2008/11/21 Lenavin Payna Katturai
தைவான் சென்று வந்தேன்
கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
தைவானில் சுடுநீர்க் குளியல் பகுதிகளில் மசாஜ் உண்டே தவிர, வரையறை மீறல்கள் இல்லை என நாம் நம்புவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
தைவான் ஒரு வளமையான நாடு. இவர்களது ஆண்டு வருமானம் உலகில் முதல் வரிசை நாடுகளின் வருமானத்தை ஒட்டி இருப்பதால் இவர்கள் தவறு செய்து பிழைக்க வேண்டிய அவசியத்தில் இல்லை.
முறையான சம்பாத்தியத்திற்காக உழைக்கிறார்கள். நான் வலம் வந்தவரை பிச்சைக்காரர்களை எங்கும் காண முடியவில்லை.
ஆசியாவில் சீனத்தோடும், கொரியாவுடனும், சிங்கப்பூருடனும் போட்டி போடக்கூடிய நாடாகத் தைவானை நான் எண்ணியதே இல்லை அங்கு போய் இறங்கும் வரை.
என் விரிவான பயண அனுபவத்தில் நான் கணித்த கணிப்புகளைவிட ஒரு படி மேலே இருந்த நாடு தைவான்தான் என்பேன்.
நாங்கள் அடுத்துச் சென்றது தைப்பே நகரில் உள்ள தேசிய மத்திய நூலகமாகும்.
நூலகமா அது? அடேயப்பா பிரமிப்பு அடங்க வெகு நேரம் ஆகிறது.
காலை 9.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.00 வரை திறந்து வைத்து அசத்துகிறார்கள். இது ஞாயிறு மட்டும் மாலை 5.00 மணியோடு சரி.
வெளிநாட்டு மொழிகள் உட்பட இங்கு வாங்கப்படும் 650 பத்திரிகைகள் அசத்துகின்றன.
இவற்றை அடுக்கி வைத்துள்ள நேர்த்தி; உள்ளே உள்ள மகா அமைதி ஆகியவை இது என்ன நூலகமா கோயிலா என்று கேள்வி கேட்க வைக்கிறது.
12 விதமான அயல்நாட்டு ஆங்கில நாளிதழ்களையும் வைத்திருக்கிறார்கள்.
எவ்வளவோ நவீனங்கள். வீட்டிலிருந்தே இணையதள வசதி மூலம் படிக்கக் கூடிய வசதியைத் தந்தவிட்ட போதும் எவ்வளவோ பேர் நேரில் வந்து தாள்களைத் தொட்டுப் பார்த்து படிப்பதில் தான் உண்மையான இன்பம் என்பதுபோல் உணர்ந்து படிப்பது கண்கொள்ளாக் காட்சி.
எவ்வளவுதான் காட்சி ஊடகங்கள் வலுப்பெற்றாலும் அச்சு ஊடகத்திற்கு ஆபத்து வராது என்று நம்பிக்கை ஊட்டுவதைப் போல் இந்த நூலகம் காட்சி தருகிறது.
நூல்களை அடுக்கி வைத்துள்ள முறை இந்த நூலகம் உண்மையில் நூலகம் தானா, அல்லது ‘எவரும் தொட்டுப் பார்க்கக் கூடாது’ என்று உத்தரவிடப்பட்ட பகுதியா என்று ஐயம் கொள்ள வைக்கிறது.
ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளத் தனி அறை இருக்கிறது. ஏராளமான மாணவ மாணவிகள் (தோற்றத்தில் அப்படி இருக்கிறார்கள்) கணக்கு வழக்கு இல்லாமல் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்கள். எடுத்த பக்கங்களை நூலகரிடம் காட்டி, அவர் சொல்கிறபடி பணம் கட்டும்படியாக இருக்குமா? அல்லது முழுக்க முழுக்க இலவசமா?
உள்ளேயே இணையதள வசதியும் உள்ளது. அதிலும் நிறையப் பேர் உட்கார்ந்திருந்தார்கள்.
காதலர்களைப் போல் கிசுகிசு பாணியில் அடுத்தடுத்து அமர்ந்திருந்த மாணவிகள் பேசிக் கொண்டது அங்கு காணப்பட்ட அருமையான சுயகட்டுப்பாட்டை எடுத்துச் சொல்லியது.
அதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் அமர்வதா? அல்லது மற்ற தாள்களையும் பார்த்துவிடுவதா என்ற சிறு மனப்போராட்டத்தை நடத்தி, படிக்க எங்கு வேண்டுமானாலும் வாய்ப்புக் கிடைக்கும்; பார்க்க இப்படி ஒரு நூலகம் கிடைக்குமா என்கிற வாதத்தை மையமாக வைத்து மற்ற தளங்களுக்கு நகர்ந்தேன்.
உயர்ந்த கட்டடங்களைப் பொறுத்தவரை நான் கையாளும் உத்தி ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்களுக்குள் சிலருக்கு இந்த உத்தி மிகப் பிடித்து போகும்.
பல மாடிக் கட்டடம் முழுக்கப் (பல் பொருள் அங்காடியாகக்கூட வைத்துக் கொள்ளுங்களேன்) பார்க்க வேண்டும் என்றால் முதலில் உச்சித்தளம் எதுவோ அதற்குப் போய்விட்டு படிக்கட்டையே லிப்டையோ பயன்படுத்தி இறங்கிக் கொண்டே வருவேனே தவிர, முதல் தளம் பிறகு மேல்தளம், பிறகு அதற்கு மேல் உள்ள தளம் என நகரமாட்டேன். லிப்ட் கிடைக்கச் சில நேரம் சிரமமாக இருக்கலாம். படிக்கட்டில் ஏறச் சோம்பல் வரலாம். இறங்குவது அப்படி அல்ல. லிப்ட் வர நேரமானால் படிக்கட்டில் தடதட என இறங்கிவிடலாம்.
இணையதள வசதி பற்றி ஒன்றை இங்கே சொல்லிவிடுகிறேன். அருமையான செய்தி.
வீட்டிலிருந்தே இங்குள்ள கணினியின் முன் அமர முன்கூட்டியே பதிவு செய்துவிடலாம். நீங்கள் சரியான நேரத்திற்குச் சென்றால் மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி உங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் மட்டும் கணினியைப் பயன்படுத்தலாம்.
பதிவு செய்துவிட்டு ஒருவர் வரத் தாமதமாகிறார் என்றால் நூலக உதவியாளர் ஒருவர் வந்து கணினியை அவருக்கு ஒதுக்கப்பட்டதிலிருந்து விடுவித்து காத்திருப்பவருக்குத் தருவாராம்.
வந்த இடத்தில் வீணாகக் காத்திருக்க வேண்டாம் என்று இந்த வசதியை இங்கு செய்து கொடுத்திருப்பது மேலைநாடுகளுக்கு இணையான சிந்தனை என்று எனக்குத் தோன்றியது.
ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களைப் பற்றிச் சற்றும் அக்கறைப்படாத இந்நூலகத்தின் போக்கு மட்டும் நமக்கு ஏமாற்றம் தருகிறது. எல்லாமே தைவானிய அறிவிப்புகள்.
நல்லவேளை கழிவறைகளில் மட்டும் ஆண் பெண் உருவப் படங்களை அமைத்திருந்தார்கள். இல்லாவிட்டால் சிரமம்தான்.
என்னுடன் வந்த கேரன் இது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டார். ”இதுவும் தைவானிய மொழியில் இருந்தால் எது ஆண் கழிவறை எது பெண் கழிவறை என்பதை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?” என்று கேட்டார்.
இது ஏதோ கடினமான கேள்வி என்பதபோல் அவர் கேட்க ”ஓர் உள்ளூர் மனிதர் அல்லது பெண்மணி உள்ளே நுழைவதையோ, வெளியே வருதையோ காணும் வரை காத்திருப்பேன்” என்றேன்.
”ஓ! யூ ஆர் பிரில்லியன்ட்! ரியலி வெரி பிரில்லியன்ட்! இப்படி ஒரு புத்திசாலித்தனமாக (?!) பதிலை நீங்கள் சொல்வீர்கள் என நான் நினைக்கவே இல்லை” என்று குரல் ஒலியைக் குறைக்காமல் பேசியது அந்த நூலகத்தின் அமைதியை பெரிதாய்க் கலைத்தது.
”அதனால்தான் நீங்கள் பத்திரிகையாளராய் இருக்கிறீர்கள். நான் வீட்டுப் பெண்மணியாக இருக்கிறேன்” என்று சிறு இடைவெளிவிட்டு மீண்டும்.
இதில் இவ்வளவு வியக்க என்ன இருக்கிறது? ஆனால் பொதுவாகவே மேலை நாட்டவர்கள் புகழ்வதில் கஞ்சத்தனம் இல்லாதவர்கள் என்பதை மீண்டும் இச் சம்பவம் உறுதி செய்தது.
தொடரும்…
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title
Tags: taiwan, கொரியா, கேரன், சிங்கப்பூர், சீன, ஜெராக்ஸ், தைப்பே, தைவான், பிச்சைக்காரர்