Friday, 24 Oct 2008
தீபாவளி?
இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரே பண்டிகை தீபாவளிதான். தீப ஆவளி என்றால், விளக்கு வரிசை என்று அர்த்தம். வடநாட்டில்தான் தீபங்களை வரிசையாக, அலங்காரமாக வைத்துத் தீபாவளியன்று கொண்டாடுவார்கள்.
தமிழகத்தில் கொண்டாடப்படும் தீபாவளியை ‘நரக சதுர்த்தசி’ என்று கூறலாம்.
இந்தியாவின் பெரும் பகுதிகளில் தீபாவளி ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பண்டிகை தன திரயோதசி. அதாவது செல்வத்தை வழிபடும் தினம். அன்று லஷ்மி பூஜை செய்வதும், லாபம் நிறைவதற்கான வழிபாட்டுடன் கடைக் கணக்குகளைத் தொடங்குவதும் வழக்கம். நாராயணன் மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்ட முகூர்த்த நாள் என்றும் இந்த நாள் குறிப்பிடப்படுகிறது
இரண்டாவது நாள் - நரக சதுர்த்ததசி. நரகாசுரனைக் கிருஷ்ணன் வதம் செய்த நாள். மகா விஷ்ணுவுக்கும், பூமாதேவிக்கும் பிறந்த மகனே நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. தர்மரூபதேசம் என்ற நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்த நரகாசுரன், சிறந்த சிவ பக்தன். சிவனுடைய அருள் பெற்று பல வரங்களை அடைந்து, பிராக்யோதிஷா என்ற கோட்டைகள் சூழ்ந்த தலைநகரில் ஆட்சி செலுத்தி வந்தான் நரகாசுரன். தேவர்களின் குறையைத் தீர்க்கும்பொருட்டு நரகாசுரனை அழிப்பதற்காக யுத்தம் செய்ய வந்தார் கிருஷ்ணன்.
நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த அந்த தினம், விடியுமுன் எண்ணெய் ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பட்சணங்களுடன் மகிழ்ச்சியோடு மக்களால் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது.
தன்னுடைய ஒரே மகனான நரகாசுரன் மாண்டாலும், அவன் இறந்த நாளை மக்கள் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து கொண்டாட வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் வரம் கேட்ட பூமாதேவி, அன்றைய தினம் நாம் எந்த நீரில் குளித்தாலும் அது கங்கையில் குளித்த புனிதத்தை தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாள். அதன்பொருட்டே நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்
நாம் தீபாவளி அன்று லேகியம் செய்து சாப்பிடுவதற்கும் அர்த்தம் இருக்கிறது. அன்றைய தினம் தான் பெருமாள் தன்வந்திரியாக அவதாரம் தரித்தாராம்.
மூன்றாவது நாள் லக்ஷ்மி பூஜை. மாலை வேளையில் தீபங்களை ஏற்றி விடு முழுவதும் வைத்து பூஜிக்கிறார்கள்.
நான்காவது நாள் மகாவிஷ்ணு வாமனனாக வந்து மகாபலியை தன்னுடன் அழைத்துக்கொண்ட தினம் என்று கூறப்படுகிறது. மண்ணுலகைத் தானமாகத் தந்து மடிந்த மகாபலி அன்றைய தினம் மீண்டும் வந்து மக்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதாக ஐதிகம்.
ஐந்தாவது நாள், சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் புத்தாடையும் பட்சணமும் கொண்டுவந்து கொடுத்து, விருந்து சாப்பிட்டுச் செல்லும் தினம். வெற்றி வாய்ப்பு தினம் என்று அன்று பந்தயங்களிலும் ஈடுபடுவார்கள்.
வங்காளத்தில் தீபாவளியை ஒட்டிக் காளி பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
தீபாவளிப் பண்டிகையை ஜைனர்களும் கொண்டாடுகிறார்கள். மகாவீரர் நிர்வாண நிலையை அடைந்த தினமான அன்று, அறியாமை என்ற இருளை நீக்கும் தீப ஒளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
பெளத்தர்களும் தீபாவளி கொண்டாடுகிறார்கள். அமாவாசையன்று இரவு, தீபங்களை ஏற்றி நதிகளில் மிதக்க விடுகிறார்கள். கம்பங்களில் தீபங்களைத் தொங்கவிடுகிறார்கள். தியசக்திகளை இந்த ஒளி விரட்டும் என்பது அவர்களுடைய நம்பிக்கை.
இந்தியாவின் பல மாநிலங்களிலும், வெவ்வேறு விதமாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை அன்று தீயசக்திகளும், அறியாமையும் நீங்கி நல்வாழ்வு பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
































