Mumbai attack: Terrorists aimed to kill 5 thousand people

Posted on Sunday 30 November 2008

5 ஆயிரம் பேரை கொல்லத் திட்டம்: பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் திடுக் தகவல்

terrorist-muhmad-ajmal.jpg

மும்பை: மும்பை நகரைத் தகர்க்க பாகிஸ்தானில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரையாவது கொல்லவேண்டும் என்பதும், இரண்டு கட்டடங்களையும் முற்றிலும் தகர்க்கவேண்டும் என்பதும் எங்களுக்கு இடப்பட்ட உத்தரவு என்றும் திடுக் தகவலை பிடிபட்ட ஒரே ஒரு தீவிரவாதியான முகமது அஜ்மல் தெரிவித்துள்ளான்.

மும்பையில் தீவிரவாதிகளுடன  60 மணி நேர சண்டையில் முகமது அஜ்மல் அமிர் என்பவன் தவிர அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர்.

குண்டு காயங்களுடன் கைது செய்யப்பட்ட முகமது அஜ்மலிடம் ரகசிய விசாரணை நடைபெறுகிறது. சனிக்கிழமை அன்று ரகசியமாக ஒரு நீதிபதி முன்பு அவன் ஆஜர்படுத்தப்பட்டான்.

காவல்துறை விசாரணையில் முகமது அஜ்மல் அகமது கூறியதாவது:

”எனது முழுப் பெயர் முகமது அஜ்மல் அமிர் காசவ். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பாரிட்கோட் என்ற இடம்தான் எனது சொந்த ஊர். லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் நானும் ஒருவன்.

மும்பை தாக்குதலுக்கு பல மாதங்களாகவே திட்டம் தீட்டப்பட்டு வந்தது. மாணவர்கள் என்ற போர்வையில் நுழையவேண்டும் என்பதற்காக 18 முதல் 28 வயது வரையிலான 35 பேர் தேர்வு செய்யப்பட்டோம். எங்களுக்கு 3 மாதகாலம் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டது.

கராச்சி, முஜாபராபாத் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது) மற்றும் ஜீலம் நதியில் உள்ள ஒரு அணை ஆகிய இடங்களில் பயிற்சி அளித்தனர்.

தெற்கு மும்பையின் முழு வரைபடம், எங்கள் இலக்கில் உள்ள பகுதிகள் ஆகியவற்றின் விடியோ காட்சிகள் எங்களுக்கு அடிக்கடி காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது.

மும்பையின் பாரம்பரியமிக்க சின்னமாகக் கருதப்படும் தாஜ் ஓட்டல் மற்றும் இஸ்ரேலியர்களின் அடையாளச் சின்னமான நரிமன் ஹவுஸ் ஆகியவற்றைத் தகர்ப்பதே எங்களுடைய முக்கிய குறிக்கோள். குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேரையாவது கொல்லவேண்டும் என்பதும், இரண்டு கட்டடங்களையும் முற்றிலும் தகர்க்கவேண்டும் என்பதும் எங்களுக்கு இடப்பட்ட உத்தரவு.

தாக்குதலை முடித்துவிட்டு கராச்சி திரும்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

எங்கள் திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது. எனினும் எனக்கு அளிக்கப்பட்டப் பணியைச் சரியாகச் செய்துவிட்டேன். என்னுடையச் செயலுக்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்று கூறியுள்ளான் தீவிரவாதி முகமது அஜ்மல்.

admin @ 10:24 pm
Filed under: news
CM cheats Arundhadhiyar communinity : Jaya

Posted on Sunday 30 November 2008

அரு‌ந்த‌தியரை ஏ‌மா‌ற்றும்‌ கருணா‌நி‌தி: ஜெயலலிதா   

jayalalithaa1.jpg

சென்னை: அரு‌ந்த‌தியரு‌க்கு 3 ‌சதவிகிதம் உ‌ள் ஒது‌க்‌கீடு அறிவிப்பு என்பது கருணாநிதியின் ஒரு ஏமாற்று நடவடிக்கை என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயல‌லிதா.
 
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான 18 சதவிகிதம் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 3 ‌சதவிகிதம் அருந்ததியருக்கு ஒதுக்கப்படும் என்று அறிவித்து, அருந்ததிய மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு ஆதரவு கொடுத்து வந்த அருந்ததிய மக்கள், புரட்சித்தலைவரின் மறைவிற்கு பிறகு எனக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து அ.தி.மு.க. ஆதரவாளர்களான, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அருந்ததிய இன மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் முதலமைச்சர் கருணாநிதிக்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசிற்கு அதிகாரமில்லை. ‘ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், அதன் ஆளுநர் அல்லது துணைநிலை ஆளுநரைக் கலந்தாலோசித்த பின்னர், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் உள்ளவர்களில் இந்த அரசியல் சாசனப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் என்று கருதப்பட வேண்டிய சாதிகள், இனங்கள், பழங்குடியினர் மற்றும் சாதி, இனம், குழு ஆகியவற்றின் உட்பிரிவுகள் அல்லது கிளைகள் ஆகியவற்றை பட்டியலிட்டு ஒரு பொது அறிவிக்கையின் மூலம் குடியரசுத் தலைவர் வெளியிட வேண்டும்’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341இல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 341-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அறிவிக்கை செய்யப்பட்ட பட்டியலை மாற்றுவதற்கான அதிகாரம் இந்திய பாராளுமன்றத்திற்கு தான் இருக்கிறதேயொழிய, மாநில அரசுக்கு இல்லை.

நான் முதலமைச்சராக இருந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை அருந்ததிய இன மக்கள், ஆதிதிராவிட மக்கள், தேவேந்திரகுல வேளாள மக்கள் என்னிடம் வைத்தனர். அப்போது, அவர்களுடையக் கோரிக்கையை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்தேன்.

மாநில அரசால் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என சட்ட வல்லுநர்கள் தெரிவித்ததாலும், அருந்ததிய மக்களுக்கு எதிரான மத்திய அரசு ஆட்சியில் இருந்ததாலும், அப்போது  அவர்களுடையக் கோரிக்கையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.

உண்மையிலேயே கருணாநிதிக்கு அருந்ததிய இன மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்தவுடனேயே இதை செய்திருக்க வேண்டும். மத்திய அரசின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாயில், இது போன்ற அறிவிப்பை கருணாநிதி அறிவித்திருப்பது ஒரு ஏமாற்று நடவடிக்கையே’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 9:42 pm
Filed under: news
New Home Minister P Chidambaram

Posted on Sunday 30 November 2008

சிவராஜ் பாட்டீல் ராஜிநாமா: புதிய உள்துறை அமைச்சரானார் ப. சிதம்பரம்

political-changes.jpg

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதைத் தொடர்ந்து நிதி அமைச்சராக இருந்து வந்த ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் பொறுப்பை பிரதமர் மன்மோகன் சிங் கூடுதலாகக் கவனிப்பார்.

மும்பையில் தீவிரவாதிகள் ஆடுய கொடூர வெறியாட்டத்தை அடுத்து பதவி விலக வேண்டிய நெருக்கடிக்கு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தள்ளப்பட்டார். இதையடுத்து அவர் பதவி விலக, அவருடையப் பதவியில் ப. சிதம்பரம் நியமிக்கப்பட்டார்.

சிவராஜ் பாட்டீல் ராஜிநாமா ஏற்கப்பட்டதாகவும், அவர் வகித்தப் பதவியில் ப. சிதம்பரம் நியமிக்கப்படுவதாகவும் குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு ப. சிதம்பரம் அழைக்கப்பட்டபோதே, அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. மேலும் ஞாயிற்றுக்கிழமை பிரதமரும் அவரும் ஆலோசனை நடத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இந்த பதவி மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற ப. சிதம்பரம் மிகச் சிறந்த வழக்குரைஞர். சிறந்த அரசியல் நிர்வாகத் திறமையால் உள்துறை அமைச்சர் பொறுப்பை அவர் திறம்பட ஆற்றுவார் என்றே தெரிகிறது.

1985ஆம் ஆண்டு பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை துணை அமைச்சராகப் பணியாற்றிய சிதம்பரம் சீக்கிரமே இணை அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். பின்னர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் தொழில் வர்த்தகத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

எச்.டி. தேவகெளடா அமைச்சரவையிலும், ஐ.கே. குஜ்ரால் அமைச்சரவையிலும் நிதி அமைச்சராக பதவி வகித்தார். 2004 ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியமைத்ததும் மீண்டும் நிதி அமைச்சரானார் ப. சிதம்பரம். இப்போது உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

ப. சிதம்பரம் சிறப்பாகச் செயல்படுவார் என இந்திய தொழில்துறையினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

admin @ 9:13 pm
Filed under: news
Reservation to Arundhadhiyar : CM condemns Jaya

Posted on Sunday 30 November 2008

அரு‌ந்த‌திய‌ர் தனி இடஒதுக்கீடு: ஜெ.வுக்கு கருணாநிதி கண்டனம்

karunanidhi5.jpg

சென்னை: அரு‌ந்த‌திய‌ர் சமுதாய‌த்‌தினரு‌க்கான த‌னி இட ஒது‌க்‌கீடு கு‌றி‌த்து ஜெய‌ல‌லிதா கூ‌றிய க‌ரு‌த்துக்கு க‌ண்ட‌னம் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர் த‌மிழக முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி.

இது கு‌றி‌த்து அவ‌ர் ‌எழுதிய கடிதத்தில்,

‘எப்போதும் எதிரிக் கட்சியாகவே எகிறிக் குதிப்பதும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசு வதும், “எல்லாம் எமக்குத் தெரியும்” என்ற ‘திருவிளையாடல்’ திரைப்படப் பாணியில் தனது தலைக்கனத்தையும் தன்முனைப்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்வதும் ஜெயலலிதாவின் குண விசேஷம்.

அதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகத்தான் அருந்ததியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு குறித்த அவரது அறிக்கையும் அமைந்திருக்கின்றது. எடுத்த எடுப்பிலேயே அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்று அருந்ததிய மக்களை நான் ஏமாற்றிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அருந்ததிய மக்களை மட்டுமல்ல, அருந்தமிழ் நாட்டின் அனைத்துப்பிரிவினரையும் ஏய்த்து, ஏமாற்றி, எற்றி அரசியல் நடத்தி வரு பவர்தான் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரை வேக்காட்டு அறிக்கைகளையும், நாச எண்ணம் கொண்ட நடவடிக்கைகளையும் பார்க்கும்போது, “இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட் டிலே” என்ற தஞ்சை ராமையா தாசின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை’ என்கிறார் ஜெயலலிதா தனது அறிக்கையில். அதற்கு ஆதரவாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 341-வது பிரிவைக் குறிப்பிடுகிறார்.

அரசியல் சட்டத்தின் 341 (1)வது பிரிவு ஒவ்வொரு மாநிலத்திலும், தாழ்த்தப்பட்டோர் யார்-யார்? என்று இந்தியக் குடியரசுத் லைவர் வெளியிடும் அறிவிக்கை பற்றியதாகும். 341(2)வது பிரிவு இந்தியக் குடியரசுத் தலைவர் வெளியிடும் அறிவிக்கையில் எதனையும் சேர்ப்பதற்கு அல்லது நீக்குவதற்கு நாடாளுமன்றத்திற்குத் தரப்பட்டுள்ள அதிகாரம் பற்றியதாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்தியக் குடியரசுத்தலைவர் அறிவிக்கையின் படி, 76 சாதியினர் தாழ்த்தப் பட்டோர் எனும் பிரிவுக்குள் அடங்குவர். இன்னும் ஆதாரம் தேவையானால், 12.3.2008 அன்று நடை பெற்ற அனைத்துக்கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் அந்தக்கட்சியின் முன்னோடி களான டி.ஜெயக்குமாரும், எஸ்.அன்பழகனும் கலந்து கொண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் விரிவான முறையில் விசாரித்தறிந்து அண்மையில் மத்திய அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி அமைந்துள்ள ஆணைய‌த்‌தி‌ன் நிலையையும் ஆராய்ந்து தேவைப்பட்டால் அவர்களையும் கலந்து கொண்டு அரசுக்குப் பரிந்துரை செய்திட உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்ட ஒரு நபர் குழு அமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

அதற்கேற்ப நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கைபடி இந்த அரசு செயல்பட முனையும் போது அதற்கு மாறான முரண்பட்ட கருத்தினை ஜெயலலிதா தன் அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் அரசியல் சட்டத்தின்படி அறிவிக்கை செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் எவ்வித மாற்றத்தையும் செய்திடவில்லை. எந்த சாதியையும் அப்பட்டியலில் சேர்த்திடவோ, அல்லது நீக்கிடவோ முயற்சி செய்திடவில்லை. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அருந்ததியர் என்கின்ற சமுதாயத் தொகுப்பின் கீழ் அதே பட்டியலில் இடம் பெற்றுள்ள அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதி ஆந்திரர், பகடை, மடிகா மற்றும் தோட்டி ஆகிய ஏழு ‌பிரிவினரை உள்ளடக்கி, தாழ்த்தப்பட்டோர் அனைவருக்கும் தற்போது மொத்தமாக வழங்கப்பட்டு வரும் 18 சதவிகித இட ஒதுக்கீட்டில் இந்த ஏழுபிரிவினரின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமான விகிதப்படி 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார். அந்தப் பரிந்துரை தமிழக அமைச்சரவையால் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது மாநில அரசின் அதிகார வரம்பை மீறிய செயலா? அரசியல் அமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதா? அரசியல் சட்ட மாமேதை (ப) ஜெயலலிதா தான் அவனிக்கு விளக்கிட வேண்டும்.

.தாழ்த்தப்பட்டோருள் அருந்ததிய சமுதாயத்தினருக்கு முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்கிட முடிவெடுத்ததற்கு ஏற்கனவே முன் மாதிரி இருப்பதை ஜெயலலிதாவுக்கு யாரும் எடுத்துரைக்கவில்லை போலும்.

பஞ்சாப் மாநிலத்திற்கான தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் 39 சாதியினரை உள்ளடக்கி இந்திய அரசியல் சட்டத்தின்படி, அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எற்கனவே இருந்து வந்த மொத்த ஒதுக்கீடான 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் பால்மீக்கிகள், மஷாபி சீக்கியர்கள் என்ற இரண்டு பிரிவினருக்கு மட்டும் 12.50 சதவிகித உள் ஒதுக்கீடு 5.5.1975 முதல் ஓர் அரசு அறிவிக்கையின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றம், பஞ்சாப் அரசு சட்டமாக இதனை நிறைவேற்றாமல், வெறும் ஆணையாக மட்டுமே அமல்படுத்தி வந்ததை 25.7.2006 அன்று ரத்து செய்தது. எனினும் பஞ்சாப் மாநில அரசு அந்த இரு பிரினருக்குமான உள் இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து நடைமுறைப்படுத்திடும் வகையில் 5.10.2006 அன்று சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. அது இன்றளவும் செயல் முறையில் தொடர்ந்து இருந்து வருகின்றது.

அதனால் தான் நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தமது அறிக்கையிலே இம்மாதிரியான சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு, பஞ்சாப் மாநிலத்தில் 2006-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம் எண். 22-ன் படி 4-வது பிரிவில் 5-வது கிளைப்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளதைப் போன்று- அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட எவ்விதத் தயக்கமுமின்றிச் சட்டம் இயற்றலாம். அப்படி சட்டம் இயற்றுவதற்கு முன்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 338 (9) வது பிரிவின்படி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துடன் கலந்தாலோசனை செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளபடி தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டாசிங்க்கு அருந்ததியினருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கருத்துருவினைப்பற்றிய அறிக்கை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அருந்ததியருக்கான தனி இட ஒதுக்கீடு தொடர்பாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வழி முறைகளைச் சிறிதும் பிசகாமல் தமிழக அரசு பின் பற்றி வருகிறது. எனவே அருந்ததிய சமுதாயத்தினருக்குக் கிடைத்திட போகும் விருந்தில் விஷம் கலக்கலாம் என்ற ஜெயலலிதாவின் கனவு வீண் கனவு, பகல் கனவு!

ஏதோ, தான் முதலமைச்சராக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்குள் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை அருந்ததிய இன மக்கள், ஆதிதிராவிட மக்கள், மற்றும் தேவேந்திர குல வேளாள மக்கள் தன்னிடம் வைத்ததாகவும், அவர்களது கோரிக்கையை நிறை வேற்றுவது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்ததாகவும் தனது அறிக்கையிலே கதை அளந்திருக்கிறார் ஜெயலலிதா.

அப்படி அவர் செய்ததற்கான அரசாங்கத்தின் கோப்பை சுட்டிக்காட்ட முடியுமா? அதற்கு அரசு ஆவணங்களோ, ஆதாரங்களோ உண்டா? போகிற போக்கில் பொய்யையும், புரட்டையும், புளுகையும் அவிழ்த்து விட்டால், அதனை நம்புவதற்குத் தமிழர்கள் என்ன இளித்தவாயர்களா? அப்படி ஒரு சிலர் இருந்தால் அவர்கள் என்னை மன்னித்துக் கொள்ளவும்.

வெற்று அறிக்கைகள், வீணான ஆரவாரங்கள், வேடிக்கை அரசியல் நடவடிக்கைகள் ஆகியவற்றை விடுத்து, ஆரோக்கியமான அரசியலைப் பின்பற்றி நாட்டு மக்கள் நலன்கருதி ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இனியாவது வழங்குவது ஜெயலலிதா போன்றவர்களுக்கு நல்லது. “நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்!” என்னும் புறநானூற்று வாசகம் அவர்களுக்கெல்லாம் நல் ஒளியும்-நல் வழியும் காட்டட்டும்.

அருந்ததிய சமுதாயத்தினருக்குக் கிடைத்திட இருக்கும் தனி இட ஒதுக்கீட்டினைத்தடுத்திட முனைபவர்கள் ர், அதனைக் கொண்டு வர பாடுபடுபவர்கள் யார் என்பதை அந்தச் சமுதாயத்தினர் இப்போதாவது அடையாளம் கண்டு கொள்ளட்டும்.

கடைக்கோடியில் இருக்கும் அருந்ததிய சமுதாயத்தினருக்கான தனி ஒதுக்கீட்டிற்கு தடைக் கற்களைப் போட எண்ணாமல் ஜெயலலிதா போன்றவர்கள் தள்ளி நிற்கட்டும்’ எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

admin @ 8:35 pm
Filed under: news
Hero’s Day: Vaiko speech in London

Posted on Friday 28 November 2008

vaiko3.jpgமாவீரர் நாள் 2008: லண்டனில் வைகோவின் முழு ஒலியுரை

.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லண்டனில் நேற்று நடைபெற்ற விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். லண்டன் எக்செல் மண்டபத்தில் நடந்த மாவீரர் நாள் அனுசரிப்பில் 40ஆயிரம் மக்கள் சூழ்ந்திருக்க, விடுதலைப் புலிகளின் ஈழப் போரை ஆதரித்து பேசியிருக்கிறார் வைகோ.

நீங்களும் அவருடைய உரையை கேளுங்களேன்…

Download

admin @ 4:15 am
Filed under: srilanka news
Mumbai attack: Centre failed to stop, says Jaya

Posted on Friday 28 November 2008

மும்பை சம்பவம்: மத்திய உளவுத்துறை செயல் இழந்துவிட்டது - ஜெயலலிதா

சென்னை: மு‌ம்பை‌யி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் நட‌த்‌திய சம்பவம் உளவுத்துறை செயல் இழந்து விட்டதையும், பாதுகாப்பு குறைபாட்டையும் எடுத்துக்காட்டுகிறது எ‌ன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இதுகுறித்து அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘மும்பையில் தீவிரவாதிகள் ஏ.கே.47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மூலம் நடத்திய தாக்குதலில் 101 பேர் பலியான செய்தி அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். 900க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயம் அடைந்துள்ளனர்.

கடல் வழியாக படகுகளில் வந்து தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். தீவிரவாதிகள் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். கமாண்டோ படையினரே இதை ஒப்பு கொண்டுள்ளனர். இந்த மோசமான சம்பவம் உளவுத்துறை செயல் இழந்து விட்டதையும், பாதுகாப்பு குறைபாட்டையும், எடுத்துக்காட்டுகிறது. இந்திய பொருளாதாரத்தையே இந்த தீவிரவாத தாக்குதல் சீரழித்து விடும்.

தீவிரவாதத்தை ஒடுக்க தீவிரவாத தடுப்பு சட்டம் தேவை என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மத்திய அரசுக்கு யோசனை கூறி உள்ளார். மாநிலங்கள் தனியாக தீவிரவாத தடுப்புச் சட்டம் இயற்றவும் மத்திய அரசு அதை தடுக்க தேவை இல்லை என்று அவர் கூறி உள்ளார்.

இப்போது உள்ள சட்டங்கள் தீவிரவாதத்தை தடுக்க போதுமானது அல்ல. நாட்டின் பாதுகாப்புக்காக ‘பொடா’ போன்ற சிறப்பு சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலில் மரணம் அடைந்த அனைவரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்’ எ‌ன்று கூறியுள்ளார்.

admin @ 4:10 am
Filed under: news
Spectrem issue: Karunanidhi slams Jaya

Posted on Friday 28 November 2008

ஊ‌ழ‌ல் ‌விருது‌க்கு பொரு‌த்தமானவ‌ர் ஜெயல‌லிதா: கருணா‌நி‌தி

சென்னை: ‘ஊழலுக்கென்று ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அது ஜெயலலிதாவிற்குத் தான் பொருந்தும்’ எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள கேள்வி- பதில் அ‌றி‌க்கை:

‘மும்பையில் தீவிரவாதிகள் எட்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும், 6 இடங்களில் குண்டுகளை வெடித்தும் பயங்கரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சம்பவத்தைப் பற்றி?

நடைபெற்றுள்ள சம்பவங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கும் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்ற நேரத்தில் இந்தியாவிலே இப்படிப்பட்ட சம்பவம் நடைபெற்றிருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தச் சம்பவம் காரணமாக உயிர் நீத்த நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, நிவாரணப் பணிகளிலே மராட்டிய மாநில அரசும், மத்திய அரசும் விரைந்து ஈடுபடும் என்று நம்புகின்றேன்.

‘பிரதமரைச் சந்தித்து, மத்திய அமைச்சர் ராசாவைக் காப்பாற்றவே முதல்வர் டெல்லி பயணம்’ என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?

‘ராசாவை மீட்பதற்காகத்தான் கருணாநிதி இப்போது டெல்லிக்குப் போகிறார்’ என்று கம்பளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை அம்பலத்தில் சொல்லி ஆட்டம் போடும் அம்மையார் ஜெயாவுக்கு சில கேள்விகள்:

ஸ்பெக்ட்ரம் பிரச்னையில், ஏலம் விடுகிற முறையைத் தவிர்த்து; முதலில் விண்ணப்பிப்பவருக்கு வழங்குவது என்ற விதிமுறையை ஏற்படுத்தியது யார்? அன்றைய பா.ஜ.க. அமைச்சர் அருண் ஷோரி அல்லவா?

அதே விதிமுறை, அடுத்து அந்தப் பொறுப்பில் இருந்த அமைச்சர் தயாநிதி மாறனாலும் கடைப்பிடிக்கப்பட்டது அல்லவா? அவரை ராஜினாமா செய்யச் சொல்லி ஜெயலலிதா ஏன் அலறவில்லை? அறிக்கை விடவில்லை? அவர்கள் மீதெல்லாம் ‘ராஜினாமா செய்’ என்ற கணையைப் பொழியாமல் ராசா மீது மட்டும் கண்மூடித் தாக்குதல் நடத்துவதற்குக் காரணம் என்ன?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் என்று ஜெயலலிதா அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

‘தான் திருடி, பிறரை நம்பாள்’ என்பது கிராமப்புற பழமொழி. வருமானத்தைவிட அதிகமாக 64 கோடி ரூபாய்க்கு மேல் பதவியிலே இருந்தபோது சொத்து சேர்த்து அதற்கான வழக்கு தமிழக நீதிமன்றங்களிலே கூட அல்ல, பெங்களூர் நீதிமன்றம் வரை சென்று அங்கே பல ஆண்டுக் காலமாக வாய்தா வாங்கி, அந்த இடைவெளியைக் காரணமாகக் கொண்டு ஜெயலலிதா அறிக்கை விடுத்தும், தொண்டர்களை ஊருக்கு ஊர் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லியும் காலம் கடத்தி வருகிறார் அல்லவா? இந்தியா முழுவதும் ஊழலுக்கென்று ஒரு விருது கொடுக்க வேண்டுமென்றால், அது ஜெயலலிதாவிற்குத் தானே பொருந்தும்.

எத்தனை விதமான ஊழல் அவருடைய ஆட்சிக் காலத்தில்! அவரா மத்திய அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற நான் டெல்லி செல்கிறேன் என்றும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மிகப் பெரிய ஊழல் என்றும் அறிக்கை விடுவது? நான் பிரதமரைச் சந்திக்கச் செல்லும்போது தனியாகச் செல்லப்போவதில்லையே? அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு தானே போகப்போகிறேன்.

அப்போது நான் பிரதமரிடம் ராசாவிற்காக வக்காலத்து வாங்கிப் பேசுகிறேனா? அல்லது இலங்கைத் தமிழர்களுக்காக பேசுகிறேனா? என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!

இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்காக எந்தெந்த கட்சிகள் நிதி அளித்தன என்ற பட்டியலில் இலங்கைத் தமிழர்களுக்காக நான் தான் என்று எப்போதும் குரல் கொடுக்கும் ம.தி.மு.க. சார்பிலோ, அ.தி.மு.க. சார்பிலோ எந்த நிதியும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லையே?

ஜெயலலிதா ஆட்சியிலே இருந்தபோது தமிழகத்திலே வரலாறு காணாத அளவிற்கு சுனாமி ஏற்பட்டபோது, அதற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினை நேரில் அனுப்பி நிவாரண நிதியை வழங்கச் செய்தேன். அது தி.மு.க.வின் பண்பாடு.

ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்றது என்ற காரணத்தால் அ.தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ இலங்கைத் தமிழர் நிவாரண நிதி வழங்கவில்லை. இது அவர்களுடைய பண்பாடு.

ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக உண்மையாக உழைப்பவர்கள் யார் என்பது உலகத் தமிழர்களுக்கும் தெரியும், இலங்கைத் தமிழர்களுக்கும் தெரியும்.

பெட்ரோல் விலையைக் குறைக்க மறுப்பதா என்று கேட்டு சி.பி.எம்., சி.பி.ஐ., பார்வர்டு பிளாக் கட்சிகள் டிசம்பர் 2ஆம் தேதியன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறார்களே?

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப் போவதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா தொடர்ந்து சொல்லி வருகிறார். அதற்கான கோப்பினை அமைச்சரவையின் அனுமதிக்கு அனுப்புவதாக அந்தத் துறையின் செயலாளர் ஆர்.எஸ். பாண்டே அறிவித்திருக்கிறார். இதையெல்லாம் தெரிந்து கொண்டு தான் இந்தக் கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக சொல்லி யிருக்கிறார்க‌ள்.’

இ‌வ்வாறு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 4:05 am
Filed under: news
Mumbai: Fight against terrorists continues

Posted on Friday 28 November 2008

மும்பை: முப்படை முற்றுகை

mumbai-attack1.jpg

மும்பை: தாஜ், ட்ரைடன்ட் ஓட்டல்களில், நாரிமன் குடியிருப்பில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி அங்குள்ளவர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். அவர்களை மீட்க, மும்பையில் முப்படை வீரர்கள் குவிந்துள்ளனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் தொடர்ந்து சண்டை நடந்து  வருகிறது. குண்டுவெடிப்பும் தொடர்கிறது. இந்தச் சண்டையில் இதுவரை 101 பேர்  பலியாகிஉள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 30 முதல் 40 பேர்கொண்ட தீவிரவாத கும்பல் இந்திய கடல்பகுதிக்கு வந்தது. அங்கிருந்து ரப்பர் படகுகள் மூலம் மும்பையின் இந்தியாவின் நுழைவாயில் (கேட்வே ஆப் இந்தியா) வழியாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து மும்பையைச் சுற்றி வளைத்தனர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நுழைந்தவர்கள்

கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர். தகவல் அறிந்து காவல்துறை அங்கே விரைந்தது. தீவிரவாதிகள் காவல்துறையினரைச் சுட்டுத் தள்ளிவிட்டு காவல்துறை வாகனத்திலேயே தப்பிச் சென்றனர். போகும்வழியில் எல்லாம் பொதுமக்களை சுட்டுக்கொண்டே சென்றனர்.

அதேசமயம் இன்னொரு பிரிவினர் தாஜ், ட்ரைடன்ட் ஓட்டல்களுக்குள் நுழைந்து வெளிநாட்டினரை பிணயக்கைதிகளாகப் பிடித்துக் கொண்டனர். அங்கு அவர்கள் சரமாரியாகச் சுட்டுக்கொண்டும், கையெறி குண்டுகளை வீசியபடியே சென்றனர். தடுக்க முயன்ற ஓட்டல் ஊழியர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர். இதில் ஓட்டலின் தலைமை சமையல் அறிஞர் உள்பட பல ஊழியர்கள் குண்டு பாய்ந்து இறந்தனர்.

இதைத் தொடர்ந்து  முப்படைகளும் மும்பைக்கு விரைந்தன. தீவிரவாதிகளுடன் கடும் சண்டை நடந்து வருகிறது.

ஓட்டலில் பிணைக்கைதிகளாக உள்ளவர்களை விடுவிக்க, சிறையில் உள்ள முஜாகிதீன் தீவிரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், பெரும் தொகையை கொடுக்கவேண்டும் என்றும் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

admin @ 4:03 am
Filed under: news
Hero’s Day: Prabhakaran speech

Posted on Friday 28 November 2008

இந்த மண் எங்களின் சொந்த மண் :  பிரபாகரன் மாவீரர் நாள் உரை

vprabhakaran.jpg

மிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் நேற்று அனுசரிக்கப்படட்டது. தமிழீழ மக்களுக்கு மாவீரர் தின உரையாற்றினார் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்.

அவருடைய உரை இங்கே…

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.

எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.

இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.

அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.

அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.

எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

”புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

இவ்வாறு பிரபாகரன் உரையாற்றினார்.

admin @ 4:00 am
Filed under: srilanka news
Ex PM VP Singh dead

Posted on Friday 28 November 2008

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மரணம்

vpsingh.jpg

டெல்லி: முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நேற்று பிற்பகல் மரணமடைந்தார்.

77 வயதாகும் வி.பி.சிங்குக்கு ரத்த புற்றுநோய் தாக்கியிருந்தது. இதனால் நீண்ட காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பிற்பகல் காலமானார்.

வி.பி. சிங்குக்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.

1931ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்ற வி.பி.சிங்.

இந்தியாவின் 10வது பிரதமராக அவர் பதவி வகித்தார். ஒரு வருட காலம் அவரது தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இந்திய அரசியலில், இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியைக் கொடுத்த பெருமைக்குரியவர் வி.பி.சிங்.

உ.பி. முதல்வராக, இந்திரா, ராஜீவ் காந்தி அமைச்சரவையில் நிதித்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் அமைச்சர் பதவியை வகித்தவர் வி.பி.சிங்.

ராஜீவ் காந்தியை எதிர்த்துக்கொண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி ஜனதாதளம் என்ற கட்சியைத் தொடங்கினார். ராஜீவுக்கு எதிர்ப்பு அலையை உருவாக்கி மத்தியில் ஆட்சியைப் பிடித்தார். பாஜக - இடதுசாரிகள் துணையோடு கூட்டணி ஆட்சியை அமைத்தார்.

பின்னர் ஜனதாதளம் பல துண்டுகளாக சிதறிப் போய் விட்டது.

சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த வி.பி.சிங், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக உரக்கக் குரல் கொடுத்தவர்.

சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும், ஓவியராகவும் திகழ்ந்தவர்.

கடந்த 1991 ஆம்ஆண்டு அவரை ரத்த புற்று நோய் தாக்கியது. ரத்த புற்றுநோய், சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வந்தவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

பெரியார் மீது ஆழ்ந்த மரியாதை கொண்ட வி.பி.சிங், முதல்வர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர். கருணாநிதி டெல்லி செல்லும்போதெல்லாம் வி.பி.சிங் - கருணாநிதி சந்திப்பு தவறாமல் நிகழும்.

வி.பி.சிங் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தால் தனது இருக்கையை அவருக்குத் தந்துவிட்டு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து கொள்வார் கருணாநிதி. அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை தந்தவர் கருணாநிதி.

தமிழகத்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வி.பி.சிங், மீண்டும் பிறந்தால் தமிழனாகப் பிறக்க ஆசைப்படுவதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பரி்ந்துரைத்த மண்டல் கமிஷனின் அறிக்கையை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டியவர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வி.பி.சிங் நிரந்தரமாக இடம் பிடித்தார்.

admin @ 3:55 am
Filed under: news