தைவான் சென்று வந்தேன்
தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
என்னத்தான் ஷியாங்கே ஷேக்கின் வாரிசு தனிமனித வழிபாட்டைத் தடுக்க முயன்றாலும் ஷியாங்கே ஷேக்கையும் தைவானின் பெருமைகளையும் பிரிக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
ஷியாங்கே ஷேக்கின் சதுக்கத்தில் மூன்று கட்டடங்கள் இருக்கின்றன. எது இவர் சார்பான நினைவுக் கட்டடம் என்பதில் எங்களுக்குள் தெளிவு இல்லை.
சுற்றுலாவிற்குக் கூட்டிப் போகிறோம் பேர்வழி என்று, எங்களை, உள்ளே போங்க 40 நிமிடத்தில் திரும்பி வாங்க என்று சொல்லி அம்போ என்று தவிக்கவிட்ட ஓட்டுநரை எண்ணியபோது சற்றுச் சலிப்பே வந்தது.
ஒவ்வோர் இடமாக அழைத்துப் போய்க் காட்டி விளக்க வேண்டாமோ?
தைவானியர்கள் உலக அளவில் நன்கு வளர்ந்திருக்கிறார்களே தவிர, ஆங்கிலத்தைப் புறக்கணித்துவிட்டு எப்படி இவ்வளவு வளர்ந்தார்கள் என்று வியக்கத் தோன்றியது. ஏன் ஜப்பான் இல்லையா? பிரான்ஸ், ஜெர்மனி இல்லையா? என்று ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தன.
ஷியாங்கே ஷேக் சதுக்கத்தின் பரப்பளவை ஒப்பிடுகையில் இதைப் பார்க்க 40 நிமிடம் என்பது நிச்சயம் போதாது. மூச்சிரைக்க ஓடி, பதற்றத்துடன் பார்த்தால்தான் மூன்று இடங்களையும் பார்க்க இயலும்.
ஷியாங்கே ஷேக்கின் நினைவகம் (memorial hall) இந்த மூன்றினுள் எது என்று எந்தத் தைவானியர்களிடமிருந்தும் தெரிந்துகொள்ள முடியவில்லை. “Where is chiange-kai-Shek” என்று கேட்டால் ”போடா கிறுக்கா உன்னோட என்னடா எனக்குப் பேச்சு” என்பது போல் ஒருவர் என்னை இளக்காரமாகப் பார்த்துவிட்டுப் போனார். எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஏண்டா இந்தாளிடம் கேட்டோம் என்று.
பெண்கள் பொறுப்பாகப் பதில் சொல்வார்கள் என்று ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை ஓடிப் பிடித்துத் தேடிக் கேட்டதற்கு கெக்கெ பிக்கே என்று சிரித்தார். என்ன இது? இதில் சிரிக்க என்ன இருக்கிறது? ஓர் ஏடாகூட நாட்டில் வந்து இறங்கிவிட்டு இப்படிக் கேலி நிலைக்கு ஆளாக வேண்டியிருக்கிறதே என்று தோன்றியது உண்மை. இப்படி நம்மைத் தவிக்கவிட்ட அந்த டிராவல் நிறுவனத்தைச் சொல்ல வேண்டும். இவ்வளவு கட்டணத்தை வாங்கிப் போட்டுக்கொண்டு இப்படி அரைகுறைச் சேவையை வழங்குகிறார்களே!
மூன்றாவதாகவும் ஒருவரைத் தேர்ந்தெடுத்துக் கேட்டபோது இந்தப் பெரிய பரப்பளவு முழுக்க நினைவகம்தான் என்று ராட்டினம் சுட்டிக் காட்டினார்.
”யோவ்! வெறுப்பேத்தாதீங்கய்யா! ஏய்யா எங்களை இப்படி மென்டல் போல ஆக்குறீங்க? இந்த மூன்றில் எதுய்யா அவரோட நினைவகம்?” என்று கேட்டதற்கு ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.
ஷியாங்கே ஷேக் நினைவகம் மிகப் பிரம்மாண்டமாய் இருக்கிறது. இக்கட்டடமே அவரைப் பற்றி மிக உயர்வாய் எண்ண வைக்கிறது. நீல நிறத்தில் எண்முகக் கூரைகள் இரண்டு அடுத்தடுத்து இருக்க வெண் சுவரால் ஆன கட்டடம் அது.
89 படிக்கெட்டுகள் ஏறிய பிறகுதான் இவரது நினைவக நுழைவாயில் வருகிறது. ஏன் 89 என்று (உயிர் போகக்) கேட்டதற்கு இது அவரது வயதைக் குறிக்கிறது என்றார்கள். எனவே தனக்காக அவர் இதை உருவாக்கியிருக்க முடியாது என்று தோன்றியது.
தரைத்தளத்தில் ஷியாங்கே ஷேக் பயன்படுத்திய இராணுவ உடைகள் காணப்படுகின்றன. அவரது வாழ்க்கைச் சரித்திரத்தை விளக்கும் பல அரிய ஆதாரங்களை நன்கு திரட்டி வைத்திருக்கிறார்கள். ஷியாங்கே ஷேக் நல்ல ஓவியர் போல. பல ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை இவரது சேகரிப்புகளை, இவரால் வரையப்பட்டவையா என்பதைத் தெரிந்து கொள்ள வழியில்லை.
ஷியாங்கே ஷேக்கின் கையெழுத்துகள் கொண்ட பிரதிகள் பலவற்றைப் பார்க்க முடிந்தது. ஷியாங்கே ஷேக் ஒரு கெடிலாக் பிரியராம். (கெடிலாக் காருங்க!) ஒன்றிற்கு இரண்டாய் நிற்கின்றன. இரண்டும் இவர் பயன்படுத்தியவையாம்.
எல்லாம் சீன மொழியில் இருப்பதால் சீனம் தெரியாதவனுங்க சாவுங்கடா என்பதுபோல் அலட்சிய உணர்வுடன் கண்காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது.
உங்களுக்கு வெளிநாட்டுப் பயணிகளின் அந்நியச் செலவாணி வேண்டும். அவர்களது வருகை அவர்களுக்கு அவசியம். ஆனால் அவர்களுக்கு எதுவும் புரியக்கூடாது. அப்படித்தானே என்று அங்கு இருந்த ஊழியரின் காதைப் பிடித்துத் திருகிக் கேட்க வேண்டும் போல் கோபம் வந்தது. பித்தளையினால் ஆன பெரிய உருவச் சிலை ஷியாங்கே ஷேக்கினைப் பற்றிய தோற்றப் பொலிவினை நமக்கு எடுத்துச் சொல்கிறது.
இச்சிலை அருகே நம் தங்கக் கடற்கரைக் காவலாளிபோல் இருவர் அசையாச் சிலைகளாய்ப் பாதுகாவலுக்கு நிற்கிறார்கள்.
1980இல் இந்த நினைவகம் திறக்கப்பட்டதாம். 1975இல் ஷியாங் இறந்திருக்கிறார். தைவானின் தத்துவம் என்பதாக எத்திக்ஸ், டெமாக்ரஸி, சைன்ஸ் ஆகிய மூன்றையும் குறித்திருக்கிறார்கள்.
இப்படிச் சொல்ல ஷியாங்கே ஷேக்கிற்கு உரிமை இல்லை என்றுதான் எண்ணத் தோன்றியது. ஆனால், விஞ்ஞானத்தில் தைவான் அபாரமாக வளர்ந்திருப்பது உண்மை.
எதையும் பார்க்கும், செய்தி திரட்டும் ஆர்வத்தைவிட ‘40 நிமிடம்’ என்கிற உணர்வுதான் மனத்திற்குள் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது.
வடஇந்தியக் குடும்பம் எங்கே போயிற்று என்றே தெரியவில்லை. மற்ற எல்லோரும் வெளியேறும் வாயிலின் அருகே பேருந்தைப் பார்த்தபடி நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்தோம்.
முப்பத்தைந்து நிமிடங்களே ஆகியிருந்தன. ஐந்து நிமிடம் இருந்ததால் எங்களுடன் வந்த கேரன் என்ற இங்கிலாந்துக்காரம்மாவைப் பிடித்துக் கொண்டேன்.
”நான் லேனா உங்கள் சகபயணி.”
”தெரியும். உங்களைத்தான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உற்சாகமான இளம்மனிதர் நீங்கள்.”
இந்தம்மா பேசுமோ மாட்டாதோ என எண்ணப் போக Enthusiastic youngman ஆமே! ஏகப்பட்ட ஐஸ் கட்டிகளைத் தலையில் கொட்டியதுபோல் இப்படி ஒரு வாக்கியத்தை உதிர்க்குமா இந்தம்மா அட!
”நன்றி. உங்களிடம் ஒன்று கேட்கப் பிரியப்படுகிறேன்.”
”முன்னே போங்கள்” (Go ahead)
”இந்த மூன்று கட்டடங்களில் ஒன்று ஷியாங்கே ஷேக்கின் நினைவகம் மற்ற இரண்டும்?”
”தெரியாதா? சொன்னார்களே! ஒன்று, தேசிய அரங்கு மற்றது இசை அரங்கு.”
இங்குதான் நம்மவர்களிடமிருந்து வெளிநாட்டவர்கள் வேறுபடுகிறார்கள்
எதில் ஒன்றும் முழுமை; நல்ல ஆர்வம்; ஈடுபாடு இந்த மூன்றினால்தான் இந்தக் கேரனால் செய்தி திரட்ட முடிந்திருக்கிறது. நேரம் நேரம் என்று பதற்றப்பட்டதால்தான் நம்மால் செய்தி திரட்ட முடியிவில்லை.
”நாம் வந்தது ஒரு தவறான தினம். விடுமுறை நாள்களில் வந்திருந்தால் அட்டகாசமான இசையையும் நடன நிகழ்ச்சிகளையும் இங்கு கண்டுகளித்திருக்கலாம்.”
”எப்படி முடியும் கேரன்? நமக்கு ஒதுக்கப்பட்டது 40 நிமிடம். இந்த அழகில் எப்படி நாம் இவற்றைக் கண்டுகளித்திருக்க முடியும்? நாம் வந்தது தவறான தினம் மட்டுமல்ல, தவறான டிராவல்சும்கூட” என்றதற்கு,
அந்த இடமே அதிரும்படி பயங்கரமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டார் கேரன். செம இரசிகை!
(தொடரும்).
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































