக்களை வரவழைத்துவிட்டு அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில ஐ.நா., அமைப்பின் மனித உரிமைகள் செய்தித் தொடர்பாளர் கார்டன் வெயிஸ் கூறுகையில், ”போரில் காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன. போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்” என்றார்.

admin @ 1:57 am
Filed under: srilanka news
Palam Kalyanasundaram donates Rs.1 lakh

Posted on Friday 30 January 2009

ஓய்வூதியத்திலிருந்து ரூ.1 லட்சம் நன்கொடை:
பாலம் கல்யாண சுந்தரம் தா(னம்)ராளம்

palam-kalyanasundaram.jpg

சென்னை : பாலம் அமைப்பின் நிறுவனர் கல்யாண சுந்தரம் தமிழக அரசு அளித்த பொங்கல் பரிசில் இருந்து ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஓய்வூதியம் மற்றும் பொங்கல் பரிசில் இருந்து இந்த நன்கொடையை அவர் அளித்துள்ளார்.

6 ஆவது ஊதியக்குழு பரிந்துரையினால் இந்தியாவில் 3கோடி பேரும், தமிழ்நாட்டில் மட்டும் 20 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனர். இதில் பாலம் கல்யாணம் சுந்தரம் மட்டுமே நன்கொடை அளித்துள்ளார்.

இதுகுறித்து பாலம் கல்யாண சுந்தரம் கூறும்போது, ”அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இதுபோன்று பெரிய தொகைகள் கிடைக்கும்போது அதனை நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்துவது மிகவும் சிறந்ததாகும்” என்றார்.

admin @ 11:35 pm
Filed under: news
TN govt gives Rs.2 lakhs to Muthukumar family

Posted on Friday 30 January 2009

muthukumark.jpgமுத்துக்குமார் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 2லட்சம் நிதியுதவி
 
சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி தீக்குளித்து உயிர் நீத்த வாலிபர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சட்டசபையில் வெள்ளிக்கிழமை ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

”முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

admin @ 11:18 pm
Filed under: news
Two week ban for Jallikkattu

Posted on Friday 30 January 2009

ஜல்லிக்கட்டுக்கு இரு வாரத் தடை!

டெல்லி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பி்ப்ரவரி 13 வரை இரு வாரகாலங்களுக்கு தடைவிதித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் உத்தரவைப் பிறப்பித்தது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிராணிகள் நல வாரியம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சமீபத்தில் பொங்கல் விழாவின்போது நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கடுமையான விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது.

இப்போட்டியால் மாடுகளுக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பேராபத்து என்றும், அதனால் இதை தடை செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

கடந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம். பின்னர், கடும் நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது.

இந்நிலையில் இவ்வாண்டு நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுகளின்போது 21 பேர் இறந்தனர். 1614 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான  புகைப்பட ஆதாரங்களுடன் பிராணிகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகியது. இவ்வமைப்பு சார்பில் வாதாடிய வக்கீல் கே.கே.வேணுகோபால்,  ‘உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டதாக’ கூறினார்.

தமிழக அரசு வக்கீல் அதற்கு பதில் கூற இரண்டுவார கால அவகாசம் கோரினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை  பிப்ரவரி 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன், அதுவரை ஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவிட்டனர்.

admin @ 10:44 pm
Filed under: news
Bhupathi, Sania enters finals in Austrelia Open Tennis

Posted on Friday 30 January 2009

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: இறுதி ஆட்டத்தில் பூபதி - சானியா ஜோடி

bhupathi-sania.jpg

மெல்போர்ன் : ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்திற்கு இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயினின் ரபெல் நடால் முன்னேறினார் .

மெல்போர்னில் வெள்ளிக்கிழமை நடந்த கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி, செக் குடியரசின் இவேடா பெனிசோவா, லூகாஸ் லூயி ஜோடியை எதிர்த்து களமிறங்கியது. இப்போட்டியின் முதல் செட்டில் இந்திய ஜோடி 1-3 என் பின்தங்கியிருந்தது. பின்னர் போராடி 6-4 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பூபதி, சானியா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.

இவ்வெற்றியின் மூலம் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி, சானியா மிர்சா ஜோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த சானியா, பூபதி ஜோடி இம்முறை சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்திற்கு பூபதி, நோவல்ஸ் ஜோடி தகுதி பெற்றுள்ளனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் ஜோடி, ஸ்லோவேகியாவின் டேனிலா ஹண்டுசோவா, ஜப்பானின் அய் சுகியாமா ஜோடியுடன் மோதியது. இதில் வில்லியம்ஸ் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இரட்டையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

சாதிப்பாரா செரினா?: இரட்டையரில் வீனசுடன் இணைந்து பட்டம் வென்றுள்ள செரினா வில்லியம்ஸ், இன்று நடக்கும் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டினரா சபினாவுடன்மோதுகிறார். இப்போட்டியில் செரினா வெற்றி பெறும் பட்சத்தில் 10 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லலாம்.

ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் உலகின் நம்பர்-1 வீரரான ரபெல் நடால், சக வீரரான வெர்டாஸ்கோவுடன் மோதினார். துவக்கம் முதலே இருவருக்கும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் நடால் 6-7, 6-4, 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் வெர்டாஸ் கோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் நடால், பெடரரை சந்திக்க உள்ளார்.

admin @ 10:03 pm
Filed under: news
Defence help to Lanka: Karunanidhi reply to Jaya

Posted on Friday 30 January 2009

karunanidhi1.jpgராணுவ உதவி: மாநில அரசைக் கேட்பதில்லை மத்திய அரசு:
ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி பதில்

சென்னை : ‘வெளிநாடுகளுக்கு ராணுவ உதவிகள் செய்ய, மாநில அரசுகளையோ மத்திய அமைச்சர்களையோ மத்திய அரசு கேட்டு செயல்படுவதில்லை’ என்று கருணாநிதி கூறியுள்ளார்.

வியாழக்கிழமை ஜெயலலிதா விடுத்த கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.

கருணாநிதியின் அறிக்கை விவரம் வருமாறு:

கடும் முதுகுவலி, விலாப்புற வலியால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் என்னிடம் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். அவரது கேள்விகளும் என் பதில்களும் வருமாறு:

தமிழ் மண்ணில் ராஜிவ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை கருணாநிதி ஆதரிக்கிறாரா?

கடந்த 1991ம் ஆண்டு பொதுத் தேர்தல் நேரத்தில், தேர்தல் கூட்டணித் தலைவராக ராஜிவ் இருந்தார். கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரசாரம் செய்வதற்காக சென்னைக்கு விமானம் மூலம் அவர் வந்தார். அப்போது அவரை வரவேற்க கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க., சார்பில் யாரும் போகவில்லை என்பது உண்மையா? பொய்யா? உண்மை என்றால் ராஜிவ் படுகொலை அ.தி.மு.க.,வினருக்குத் தெரிந்துள்ளது என்று தானே நினைக்க வேண்டியுள்ளது. மைனாரிட்டி அரசின் முதல்வராக பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது வெட்கமாக இல்லையா என்று ஜெயலலிதா கேட்டுள்ளார். மைனாரிட்டி மக்களுக்குத் தொண்டாற்றுவதைப் பெருமையாகக் கருதுபவன் நான். சோனியாவை வெளிநாட்டுக்காரி என்று விமர்சனம் செய்துவிட்டு, பின் அவருடன் தோழமை கொள்வதற்காக டில்லியில் தேநீர் விருந்து வைத்தபோது இவரது வெட்கம் எங்கே போயிற்று?

இலங்கைத் தமிழர்களுக்காக இன்றளவும் இலங்கை ராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும், நவீன சாதனங்களையும் இந்திய அரசு இலங்கை அரசுக்குக் கொடுத்தபோது கருணாநிதி என்ன செய்து கொண்டிருந்தார்?

மத்திய அரசின் சார்பில் வெளிநாடுகளுக்கு ராணுவ உதவிகள் அனுப்புவதைப் பற்றி மாநில அரசுகளைக் கலந்துகொண்டோ, மத்திய அமைச்சர்களைக் கலந்து கொண்டோ செய்யப்படுவதில்லை என்ற சிறு விஷயம் கூட பத்தாண்டு காலம் முதல்வராக இருந்த ஒருவருக்குத் தெரியாமல் இருப்பது வேதனை. மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி ஆகியோர் இலங்கைக்கு இந்திய அரசு ஆயுதங்களை அனுப்பியதாகத் தெரிவிக்கவில்லை. மாறாக, அதை மறுத்தும் உள்ளனர்.

காஷ்மீர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் நிலவும் பிரிவினை கோரிக்கை குறித்து கருணாநிதி மற்றும் தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன?

தி.மு.க., பிரிவினைக் கொள்கை குறித்து அண்ணா தன் கைப்படவே, ‘எண்ணித் துணிக கருமம்’ என்ற தலைப்பில் நூலாகவே எழுதி வைத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதையெல்லாம் படிக்க நேரம் இருந்திருக்காது. மேலும், தி.மு.க., கொள்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், தி.மு.க., சட்டப்புத்தகத்தில் விதி 2 மற்றும் விதி 3 ஆகியவற்றைப் படித்துப் பார்க்கட்டும்’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

admin @ 8:48 pm
Filed under: srilanka news
LTTE should announce ceasefire on war: Minister Anbazhagan

Posted on Friday 30 January 2009

kanbazagan.jpgபுலிகளும் போரை நிறுத்த வேண்டும்: அமைச்சர் க.அன்பழகன்

சென்னை : விடுதலைப் புலிகளும் போரை நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அமைச்சர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

இலங்கையில் அறிவிக்கப்பட்ட 48 மணி நேர போர்நிறுத்தம் குறித்து பேரவையில விவாதிக்கப்பட்டது.

பீட்டர் அல்போன்ஸ்: இலங்கையில் 48 மணி நேர போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. போரே நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் நமது விருப்பம். போரில் அவதிப்படும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லவேண்டும் என போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது நமக்கு கிடைத்த வெற்றி. முதல்வர் கருணாநிதியின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கையில் அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். தமிழக காங்கிரஸ் கட்சியின் நான்கு பேரை பட்டியலிட்டு, அவர்களைக் கொல்வோம் எனக் கூட கடிதம் வந்துள்ளது. மிரட்டலுக்கு காங்கிரசார் அஞ்சமாட்டார்கள்.

சிவபுண்ணியம்(இ.கம்யூனிஸ்ட்): போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி அரசியல் தீர்வு காணவேண்டு்ம். 48 மணிநேர அவகாசத்தில் இலங்கை ராணுவம் தன்னை வலுப்படுத்த முயற்சிக்கும். அதற்குப் பதிலாக அரசியல் தீர்வு காண முயலவேண்டும். போரை நிறுத்த மத்திய அரசு தொடர்ந்து முயலவேண்டும். இருதரப்பும் ஆயுதங்களை கீழே போடவேண்டும். போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: விடுதலைப் புலிகள் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவாக்கவேண்டும்.

சிவபுண்ணியம் (இ.கம்யூனிஸ்ட்): புலிகளின் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம்.

அமைச்சர் க.அன்பழகன்: ”ஈழத் தமிழர்களின் பிரச்னையை விட, அதில் திமுகவின் மனநிலை என்ன என்பதிலேயே கவனம் இருக்கிறது. நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்படவேண்டும். இலங்கைப் பிரச்னையில் போர் என்று பல படிகள் சென்றுவிட்டார்கள். இதை நிறுத்த ஒவ்வொரு அடியாகத் தான் எடுத்து வைக்கவேண்டும்.

பிரணாப் முகர்ஜி முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார். தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளை ஏற்றே ராஜபக்சே 48 மணிநேர போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதை ஏற்று, நாங்களும் ஒத்துழைக்கத் தயார் என்று புலிகள் சொன்னார்களா? இல்லை. அதைத்தான் காங்கிரசார் வலியுறுத்துகின்றனர்.

தேர்தலை மனதில்கொண்டு நாம் வேகமாக அடியெடுத்து வைக்கலாம். இலங்கைப் பிரச்னையில் அவர்கள் வேகமாக அடியெடுத்து வைக்கமுடியாது. போர்நிறுத்தத்துக்கு தயார் என்ற நல்லெண்ணத்தை இலங்கை அரசிடம் வளர்க்க வற்புறுத்துவோம். ஈழத் தமிழர்களை காப்பதே திமுகவின் நோக்கம்” என்றார்.

admin @ 8:28 pm
Filed under: srilanka news
Kutralanaathar temple

Posted on Friday 30 January 2009

kutralanaathar.jpgகுற்றாலநாதர் திருக்கோயில்

யிலாயத்தில் சிவன் பார்வதியை மணந்தபோது, உலகை சமப்படுத்த அகத்தியரை தென்திசைக்கு அனுப்பினார். குற்றாலம் வந்த அகத்தியர் சிவலிங்க பூஜை செய்ய விரும்பினார். ஓரிடத்தில் பெருமாள் கோயில் இருந்ததைக் கண்டார். மூலஸ்தானத்தில் இருந்த பெருமாளின் தலை மீது கை வைத்து, ‘குறு குறு குற்றாலநாதா!’ என்றார். பெருமாள் குறுகி, சிவலிங்கமாக மாறினார். இவரே இங்கு, ‘குற்றாலநாதர்’ என்ற பெயரில் அருளுகிறார். ‘ஹரியும், சிவனும் ஒன்று!’ என்பதை உணர்த்தும்விதமான இரு மூர்த்திகளும் அகத்தியர் மூலமாக இவ்வாறு ஒரு திருவிளையாடலை இத்தலத்தில் நிகழ்த்தினார்.

குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் நடராஜர் நாட்டியமாடும் பஞ்சசபைகளில் ஒன்றான சித்திரசபை இருக்கிறது. ஒரு கோயிலின் அமைப்பிலுள்ள இந்த இடம் தாமிரத் தகடால் வேயப்பட்டுள்ளது. இந்த சபையில் நடராஜர், ஓவிய வடிவில் திரிபுரதாண்டவ மூர்த்தியாக காட்சி தருகிறார். பெருமாளை சிவனாக மாற்றிய வரலாறு, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைளால் வரையப்பட்டுள்ளது.

மார்கழி திருவாதிரையின்போதும், சித்திரை பிரம்மோற்ஸவத்தின் போதும் நடராஜர் சன்னதியில் விசேஷ தீபாராதனையுடன் பூஜை நடக்கும். இவ்வேளையில் நடராஜரின் நடனத்தைப் போலவே தீப தட்டை நளினமாக அசைத்து சுவாமிக்கு ஆராதனை செய்வர். இதை, ‘தாண்டவ தீபாராதனை’ என்கின்றனர். சிவன், ஜோதி ரூபமானவர் என்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு செய்யப்படுகிறது.

பிரகாரத்தில் மகாவிஷ்ணு, ‘நன்னகரப் பெருமாள்’ என்ற பெயரில் அருளுகிறார். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நன்மைகள் தருபவர் என்பதால் இவருக்கு இப்பெயர். அருகில் கிருஷ்ணரும் இருக்கிறார். ரோகினி நட்சத்திர நாட்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. முற்காலத்தில் சிவன் சன்னதியில் இருந்த பெருமாளே, இங்கு எழுந்தருளியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பல வித உணவு வகைகளை சுவாமிகளுக்கு நைவேத்யம் படைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு மூலவருக்கு கஷாய நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சிவனுக்கு, கடுக்காய் கஷாயம் நைவேத்யம் படைக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் கஷாயத்தை ‘குடினி’ என்பர். எனவே இதற்கு ‘குடினி நைவேத்யம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். அருவி விழும் இடத்தில் இருப்பதால் சிவனுக்கு ஜுரம், குளிர் காய்ச்சல் உண்டாகாமல் இருக்க சிவன் மீதான அன்பின் காரணமாக இவ்வாறு செய்யப்படுகிறது. சுக்கு, மிளகு, கடுக்காய் உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து ‘குடினி’ தயாரிக்கப்படுகிறது.

பிரகாரத்திலுள்ள முருகன், கையில் வில்லேந்தியபடி காட்சி தருகிறார். இவருடன் வள்ளி, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தபடி இருக்கின்றனர். ஆடிஅமாவாசையன்று கோயில் முழுவதும் 1008 தீபம் ஏற்றும், ‘பத்ர தீப’ விழா இங்கு வெகு விமரிசையாக நடக்கும்.

சிவன், மணக்கோலநாதர் என்று பெயரில், அம்பிகையை மணம் முடித்த கோலத்தில் பிரகாரத்தில் காட்சி தருகிறார். அருகில் திருமணத்தை நடத்தி வைத்து பிரம்மா, தாரை வார்க்கும் கோலத்தில் விஷ்ணு, மகாலட்சுமி, திருமணக்காட்சி பெற்ற அகத்தியர் மற்றும் பிருங்கி உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் இவர்களுக்கு மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து பாயசம் நைவேத்யம் செய்து வழிபடுகிறார்கள்.

சக்தி பீடங்கள் 64ல் இது, ‘பராசக்தி பீடம்’ ஆகும். அகத்தியர் திருமால் தலத்தை சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய்மொழி நாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினார். குரல் வளம் சரியாக இல்லாதவர்கள், பிறப்பிலேயே பேசாதிருப்பவர்கள் அம்பிகை, குழல்வாய்மொழி நாயகிக்கு சர்க்கரைப் பொங்கல், வடை படைத்து வழிபடுகிறார்கள். ஐப்பசி பூசத்தன்று நடக்கும் திருக்கல்யாண சிவன், அம்பாள் இருவரும் அகத்தியர் சன்னதி அருகில் எழுந்தருளி திருமணக்காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

லிங்க வடிவமான குற்றாலநாதர் மீது, அகத்தியரின் விரல் பதிந்த தடம் இருக்கிறது. அது சிவனுக்கு வலிக்குமே என்ற ரீதியில், மனம் நெகிழ்ந்த பக்தர்கள் அன்பின் காரணமாக லிங்கத்தின் தலையில், குற்றால மலையில் கிடைத்த மூலிகைகளால் ஆன தைலம் செய்து தேய்த்தனர். இவ்வழக்கம் இப்போது இருக்கிறது. தினமும் காலை 9.30 மணி பூஜையில், லிங்கத்தின் உச்சியில் தைலம் தடவுகின்றனர். பசும்பால், இளநீர், சந்தனம் மற்றும் 42 விதமான மூலிகைகள் சேர்த்து 90 நாட்கள் தொடர்ச்சியாக வேக வைப்பார்கள். இந்த மருந்து கலவையில், செக்கில் ஆட்டிய சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து தைலம் தயாரிக்கின்றனர். இதை பக்தர்களுக்குபிரசாதமாகவும் தருகின்றனர். தலைவலி உள்ளவர்கள் இத்தைலத்தை தடவுகிறார்கள்.

இக்கோயிலில் பராசக்தி ஸ்ரீசக்ர அமைப்பிலுள்ள பீட வடிவில் காட்சி தருகிறாள். பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு ‘தரணி பீடம்’ (தரணி - பூமி) என்று பெயர். இவள் உக்கிரமானவன் என்பதால், இவளுக்கு எதிரே சிவலிங்க பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், ‘காமகோடீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த அம்பிகை இருப்பதால், பவுர்ணமியன்று இரவில் இப்பீடத்திற்கு ‘நவசக்தி’ பூசை செய்கின்றனர் அப்போது, பால், வடை படைக்கப்படும். பவுர்ணமி, நவராத்திரி நாட்களில் இந்த பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.

Devotional collection list

2008/12/24 இரட்சகன் இயேசு!

2008/12/12 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

2008/11/21 சென்னிமலை முருகன்

2008/10/24 கயிலையே மயிலை, மயிலையே கயிலை!

2008/10/17 கலியுகக் கடவுள் ஸ்ரீஜெகந்நாத்

2008/10/10 சைதை திருக்காரணீஸ்வரர் ஆலயம்

2008/10/03 நலம் தரும் நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர்

2008/09/26 தேனாம்பேட்டை ஸ்ரீஆலையம்மன்

2008/09/19 சமயத்தில் உதவும் சமயபுரம் மாரியம்மன்!

admin @ 8:46 am
Filed under: Uncategorized