Tamilvanan » Blog Archive » Ready to go jail for Tamils, says Seeman and Ameer

Ready to go jail for Tamils, says Seeman and Ameer

seeman1.jpgameer.jpgதமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்வோம்: சீமான், அமீர் பேட்டி

சென்னை: நேற்று இரவு கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் இருவரும், ‘தமிழர்களுக்காக குரல் கொடுத்தோம் தமிழர்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்வோம்’ என்றனர்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றக் கோரி தமிழ்த் திரையுலகம் சார்பில் கடந்த 19ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த போராட்டத்தின்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக இயக்குநர்கள் சீமான், அமீர் பேசியதாகப் புகார் கூறப்பட்டது.

இவர்கள்மீது வழக்கு  பதிவு செய்த தமிழக கியூ பிரிவு காவல்துறையினர், நேற்று இரவு அமீரையும், சீமானையும் கைது செய்து ராமநாதபுரம் அழைத்துச் சென்றனர்.

அமீரை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, ”தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தேன். தொடர்ந்து தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்வேன்” என்றார். 

இயக்குநர்சீமான் கூறுகையில், ”எங்களை கைது செய்வதற்காக தூண்டியது யார் என்பது அடையாளம் தெரிந்துவிட்டது” என்றார்.

இவர்களிருவரின் கைது குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து கூறுகையில்,

”இந்த இரண்டு பிள்ளைகளும் தவறு எதுவும் செய்யவில்லை. இவர்கள் பதவிக்காகப் போராடவில்லை. தமிழர்களுக்காக, தமிழ் உணர்வுடன் போராடினார்கள். ராமேஸ்வரம் போராட்டத்தைப் போல உலகில் வேறு எங்கும் திரைப்பட இயக்குநர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியதில்லை. இவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகும் வரை தமிழ் இன உணர்வுள்ள இயக்குநர்கள் யாரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள்” என்றார்.

இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் கைது நடவடிக்கை குறித்து, தமிழக காவல்துறை இயக்குநர் (சட்டம், ஒழுங்கு) வெளியிட்ட விளக்க அறிக்கையில்,

‘இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த 19 ஆம் தேதி நடந்த தமிழ் திரை உலக, ‘தமிழின உணர்வுக் குழு’ வின் போராட்டத்தின் போது திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் விதத்திலும் பேசினார்கள். அவர்களது பேச்சு சட்டவிரோதமாக இருந்தபடியால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு  ஏ.வி.எம். படப்பிடிப்பு தளம் அருகில் உள்ள காமராஜர் சிலை அருகே உதவி இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

Related Posts Title

Tags: , , , , ,

Leave a Reply