ஹிதேந்திரன் இதயம் தாங்கிய சிறுமியுடன் தாய் உருக்கமான சந்திப்பு!

சென்னை: மகனின் இதயத்தை தாங்கிக் கொண்டு சிரிக்கும் சிறுமியை, தனது மடியில் தாங்கி கண்கலங்கினார் ஹிதேந்திரனின் தாய் புஷ்பாஞ்சலி.
சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டதால் மகனின் (ஹிதேந்திரனின்) இதயம் உள்ளிட்ட உறுப்புகளை 8 பேருக்கு தானமாக வழங்கிய திருக்கழுக்குன்றம் மருத்தவத் தம்பதி அசோகன் - புஷ்பாஞ்சலி ஆகியோரின் செலைப் பாராட்டும் விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்றுநடந்தது. ரோட்டரி இண்டர்நேஷனல் மாவட்டம் 3230- சார்பில் நடந்த இந்த விழாவில், ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்துகொண்டு மருத்துவத் தம்பதியைப் பாராட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது:
”மகனை இழந்த சோகத்தையும் தாண்டி, அசோகனும் புஷ்பாஞ்சலியும் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்து, மகனின் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தது தன்னலமற்ற சேவையாகும்.
உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களையும், உறுப்பு தானம் தேவைப்படுவோர்களையும் அடையாளம் கண்டுகொள்ள மருத்துவமனைகள் மற்றும் காவல்துறை இணைந்து ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும்.
உலகம் முழுவதும் உடல் உறுப்புகள் தட்டுப்பாடு உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 96 ஆயிரத்து 500 பேருக்கு உறுப்புகள் தேவைப்படுகிறது. இந்தியாவில் ஏராளமான சாலை விபத்துகள் நேர்கிறது. ஆனால் மிகக் குறைந்த அளவில்தான் உறுப்பு தானம் செய்யப்படுகிறது.
ஹிதேந்திரனின் இதயத்தை 11 நிமிடத்தில் எடுத்துச் சென்று, சிறுமி அபிராமிக்கு உரிய நேரத்தில் பொருத்துவதற்கு முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ஹதேந்திரனின் தந்தை அசோகன் தழுதழுத்தக் குரலில்,
”ஒரு தந்தையாக எனது மகனுக்கு ஆற்றவேண்டிய கடமையை செய்யத் தவறிவிட்டேன். எனது பைக்கை ஓட்ட, அவனை நான் அனுமதித்திருக்கக் கூடாது. இருந்தாலும் பைக்கை எடுத்து ஓட்டாதே என்று எத்தனையோ முறை கூறினேன். அதைமீறி, அதை எடுத்துச் சென்றதால் அவனை இழந்து விட்டோம். எனவே, சிறுவர்களை பைக் ஒட்ட அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இவ்விழாவில், மருத்துவர் தம்பதிகள் அசோகன், புஷ்பாஞ்சலி, அவர்களது மகன் ஹிதேந்திரனின் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி அபிராமி, சிறுமியின் பெற்றோர் ஆகியோரை விழாவுக்கு வந்திருந்த அனைவரும் நெகிழ்வுடன் பார்த்தனர். பலரும் ஹிதேந்திரனின் பெற்றோரை நேரிடையாகக் கைகுலுக்கிப் பாராட்டினர். அம்மா மஞ்சுளாவின் மடியில் இருந்த சிறுமி அபிராமி, ஹிதேந்திரனின் தாயான புஷ்பாஞஞ்சலியின் பக்கமாக வந்தாள். மகனின் இதயம் பொருத்தப்பட்ட அபிராமியை தூக்கி தன்மடியில் வைத்துக்கொண்ட அவர் கண்கள் குளமாக மாறியது. மகனின் இதயத்துடன் மறுபிறவி எடுத்துள்ள அபிராமியை அணைத்தபடி அவர் அமர்ந்திருந்த காட்சி நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது.
சிறுமி அபிராமி மலர்கொத்து கொடுத்து, ஹிதேந்திரனின் பெற்றோரை வாழ்த்த வந்தாள். அவளைப் பார்த்ததும் அசோகன் வாரி அணைத்து உச்சிமுகர்ந்து முத்தமிட்டார். புஷ்பாஞ்சலியும் அவளுடைய கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டார். இந்தக் காட்சியைப் பார்த்த ஆளுநர் பர்னாலா உள்பட அனைவரும் கண்கலங்கினர்.
































