தைவான் சென்று வந்தேன்
தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
தைப்பேயில் உள்ள தைவானியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரே தமிழ்ப் பெண் என்னைச் சந்திக்க ஆசைப்பட்டது, ஓர் அரிய இயல்புடைய பெண்ணைச் சந்திக்க இருக்கிறோம் என்கிற எண்ணத்தையே என்னுள் வளர்த்தது.
தைவானியப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 15 பேர். இவர்களுள் எட்டுப் பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்தியர்களின் எண்ணிக்கையில் சரிபாதிக்கு மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டவர்கள் என்பது வியப்புக்குரிய விஷயம் அல்லவா?
தைவானைப் பற்றிச் சொன்னால், ”ஆமாம் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எங்கே உள்ளது? அங்கு உள்ளவர்கள் பாம்பு தின்பார்களாமே? ரொம்பவும் ஏழை நாடாச்சே” என்கிறவர்கள் மத்தியில், இந்நாட்டைத் தங்களது கல்விக் களமாகத் தேர்ந்தெடுத்து தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தடங்களாகத் தேர்ந்தெடுக்குமளவு நம்மவர்கள் தெளிவாக இருந்திருக்கிறார்கள் என்பது எனக்கு வியப்பையே தந்தது.
நான் வருகிறேன் என்று தெரியப்படுத்தி, பல்கலைக்கழகத்தில் எங்களுக்கென அறை ஒன்றைத் தேர்ந்தெடுத்து சிறு கூட்டம் போல் ஏற்பாடு செய்திருந்தார்கள். அறையின் வடக்குப் பகுதியில் ஒரே ஒரு நாற்காலி. அதன் எதிர்ப்புறம் நல்ல இடைவெளிவிட்டுப் பத்து நாற்காலிகள். இந்த அமைப்பைப் பார்த்ததுமே நான் முகம் சுளித்தேன். ”கூட்டங்களில் பேசிப் பேசி எனக்கு அலுத்துவிட்டது. ஒரு மாறுதலுக்காகப் பயணம் மேற்கொண்டால் இங்குமா கூட்டம். தயவு செய்து நாற்காலிகளை வட்டமாக அமையுங்கள். இதில்தான் முக்கியத்துவம் எல்லோருக்குமாக அமையும். இங்கு நான் எதுவுமே பேசப்போவதில்லை. நாம் கலந்துரையாடப் போகிறோம், அவ்வளவுதான்” என்றேன்.
”நல்ல தமிழைப் பேசுபவர்களைப் பார்த்து கேட்டு நாளாச்சு. நீங்கள் நிறையப் (?) பேசுவீர்கள் என்று (!) கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்கள் சொல்கிறபடி நாற்காலிகளின் அமைப்பை மாற்றிவிடுகிறேன். ஆனால் நீங்கள் குறைந்தது அரைமணி நேரமாவது எங்களிடையே உரையாற்ற வேண்டும்.”
”சுரேஷ் சார்! என்னவோ தெரியவில்லை. எனக்கு இன்று வாங்கிக் கொள்கிற மனநிலையில் இருக்கிறேன். எதையும் வெளிவிடும் மனநிலை ஏனோ இன்று எனக்கு இல்லை.”
”கேக்குற கேள்விக்காவது பதில் சொல்வீங்களா?”
”ஊம்! ஆனால் என்னைவிட நீங்கள் அனைவரும் அதிகம் பேச வேண்டும். சரியா?.” சுரேஷ் குமார் ஒப்புதல் இல்லாத பார்வை ஒன்றை வழங்கினார்.
நாம் இவரை இங்கு வரவழைத்து வந்திருக்கிறோம். இவர் நன்கு பேசுவார் என்கிற எதிர்பார்ப்போடு தமிழக மாணவர்கள் வரப்போகிறார்கள். இவர் சக்கையாக அவர்களை ஏமாற்றப்போகிறார். ஏண்டா இவரை வரவழைத்தோம் என்று ஆக்கப்போகிறார். இவர் போனதும் நம் மாணவர்கள் என்னைப் பிலுபிலு என்று பிடித்துக்கொள்ளப் போகிறார்கள் என்றெல்லாம் அவர் முகத்தில் எண்ண ரேகைகள் ஓடின என்று நான் ஊகிக்கிறேன்.
ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. வருபவர்களை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்பும் மனநிலையில்தான் நான் இருந்தேன்.
ஒவ்வொருவராக வந்து சேர்ந்து கொள்ள ரமேஷ் என்கிற மாணவர் அறைக்குள் நுழைந்ததுமே ”ஐய்யய்யோ!” என்றார்.
”என்னப்பா ரமேஷ்! அவரைப் பார்த்ததும் ஐயோங்குற? அப்புறம் ஏன் பார்க்க வந்தே?”
உடனே ஒரே சிரிப்பலை!
அவ்வளவுதான், அந்தச் சந்திப்பே களைகட்ட ஆரம்பித்துவிட்டது என்பதை அந்தச் சிரிப்பலை எனக்கு உணர்த்தியது.
”அட நீ வேறே! அவரை வச்சுக்கிட்டே ஆரம்பிச்சிட்டியா? பள்ளி நாட்களில் சாரோட ஒரு பக்கத்தை ஆர்வமாய் படிச்சிட்டு என்னைக்காவது இந்த மனுஷரைச் சந்திக்கமாட்டோமான்னு ஏங்குன காலம் உண்டு. அப்புறம் இங்கே வந்துட்டேனா! எங்க பாக்குறது இனிமேன்னு நினைச்சிக்கிட்டு இருக்க, இப்படி எங்களைத் தேடி வந்து எதிரே நிக்கிறீங்களே சார்! எனக்குக் கையும் ஓடலை! காலும் ஓடலை! பேச்சே வரமேட்டேங்குது!”
”ஏம்பா ரமேஷு! பேச்சே வரமாட்டேங்குதுன்னு இவ்வளவு பேசுறே!” என்று மாணவர் கமென்ட் அடிக்க மறுபடி சிரிப்பலை.
இந்த நேரத்தில் இங்கென்ன கலாட்டா நடக்கிறது என்பது போல் மாணவர் போல் தோற்றமளிக்காத ஒருவர் எட்டிப் பார்த்துவிட்டு நகர,
”யாருங்க இவரு வார்டனா?”
”ஆம்.”
”பிரச்னை வருமா என் இந்தச் சந்திப்பில? முறைச்சுக்கிட்டுப் போற மாதிரி இருக்கு?” என்றேன்.
”அதெல்லாம் நம்ம ஊர் மாதிரி இல்ல. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. சும்மா ஆர்வத்தில் எட்டிப் பார்த்துவிட்டுப் போறார்.”
”படிக்கிறதுக்கு எவ்வளவோ நாடு இருக்க ஏன் தைவானைத் தேர்ந்தெடுத்தீங்க? அதைச் சொல்லுங்க முதல்ல?”
”நாங்க உங்களைக் கேள்வி கேட்டுக் குடையலாம் பார்த்தா நீங்க ஆரம்பிச்சிட்டீங்களே ஒரு பெரிய டாப்பிக்கா?”
”சரி சொல்லுங்க”
”எவனுமே இவனுக்கு சீட்டுத் தரமாட்டேனுட்டான். அதனால இங்க வந்து விழுந்துட்டான். இது இவன் கதை” என்று ஒருவர் கிண்டலடிக்க, மீண்டும் ஒரு பெரிய அரட்டைக்கான மூடு உருவானது.
”இந்தக் குட்டி நாட்டில் 158 பல்கலைக் கழகங்கள் இருக்கு. இந்தப் பல்கலைக் கழகத்திற்கு நாட்டில் 5 ஆவது 6 ஆவது இடம் கிடைச்சிருக்குன்னு சொல்றாங்க. எங்கள்ள 5 பேர் பி.எச்.டி மாணவர்கள்.”
”அடேயப்பா! ஆனா பார்க்க அண்டர் கிராஜுவேட் மாணவர்கள் மாதிரி வயசு தெரியாம இருக்கீங்களே!”
”ஐயோ சாமி! லேனா சார் ஜோக்கடிக்க ஆரம்பிச்சிட்டார். ஏன் லேனா சார்! கிண்டலுக்கும் ஓர் அளவு வேண்டாமா? சுரேஷ்குமார் இருக்கிற இடத்தில் இப்படி ஒரு கமெண்டா?” என்று ஒரு மாணவர் சொல்ல, மறுபடி ஒரே சுத்தலான சிரிப்பு.
”இமேஜை டேமேஜ் பண்ணாதீங்கப்பா! பாராட்டைப் பாராட்டா எடுத்துக்குற பெருந்தன்மை வேணும்!”
உடனே ”ஓ ஓ ஓ!” என்று மாணவர்கள் பலரும் ஓ போட்டார்கள்.
”உங்க பேரு என்ன? ஏன் பேசவே மாட்டேங்குறீங்க” என்று அங்கு இருந்த ஒரே மாணவியைக் கேட்க,
”எங்க, இவுங்க என்னைப் பேசவிட்டாத்தானே? என் பேரு புவனா. நானும் பி.எச்.டி பண்றேன்” என்று கோலிக்குண்டுகளைக் கொட்டின மாதிரி கலகலன்னு பேச ஆரம்பித்தார்.
”சுரேஷ்குமாரை ரொம்பத்தான் கிண்டல் பண்ணாதீங்க. அவருக்குக் கிடைச்சிருக்கிற அவார்டைப் பத்தி லேனா சார்கிட்ட சொல்லுங்க” என்று புவனா சொல்ல.
”என்ன அவார்டு? நீங்களே சொல்லுங்க!” என்றேன் சுரேஷ்குமாரிடம்.
”ஒண்ணுமில்ல, பல்கலைக் கழகத்திலேயே அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட் அப்படீன்னு தேர்ந்தெடுத்திருக்காங்க. அதைத்தான் இவுங்க சொல்றாங்க…
..வாழ்த்துக்கள் சுரேஷ் சார். இவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்துல ஓர் இந்தியருக்கு இந்த விருது தந்திருக்காங்கன்னா அது சாதாரணமில்லை. பெரிய விஷயம்.”
”நன்றி!”
”இதையெல்லாம் பெரிசா நினைச்சிடாதீங்க லேனா சார். ஸ்டாண்டிங் அவுட் ஸ்டூடன்ட் அப்படீங்கிறதை யாரோ இவருக்குத் திருப்பிப்போட்டுக் குடுத்துட்டாங்க” என்று ஒரு மாணவர் கமெண்ட் அடிக்க மறுபடி சிரிப்பு, கலகலப்பு.
இந்த நினைப்புகளிலிருந்து என் நினைவு பிரிந்து இணையாக ஒரு சிந்தனையை ஒட்டியது. அறிமுகமே இல்லாத நாம், எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில் இவர்களுடன் கலந்து மாணவர்களோடு மாணவனாக (!) ஒன்றிப் போய்விட்டோம்! மாணவப் பருவம்தான் எவ்வளவு இனியது! வாழ்வின் இந்த வசந்த நாள்கள் மீண்டும் வருமா ஒரு போதும்?
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































