» 2008/06/13 Junior Kelvi Pathil .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday 13 June 2008

2008/06/13 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ந.இளங்கோ, ராணிப்பேட்டை.

ஆயிரம் புதிய பேருந்துகளின் வரவால் தமிழகம் களைகட்டி விட்டதே?

மொஹஞ்சதரோ - ஹரப்பா காலத்துச் சாலைகளைச் சீர் செய்யாமல் புதிய பேருந்து என்றால், பேருந்துகளில் உள்ள நட்டுகள் தாம் சீக்கிரம் கழலும். புரோகிதர் இளமையாக இருந்து பிரயோஜனமில்லை; மணமக்களும் இளமையாக இருக்க வேண்டும்.


சி.சத்யா, திருவண்ணாமலை.

இன்றைய மத்திய அரசு?

உள்ளுக்குள் அமெரிக்கா; வெளியே இந்தியா! அதுவும் த்ரீ-டியில் பார்த்தால் இந்தப் பரிணாமம் நன்றாகவே தெரியும்.


எஸ்.ஸ்ரீநிவாஸன், கோவிலாம்பூண்டி.

வைகோ எப்படியிருக்கிறார்?

அ.தி.மு.க. தலைவியிடம் எதையும் சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத ஒரு திருநீலகண்டராக இருக்கிறார். இவரது கட்சி இப்போது ஒரு அப்லியேட்டட் யூனியனாகிவிட்டது.

எஸ்.வெங்கடேசன், பொள்ளாச்சி.

சி.பி.எஸ்.இ.யின் ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் ரஜினி பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளதாமே?

மத்திய அரசே விழித்துக் கொண்டது. மாநில அரசு இன்னமும் தூக்கத்தில். இத்தனைக்கும் ரஜினி கல்வி அமைச்சரின் நல்ல நண்பர். இது நன்றாகவா இருக்கு?


ஆர்.டி.கிருஷ்ணன், பெங்களூர்.

இன்று புல்லாகிப் பூடாகிப் போவது எது?

நம் அரசியல்வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள்.


பி.சிவகுமார், சென்னை.

நடிகர் கார்த்திக் ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்கப் போகிறாராமே?

ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் அரசியலில் இன்று பார்வர்டுக்கு வருகிறார்கள். இவர் பார்வர்டில் இருந்து கொண்டே இப்படி பேக்வர்டுக்குப் போகிறார். முத்துராமன் மகனா, கொக்கான்னு இவர் காட்ட வேண்டாமா?


ஆர்.ரவி, திருவேற்காடு.

உங்களைப் புகழ்ந்து பாடினால் பரிசு கிடைக்குமா?

நீங்கள் நினைக்கிற அந்த மன்னர் காலம் இது இல்லை. இது பேனா மன்னர் காலம். ரொம்பவும் புகழ்ந்தால் இரண்டு குயர் பேப்பர் கிடைக்கும். இரண்டு குயர் எவ்வளவு வந்துவிடப் போகிறது.


ஜி.சுகுமார், விருத்தாசலம்.

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழக மாணவ - மாணவிகள் சக்கைப் போடு போட்ட பின்னணிதான் என்ன?

வட்டத் தத்துவம்தான். சுழற்சி முறையில் தமிழகம் வீறு கொண்டு எழுந்தது. பல தனியார் அமைப்புகள் தன்னிகரில்லாச் சேவையில் பயிற்சி வழி அளித்தன. வீறு கொண்டு எழுந்துவிட்டது தமிழகம். இந்த வீரியம் தொடர வேண்டும். வட்டத் தத்துவத்தைச் சொல்லிக் கொண்டு கோழிமுட்டையாக ஆகிவிடக்கூடாது.


எம்.கலைவாணி, வாலாஜாபாத்.

ஒகேனக்கல் திட்டம்?

கலைஞரால், கலைஞருக்காக ஒத்தி வைக்கப்பட்ட கலைஞருடைய முடிவு இது. யாரேனும் இதில் தலையிட்டால் அப்புறம் எல்லை மீறல், உரிமை மீறல் என என்னன்னமோ மீறல்கள் வரும். அந்த சட்டமன்ற விதிகள் நமக்கெல்லாம் அத்துபடி இல்லை.


எம்.ஆசிப், திருவல்லிக்கேணி.

இருந்தால் யார் மாதிரி இருக்க வேண்டும்?

டி.ஆர்.பாலு மாதிரி! சொத்துக்குச் சொத்து. பாதுகாப்புக்குப் பாதுகாப்பு.


வி.செந்தில், போரூர்.

விலைவாசி உயர்வுகளைப் பற்றி?

எங்கள் எம்.எல்.ஏ., ஆற்காடு வீராசாமி சொன்னபடி பார்த்தால், அப்படியொன்றும் விலை ஏறினதாய்த் தெரியவில்லை. நகைக் கடைகளிலும், தியேட்டர்களிலும் பார்த்தபிறகு இந்தக் கேள்வியை நீங்கள் போஸ்ட் செய்திருக்கக்கூடாதா? எனவே, உங்களின் இந்தக் கேள்வியை நான் போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டேன்.


வி.வேதா, கடலூர்.

முன்னாள் முதல்வரை அவரது கட்சிக்காரர்கள் இரவில் போய் சந்திக்க முடியுமா? என்று சட்டமன்றத்தில் வினா எழுப்பிய மீன்வளத்துறை அமைச்சரின் நாகரிகம் பற்றி?

மீன் அழுகிப் போனால் நாறுமே, அதைவிட நாறுகிறது. இந்த மீன்வளத்துறை அமைச்சரின் பேச்சு! மீனுக்கு அழுக்குதான் உணவு என்பதை நிரூபித்துவிட்டார்.


என்.கோபால், திருப்பத்தூர்.

நிலம், நீர், மொழியைப் பாதுகாப்பேன் என்கிறாரே, எடியூரப்பா?

அப்படியானால் காவிரி, ஒகேனக்கல், கர்நாடகத் தமிழர்கள் நலன்பற்றியெல்லாம் நமக்குத் தெளிவுரை வேண்டுமே? இந்தத் தெளிவுரை அவரது இந்த கெய்டில் இருக்குமா?


எம்.குமரேசன், செங்குன்றம்.

அடுத்து அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்கு வருமா?

வாக்காளர் எல்லோரும் அம்மாவாக வேண்டும். அதாவது தாயாக வேண்டும். அப்போதுதான் தாயுள்ளத்தோடு அம்மாவை எல்லோரும் ஆதரிப்பார்கள்.


ஆர்.செல்வம், தாமல்.

வரும் தேர்தலில் ஏதாவது ஒரு கட்சி சார்பில் போட்டியிடலாமா என்றிருக்கிறேன். உங்கள் ஆலோசனை?

கட்சி வேண்டாம்! சுயேச்சையாகப் போட்டியிடுங்கள். சுயேச்சையில்தான் யாரையும் எதிர்க்கலாம். யாரையும் ஆதரிக்கலாம். உங்களின் சந்தை விலையும் கூடும்.


எம்.ஆனந்தன், உடுமலை.

இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை ஆரம்பித்தால் இலாபமா?

தமிழக அரசியலை நம்பியே ஒருவர் பத்திரிகை ஆரம்பிக்கலாம். கொழுத்த இலாபம்! ஜெயலலிதா, கலைஞர், ராமதாஸ், விஜயகாந்த் இந்த நால்வர் அணியின் அறிக்கைகளை நம்பி இருவேளை பதிப்பு ஆரம்பித்தால்கூட அது முழுசாக ஓடும்.


டி.மோகன், பாலுசெட்டி சத்திரம்.

கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் கவாந்த பேச்சு?

சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சியினரின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில், ‘என்னால் எழுந்து நிற்கவும் முடியும்’ என்பதைக் காட்டத்தான் எழுந்து நின்று பேசுகிறேன் என்று சொன்னாரே, அந்த அந்த டைமிங் பேச்சு! அவர் நாவில் இந்த ஜாலம் என்றும் நர்த்தனம் புரியும்.


எஸ்.ரமேஷ், சைதாப்பேட்டை.

பெட்ரோல் விலை பற்றி?

இனி வாகனங்கள் கட்டுபடியாகா. எங்கு போனாலும் நீதி கேட்டு நெடிய பயணம்தான்! என்ன, இந்த பயணங்களுக்கு வீடியோ கவரேஜ் இருக்காது. அதுவொன்றுதான் குறை. மற்றபடி மனசெல்லாம் மத்தாப்புதான். சம்பாதித்ததை சட்டியிலேயே வைத்திருக்கலாம்.


எஸ்.கோபால், மதுரை.

மணல் வியாபாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு சரிதானா?

மணல் விஷயத்தில் தி.மு.க.வின் முடிவு நன்றாகவே ஏலம் போனது.


சி.தாமஸ், பூவிருந்தவல்லி.

2004க்குப்பின் பன்னிரண்டு மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றிருக்கிறதாமே?

ராசிதான் மொத்தம் பன்னிரண்டு என்பார்கள். காங்கிரசின் ராசியும் பன்னிரண்டாக இருக்கே! ஒரு வேளை அந்த ராசிக்கும் இந்த ராசிக்கும் பலன்கள் வேறா?


என்.பாபு, திருச்செங்கோடு.

கர்நாடகத் தேர்தலில் போட்டியிட்ட நடிகர்கள் தோல்வி கண்டது ஏன்?

தமிழகத்தில்தான் ‘மேக்-அப்’புகளுக்கு ஏக கிராக்கி! இங்குதான் அரசியலில் உட்வர்ட்ஸ் கிரைப்வாட்டர் குடிக்கத் தொடங்கிய அடுத்தமாதமே திருமண ஆசை வந்துவிடுகிறது. நாமோ அவர்களின் மாதத்தையும், வயதையும் பார்க்காமலேயே அவர்களுக்குச் செய்து வைக்கிறோம்.


ச.பீனா, சென்னை.

நடுத்தரவாசிகள் நிறைய செலவு செய்கிறார்களே?

ஆமாம். காலணா துணி வாங்கக்கூட நாலணா நொறுக்குத் தீனியும், அரையனா ஆட்டோ செலவையும் எதிர்கொள்கிறார்கள். மீதி தங்கள் காலணியிலேயே போய்ச் சேருகிறார்கள். அதனால்தான் இன்னமும் பலர் காலணியே இல்லாமல் இருக்கிறார்கள்.

06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
Related Post

One Response to “2008/06/13 Junior Kelvi Pathil”

  1. praveen

    why new ac government buses are not in salem

Leave a Reply