Jayalalithaa’s car stoned in Pasumpon
பசும்பொன்னில் திடீர் பதற்றம்: ஜெ., கார்மீது கல்வீச்சு

கமுதி: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜெயலலிதா வந்தபோது திடீரென கற்கள் வீசப்பட்டன. கூட்டத்தினரைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று பசும்பொன் வந்தார். அவருடன் தோழி சசிகலாவும் வந்தார். இவர்களது கார் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே 3.25 மணிக்கு வந்தது.
அப்போது நினைவிடத்தில் அதிக கூட்டமிருந்தது. காவல்துறையினர் கூட்டத்தை விலக்கி ஜெயலலிதாவும் சசிகலாவும் அஞ்சலி செய்ய வழிவகை செய்தனர். இருவரும் மலர் வளையம் வைத்து வணங்கினர்.
அப்போது ஜெயலலிதாவை பார்க்கும் ஆர்வத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் கூட்டத்தினரை ஒழுங்குப்படுத்தியபடியே இருந்தனர்.
அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் கார்மீது கல் ஒன்று வந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து தேவர் நினைவிடத்தை நோக்கி கற்கள் சரசரவென வீசப்பட்டன.
கல்வீச்சு சம்பவசத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.
இதில் ஜெயலலிதாவின் காரின் கண்ணாடி நொறுங்கியது. தேசிய பாதுகாப்புப் படையினர் வந்த 3 வாகனங்களும், தமிழக காவல்துறையின் ஒரு வாகனமும் சேதமடைந்தன. மேலும் இந்த கல்வீச்சு சம்பவத்தில் காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்தனர்.
கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினார்கள். மொத்தம் 5 ரவுண்டுகள் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.
இந்த சம்பவம் நடந்துகொண்டிருக்கையில், ஜெயலலிதாவை நினைவிடத்தின் பின்வாசல் வழியாக காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து ஜெயலலிதா நிருபர்களிடம் கூறுகையில்,
”இது தி.மு.க. வின் திட்டமிட்ட சதியாகும். இசட் பிரிவு பாதுகாப்பு இருந்தும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நான் 17 வருடமாகவே மிரட்டலில் வாழ்ந்து வருகிறேன். மிரட்டல் கடிதம் வந்தது குறித்தும் அறிக்கை கொடுத்தேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அறவே சீர்குலைந்துள்ளது. இங்கு சட்டம், ஒழுங்கே இல்லை. என்மீது பற்றும் பாசமும் வைத்துள்ளவர்கள் இங்கு அதிகம். இங்கேயே எனக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து, அங்கிருந்து தனி விமானம் மூலம் 6 மணிக்கு சென்னை திரும்பினார்.
கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Related Posts Title
Tags: Pasumpon, Thever guru pooja, கல்வீச்சு, தேவர் ஜெயந்தி, பசும்பொன்