Sunday, 30 Nov 2008
5 ஆயிரம் பேரை கொல்லத் திட்டம்: பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் திடுக் தகவல்

மும்பை: மும்பை நகரைத் தகர்க்க பாகிஸ்தானில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரையாவது கொல்லவேண்டும் என்பதும், இரண்டு கட்டடங்களையும் முற்றிலும் தகர்க்கவேண்டும் என்பதும் எங்களுக்கு இடப்பட்ட உத்தரவு என்றும் திடுக் தகவலை பிடிபட்ட ஒரே ஒரு தீவிரவாதியான முகமது அஜ்மல் தெரிவித்துள்ளான்.
மும்பையில் தீவிரவாதிகளுடன 60 மணி நேர சண்டையில் முகமது அஜ்மல் அமிர் என்பவன் தவிர அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.
குண்டு காயங்களுடன் கைது செய்யப்பட்ட முகமது அஜ்மலிடம் ரகசிய விசாரணை நடைபெறுகிறது. சனிக்கிழமை அன்று ரகசியமாக ஒரு நீதிபதி முன்பு அவன் ஆஜர்படுத்தப்பட்டான்.
காவல்துறை விசாரணையில் முகமது அஜ்மல் அகமது கூறியதாவது:
”எனது முழுப் பெயர் முகமது அஜ்மல் அமிர் காசவ். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பாரிட்கோட் என்ற இடம்தான் எனது சொந்த ஊர். லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் நானும் ஒருவன்.
மும்பை தாக்குதலுக்கு பல மாதங்களாகவே திட்டம் தீட்டப்பட்டு வந்தது. மாணவர்கள் என்ற போர்வையில் நுழையவேண்டும் என்பதற்காக 18 முதல் 28 வயது வரையிலான 35 பேர் தேர்வு செய்யப்பட்டோம். எங்களுக்கு 3 மாதகாலம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.
கராச்சி, முஜாபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது) மற்றும் ஜீலம் நதியில் உள்ள ஒரு அணை ஆகிய இடங்களில் பயிற்சி அளித்தனர்.
தெற்கு மும்பையின் முழு வரைபடம், எங்கள் இலக்கில் உள்ள பகுதிகள் ஆகியவற்றின் விடியோ காட்சிகள் எங்களுக்கு அடிக்கடி காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது.
மும்பையின் பாரம்பரியமிக்க சின்னமாகக் கருதப்படும் தாஜ் ஓட்டல் மற்றும் இஸ்ரேலியர்களின் அடையாளச் சின்னமான நரிமன் ஹவுஸ் ஆகியவற்றைத் தகர்ப்பதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரையாவது கொல்லவேண்டும் என்பதும், இரண்டு கட்டடங்களையும் முற்றிலும் தகர்க்கவேண்டும் என்பதும் எங்களுக்கு இடப்பட்ட உத்தரவு.
தாக்குதலை முடித்துவிட்டு கராச்சி திரும்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
எங்கள் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. எனினும் எனக்கு அளிக்கப்பட்டப் பணியைச் சரியாகச் செய்துவிட்டேன். என்னுடையச் செயலுக்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று கூறியுள்ளான் தீவிரவாதி முகமது அஜ்மல்.
































