இரட்சகன் இயேசு!

உலக மக்களை இரட்சிக்க வந்த இறைமகனாக இயேசு கிறிஸ்து கருதப்படுகிறார்.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் யோசப்பு - மரியா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் அவர்.
இறைவன் இயேசுவின் பிறப்பை அறிவிக்கவேண்டி, கபிரியேல் என்னும் விண்தூதரை கலிலேயாவில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் இருந்த மரியாளிடம் அனுப்பிவைத்தார். மரியாளை தாவீது குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்புக்குத் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
”மரியா, நீங்கள் இறைவனின் அருளைப் பெற்றவர். நீங்கள் கருவுற்று ஒரு மகனை பெற்றெடுப்பீர். அதற்கு இயேசு என்று பெயர் வைப்பீராக. அவர் இறைவனின் மகனாவார். அவரது ஆட்சிக்கு முடிவே கிடையாது” என்று மரியாளிடம் கூறினார் கபிரியேல்.
”நீங்கள் சொல்வது எப்படி நிகழும்? எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே. நான் கன்னிப்பெண் ஆயிற்றே” என்றாள் மரியாள்.
அதற்கு விண்தூதர், ”தூய ஆவி உம்மீது இறங்கும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் படும். ஆதலால், நீங்கள் பெற்றெடுக்கப்போகும் குழந்தை தூயது. தாங்கள் அதுபற்றி கவலைப்படவேண்டாம்” என்று கூறி மறைந்தார் கபிரியேல்.
அந்தக் காலத்தில் பேரரசர் அகஸ்து சீசர் தனது பேரரசு முழுவதும் மக்கள் தொகை கணக்கு எடுக்கச்சொல்ல உத்தரவிட்டிருந்தார். சிரியா நாட்டில் குரேனியு அரசராக இருந்தபோது ஆளுநராக முதல்முறையாக மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டது.
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக யோசேப்பு, திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த மரியாவோடு பெயரை பதிவு செய்ய நாசரேத்தில் இருந்து யூதேயாவில் உள்ள பெத்லகேமில் இருந்த தாவீதின் ஊருக்குச் சென்றார்.
(மரத் தச்சரான (கார்பெண்டர்) யோசப்பு, தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அவரை உடனே திருமணம் செய்துகொண்டதாகவும், பெத்லகேமிற்கு அவர் ஆண்டுவரி கட்டச்சென்றார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இயேசு இஸ்ரேலில் உள்ள பெத்லகேமில் பிறந்ததாலும் மரியாள் யூத இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் இயேசு யூத மதத்தைச் சேர்ந்தவர் என்று ஒரு கருத்தும், இயேசு பெத்லகேமில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு ரோமானியர் என்று மாற்றுக் கருத்தும் உள்ளது.)
அப்போது கன்னி மரியாள் தூய பரிசுத்த ஆவியால் கருவுற்றிருந்தாள். அங்குதான் மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தனது தலைமகனான இயேசுவை பெற்றெடுத்தார்.
இயேசு பிறந்த அந்த நாள்தான் கிறிஸ்துமஸ் (டிசம்பர்-25) நன்னாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இயேசு கிறிஸ்து பிறக்கையில் மரியாளுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்கவில்லை. அதனால் குழந்தையைத் துணிகளில் பொதிந்து மாட்டுத் தொழுவத்தில் இருந்த தீவனத் தொட்டியில் போட்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில், தங்கள் கிடைகளை பாதுகாத்துவந்த இடையர்கள் முன்னால் விண்தூதர் தோன்றினார். அவர்களிடம் அவர், ”இதோ எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி. இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். அந்தக் குழந்தை மாட்டுக் கொட்டகையில் உள்ளது. இதுவே அடையாளம்” என்று கூறி மறைந்தார்.
இடையர்கள் உடனே பெத்லகேம் சென்றனர். விண்தூதர் வாக்குப்படி அங்கு இயேசுவைக் கண்டு வணங்கினர்.
இதற்கிடையில் கிழக்கில் இருந்து ஜெருசலேம் வந்த சாமியார்கள் சிலர் ஏரோது அரசனிடம், ”யூதர்களின் அரசராகப் பிறந்தவர் எங்கிருக்கிறார்” என்று வினவினர். ”அவருடைய அவதாரத்தாரத்தை அறிவிக்க, விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றனர்.
அரசுனும் விசாரித்தான். இயேசு பெத்லகேமில் பிறப்பார் என்று தகவல் கிடைத்தது.
சாமியார்களிடம், ”நீங்கள் சென்று இயேசுவைக் கண்டு, உறுதியான செய்தியை எனக்குத் தெரிவியுங்கள்” என்று அனுப்பி வைத்தான்.
அவர்கள் பெத்லகேம் சென்றபோது ஏற்கனவே தோன்றிய விண்மீன் மீண்டும் தோன்றி அவர்களுக்கு வழி காட்டியது. விண்மீன் நின்ற இடத்தை அடைந்தனர். இறைமகன் இயேசு கன்னிமரியாளின் பாலகனாக மடியில் கிடப்பதைக் கண்டு மகிழ்ந்தனர். தாங்கள் கொண்டுவந்த பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் ஆகியவற்றைக் காணிக்கையாகக் கொடுத்தனர்.
மன்னன் ஏரோதுவை மீண்டும் சந்திக்க வேண்டாம் என்று அவர்கள் கனவில் எச்சரிக்கப்பட்டிருந்ததால், அவர்கள் அங்கு செல்லவில்லை. மாற்று வழியில் தங்கள் நாடுகளுக்குச் சென்றனர்.
இயேசு அன்றில் இருந்து இன்றுவரை உலகை ஆண்டு வருகிறார். உலக மக்களை இரட்சித்து வருகிறார்.
-ஜெ
Devotional collection list
2008/12/12 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
2008/10/24 கயிலையே மயிலை, மயிலையே கயிலை!
2008/10/17 கலியுகக் கடவுள் ஸ்ரீஜெகந்நாத்
2008/10/10 சைதை திருக்காரணீஸ்வரர் ஆலயம்
2008/10/03 நலம் தரும் நாமக்கல் ஸ்ரீஆஞ்சநேயர்
2008/09/26 தேனாம்பேட்டை ஸ்ரீஆலையம்மன்
2008/09/19 சமயத்தில் உதவும் சமயபுரம் மாரியம்மன்!
Related Posts Title































