அரியானாவின் அரக்கர்கள்: ஆண்களுடன் காரில் வந்த இளம்பெண்கள் எரித்துக் கொலை
கடந்துபோன தீபாவளியன்று இரவு ஆண்களுடன் வந்து இறங்கிய 2 பெண்களை அவர்களது பெற்றோர்களும் கிராம மக்களும் சரமாரியாக அடித்து, மயானத்துக்கு இழுத்துச் சென்று தீவைத்தனர்.
இந்த காட்டுமிராண்டி சம்பவம் நடந்த 15 நாட்களுக்குப் பிறகு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அரியானா மாநிலத்தில் பிவானி நகருக்கு அருகே உள்ளது கலுவாஸ் என்கிற சின்ன கிராமம். இங்கு தானக் என்ற இனத்தவர் வசித்து வருகின்றனர். இவர்கள் மிகவும் பழமைவாத கொள்கையில் ஊறிப்போனவர்கள். கடந்த தீபாவளியன்று, இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்கள் 2 ஆண்களுடன் காரில் வந்து இறங்கினர். இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவர்களது பெற்றோர்களும் கிராம மக்களும் 2 பெண்களையும் கோடாரி, கல் என்று தங்கள் கையில் கிடைத்தவற்றை எல்லாம் கொண்டு அடித்தனர். இதைப் பார்த்து பயந்துபோன இளைஞர்கள் காரில் தப்பி ஓடினர்.
கிராம மக்களின் தாக்குதலில் 2 பெண்களும் மயங்கி சரிந்தனர். அதன்பின்னரும் ஆத்திரம் அடங்காத கிராம மக்கள், அந்த பெண்களை மயானத்துக்கு இழுத்துச் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். இதில் இருவரும் எரிந்து சாம்பலாயினர்.
இச்சம்பவம் வெளியே தெரியாத நிலையில், கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தர் சிவ்ரன் என்பவர், நடந்த அக்கிரமத்தை தேசிய மனித உரிமை கமிஷன் மற்றும் தேசிய பெண்கள் கமிஷன்களுக்கு கடிதம் எழுதினார்.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பிவானி சீனியர் எஸ்.பி. சஞ்சய் குமாருக்கு உத்தரவிடப்பட்டது.
காவல்துறையின் முதல் விசாரணை அறிக்கையில் கிராம மக்கள் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. யாரோ மர்ம நபர்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இக்கிராமத்திற்கு சென்று விசாரித்தால் யாரும் வாயைத் திறக்கவில்லை. இதுகுறித்து தகவல் கொடுத்த சிவ்ரனும் கிராமத்தாருக்கு பயந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் மேற்கொண்டு விசாரிக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர் காவல்துறையினர்.
இந்தக் காட்டுமிராண்டி கிராமத்தில்தான் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற விஜயேந்தர் குமார் பிறந்தார் என்பது (துரதிருஷ்டவசமாக) குறிப்பிடத்தக்கது.
Related Posts Title































