Tuesday, 2 Dec 2008
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் : ஒபாமா
போர் தொடுக்க தகுந்த நேரத்தில் முடிவு : பிரணாப்

‘பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அந்த நாடு அழிக்காவிட்டால், இந்தியாவே நேரடியாகப் போர் தொடுத்து, தீவிரவாத முகாம்களை அழிக்கலாம்’ என்று ஒபாமா தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஒபாமாவிடம் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து கருத்து கேட்டபோது,
”பாகிஸ்தானில் உள்ள அல்கொய்தா முகாம்களை அந்நாட்டு அரசு அழிக்காவிட்டால் இந்தியாவே நேரடியாக போர் தொடுத்து அழிக்கலாம்” என்றவர்,
”மும்பையில் நடத்த தீவிரவாதத் தாக்குதலில் 6 அமெரிக்கர்களும் பலியாகி உள்ளனர். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த என்னுடைய நிர்வாகம், இந்தியாவுடன் இணைந்து செயல்படும். உலக நாடுகளும் இதற்கு ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.
மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் குறித்த விசாரணையில் உறுதியான ஆதாரங்களை முதலில் இந்தியா பெற வேண்டும். அதைத்தொடர்ந்து தீவிரவாதிகளை அழிப்பதில் பாகிஸ்தான் ஒத்துழைக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதன் பிறகு நேரடி நடவடிக்கையை எடுக்கலாம்
உலகில் எந்தவொரு இறையாண்மைமிக்க நாடும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முழு உரிமை உண்டு. எனவே, பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் இருப்பது உறுதியாகத் தெரியவந்தால் இந்தியாவே நேரடியாகப் போர் தொடுத்து தீவிரவாதிகளை அழிக்கலாம்.
அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொல்லும் தீவிரவாதத்தை வேரோடு அறுக்கவேண்டும் என்று உலக நாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராகப் போர் தொடுக்கும் திட்டத்தை மறுப்பதற்கில்லை என்றும் தாவூத் இப்ராகிம் உள்பட 20 தீவிரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும்படி பாகிஸ்தானுக்குக் கடிதம் எழுதி இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
மும்பை தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மக்களிடம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆவேசம் பெருகியிருக்கிறது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரணாப் முகர்ஜி, ”பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது குறித்து நான் எந்தக் கருத்தும் கூற முடியாது. அதேநேரத்தில் எல்லா வாய்ப்புகளும் இந்தியாவின் முன்னால் உள்ளது. போர் குறித்த எதையும் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது. அந்நடவடிக்கை எடுக்கையில் மக்கள் அவர்களாகவே புரிந்துகொள்வார்கள். பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதம் தூண்டி விடப்படும் நிலையில் அந்நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை உள்பட எந்த ஒரு வழக்கமான நடவடிக்கைகளையும் தொருவது கடினம்” என்றார்.
































