Vaiko put into jail
ஆயுதம் ஏந்த தயார் பேச்சு எதிரொலி: வைகோ கைது

சென்னை: இலங்கைத் தமிழருக்காக ஆயுதம் ஏந்தவும் தயார் என்று பேசியதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில்அடைக்கப்பட்டார். தனித் தமிழ்நாடு விரைவில் மலரும் என்று பேசிய அக்கட்சியின் அவைத்தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற பெயரில் நடந்த கருத்தரங்கில் பேசிய வைகோ 21ஆம்தேதி ‘இலங்கையில் இப்போதுள்ள நிலை நீடித்தால் தமிழர்களைக் காப்பாற்ற, அங்கு போய் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள். அதற்கு நானே முதல் ஆளாக நிற்பேன்” என்றார். கட்சியின் அவைத்தலைவர் கண்ணப்பன், ”தனி ஈழம் மட்டுமல்ல. தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும்” என்று பேசினார்.
இவர்களின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது என்று கியூ பிரிவு காவல்துறைக்கு புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் பேசிய பேச்சு அடங்கிய சிடிகளை காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்தனர். பின்னர், வைகோ கண்ணப்பன் இருவர் மீதும் சென்னை கியூ பிரிவு எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து அண்ணாநகரில் உள்ள வைகோ வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் நேற்று மாலை 4 மணி அளவில்அவரை கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே ஆலாம்பாளையத்தில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருந்த கண்ணப்பன் மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
வைகோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.