Friday, 17 Oct 2008

2008/10/17 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்
கா.மீனாட்சிசுந்தரம், புதுவை.

அமைச்சர் ராஜாவால் 25,000 கோடி இழப்பாமே?

சீறிப் பதிலளித்துள்ள விதத்தைப் பார்த்தால் ராஜா குற்றமற்றவராகத் தெரிகிறார். பிரதமரை, அமைச்சரவை சகாக்களைக் கலந்து எடுக்கப்பட்ட முடிவு எனும்போது தவறான முடிவாக இருக்காது என்றே நம்புவோம். பகிரங்க விசாரணைக்குத்தான் தயார் என்று ராஜா அறிவிக்காதவரை இவர் சட்டையில் ஏற்பட்ட கறை போவது கடினம்தான்!

எஸ்.எம்.குமரன், கடலூர்.

தமிழகத்தின் இன்றைய அத்தியாவசிய ஊழியர்கள் யார்?

டாஸ்மாக்கின் 35,000 பேர்களும் பல கோடிகளைச் சம்பாதித்துத் தருகிறவர்கள். இன்று இவர்கள்தாம்!

ஹேமநாதன், மாகரல்.

சென்னை தியாகராய நகர் சாலை ஆக்கிரமிப்புகளை அளவெடுத்தார்களே, பயன் இருக்குமா?

சர்வேயர்களுக்குக் கொஞ்சம் பொழுது போயிருக்கும். ஆக்கிரமிப்புகளை அளவெடுத்த போது, இம்மாம் பெரிய சென்னையா என்று அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். அளவெடுத்து முடிந்தபின் (மீண்டும் ஆக்கிரமிப்பால்) தம்மாத்துண்டு சென்னையா என்று அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். இந்த ஆக்கிரமிப்புகள் ஒரு குளத்துப் பாசியைப் போல! கல் எறிந்தால் விலகும். மீண்டும் சேர்ந்து கொள்ளும் தேர்தல் வேறு கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டதால் இவற்றை ஒன்றும் செய்ய முடியாது.

ம.செ.மணி, பூங்குடி.

கங்குலியின் ஓய்வு அறிவிப்பு எதிர்பார்த்த ஒன்றா?

திரும்பவும் அணியில் இடம்பெறுவேன். பிறகுதான் ஓய்வு பெறுவேன் என்று சபதம் எடுத்தவர் போல் தெரிகிறது. வெற்றிகரமான தலைவர். இந்தியர்களுக்குப் பல முறை மகிழ்ச்சி அளித்து பெருமைப்படுத்தியவர். பல நேரங்களில் எதிர்அணிப் பந்து வீச்சாளர்களையும், பந்து வீசறதுன்னே தெரியலையே என்று தலைமுடியைப் பியத்துக் கொள்ள வைத்தவர். நான்கு டெஸ்டுகளிலும் நல்லபடியாக ஆடி, ‘போகாதே போகாதே எங்கள் முன்னாள் தலைவா!’ என்று அனைவரையும் கெஞ்ச வைக்கும்படி ஆடிக்காட்ட வேண்டும்.

என்.திருமலை, பொழிச்சலூர்.

தீவிரவாதிகள் மீது மத்திய அரசின் நடவடிக்கை?

‘பாம்பும் சாகாமல், தடியும் ஒடியாமல்’, என்பார்களே, அந்த மாதிரியான நடவடிக்கை. மன்மோகன்சிங் மண்ணைவிட பொறுமையாக இருக்கிறார். மண்கூட காற்றால் தன்னைக் கிளறிக் கொள்கிறது. அந்தக் கிளறல் கூட இந்த சிங்கிடம் இல்லை.

எஸ்.சீதாராமன், என்.எஸ்.கே.நகர்.

இரயில்வே ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸாக 73 நாள் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளதே?

இது கடந்த ஆண்டைவிட மூன்று நாள் அதிகம். இப்படி மூன்று மூன்றாக ஏறினாலே, ஒன்பது ஆண்டுகளில் இந்த இரயில்வே ஊழியர்கள் போனஸில் நூறாவது நாளைக் கொண்டாடி விடுவார்கள். இவர்களின் சிக்னல் எப்படியாவது கிளியராகி விடுகிறது. பயணிகளுக்கான சிக்னல்கள்தாம் ‘மக்கர்’ பண்ணுகின்றன.

எம்.செல்வராஜ், வேலூர்.

தி.மு.க. தோல்வியடைந்தால் அதற்கு மின்வெட்டுதான் காரணமாக இருக்கும் என்று ஆர்க்காட்டார் பேசியிருப்பது பற்றி….?

மறைக்க விரும்பாத மனசாட்சியின் குரல். தஞ்சை மாவட்டத்தில், கோவை மாவட்டத்தில் அண்மையில் நிறையப் பயணித்தேன். மக்கள் படும் துன்பம் சொல்லில் வடிக்க இயலவில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் ஏதோ ஒரு வகையில் மின் வெட்டால் நஷ்டப்பட்டும் பாதிக்கப்பட்டும் இருக்கிறான். இதற்குத் தி.மு.க. கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

ஜி.செந்தில், கும்பகோணம்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரிலுள்ள ஒரு செருப்புத் தொழிற்சாலையின் ஊழியர்கள் இரயிலில் ஓ.சி.யில் பயணம் செய்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுப் போனது பற்றி?

மிக மோசமான சம்பவம். தமிழகத்தில் நடந்திருப்பது பெரிய தலைக்குனிவு!

ஏ.அம்பிகா, சென்னை.

ஐம்பது ரூபாய் மளிகையில் ருசியான குழம்பை வைக்கலாம் என்கிறாரே ஸ்டாலின்?

இவர்கள் கொடுப்பது ஒரு நாளைக்கு! அந்த ஒரு நாள் குழம்பை முப்பது நாளைக்குச் சரியாகப் பங்கிட்டு, அதைச் சரியாகக் சுண்ட வைத்தால் அவள் சரியானதொரு இல்லத்தரசியாகத்தான் இருப்பாள். ஒரு ஐம்பது ரூபாயில் ஒரு சரியான இல்லத்தரசியைத் தேர்ந்தெடுக்கும் தி.மு.க. அரசு வாழ்க!

எம்.செலினா, திட்டச்சேரி.

50 ரூபாய் விலையில் மளிகைப் பொருள்கள் திட்டம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லையே.

எகிறிக் கிடக்கும் விலைவாசியில் மக்கள் என்ன வாங்கினால் - எப்படி வாங்கினால் மிச்சம் பிடிக்கலாம் என்கிற தேடலில் இருக்கிறார்கள். நல்ல திட்டம்தான். ஆனால் யானைப் பசிக்கான சோளப் பொரி இது!

மு.ஜெபராஜ், மாதவரம்.

ஜெ. யாருடன் கூட்டணி சேருவார் என்கிறீர்கள்?

திருநாவுக்கரசரின் அறிவிப்பும் சோவின் சந்திப்பும் நிலைமைகளைத் தெளிவுபடுத்துவதுபோல் இருக்கின்றன. கூட்டணி இன்றித் தனித்தே நிற்பேன் என்கிற ஜெ.வின் கடந்த கால முடிவு தொடர்ந்தால் அது பாரசூட் இல்லாத வானத்துக் குதிப்பு!

டி.கணபதி, பூந்தமல்லி.

தமிழகம் மாதிரி பிற மாநிலங்களும் இப்போது இலவசத் திட்டங்களை அள்ளி விடுகின்றனவே!

என்ன செய்ய? ”அஞ்சு காசுக்குக் குதிரையும் வேண்டும்; அது ஆறு கடக்கப் பாயவும் வேண்டும்’ என்கிறார்கள். இதனால்தான் எல்லோருமே இப்போது கழகங்களைக் காப்பியடிக்கிறார்கள்.

ஆர்.பாபு, மூலக்கடை.

என்ன செய்தாலும் மனைவியிடம் நல்லபெயர் எடுக்க முடியவில்லையே?

நீங்கள் மட்டுமா? நாங்களெல்லாம் எங்கே போனோம் என்று கேட்டு ஒரு மனிதச் சங்கிலியே உங்கள் தெருவில் காத்துக் கிடக்கிறது. தெருவிற்கு நீங்கள் போனால்தானே? நல்ல பெயர் எடுக்க மனைவியையே சுற்றிச் சுற்றி வந்தால்?

எம்.ஆரிப், சென்னை.

சிவாஜியை நினைத்தால் உணர்ச்சிவசப்படுகிறேன் என்கிறாரே கருணாநிதி?

தொழிலிலும் அரசியலிலும் கலைஞரிடம் பங்கு கேட்காதவர் சிவாஜி! அதனால்தான் இந்தத் தோழமை, இந்த உணர்ச்சி வசப்படுதல். இன்றைய காங்கிரஸ்காரர்கள் மாதிரி அவரும் இருந்திருந்தால்?

கி.முத்துவீரப்பன், தேவகோட்டை.

நானோ கார் தொழிற்சாலை குஜராத்திற்கு நகர்ந்தது ஏன்?

இந்தியாவில் இன்று திறமை மிக்க முதல்வராக வியக்கப்படுபவர் மோடி. குஜராத்தில் சாதகமான தொழிற் சூழலை, டாட்டா நிறுவனம் நன்கு இனம் கண்டு கொண்டு விரும்பியதும் ஒரு காரணம். இவை தவிர மோடி என்ன மோடிமஸ்தான் வேலை செய்தாரோ தெரியவில்லையே!

வி.அருளரசன், சேலம்-1.

அமெரிக்காவிற்கும் அடி சறுக்குகிறதே?

நான்கு முக்கிய நிறுவனங்கள் எம்பயர் ஸ்டேட் கட்டடங்கள் நொடியில் நொறுங்கி விழுந்ததைப் போல் விழுந்தனவே, அதைச் சொல்கிறீர்களா? இதில் மகிழ்ச்சி வேண்டாம். இந்தியா இதில் நிறையவே பாதிக்கப்பட்டுள்ளது. ஓபாமா பதவிக்கு வந்து சரி செய்தால்தான் உண்டு!

கு.வீரபத்திரன், பொன்னேரி.

ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்கிறாரே திருநாவுக்கரசர்!

ரஜினி இரசிகர்களின் எதிர்பார்ப்பை மையப்படுத்தியிருக்கிறார். ரஜினி அரசியல் அமைப்பை ஆரம்பிக்கத் தயங்குவது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால் பெரும் இளைஞர் சக்தியைத் தன்னகத்தே கொண்டிருக்கும் ரஜினி ஒரு சமூக அமைப்பைத் தோற்றுவிக்கலாம். சமூகத் தொண்டு புரிந்து மக்கள் நெஞ்சில் அழியா இடம் பிடித்து, தருணம் பார்த்து அரசியல் அமைப்பாக உருமாறலாம். துவண்டுகிடக்கும் ரஜினி இரசிகர்களை ஆக்க சக்தியாக உருவாக்க ரஜினி முன்வர வேண்டும்.

கே.இருதயராஜ், திருச்சி.

மதுரைக்கும் முதலமைச்சர் கலைஞர்தானே?

ஒருவர் கேட்ட கேள்வியை இன்னொருவர் கேட்கலாகாது. இது பா.ஜ.க.வின் பொன். இராதாகிருஷ்ணன் கேட்ட கேள்வி! கம்யூனிஸ்டுகளும், பா.ஜ.க.வினரும்தான் இது மாதிரி வினா வங்கிகளை இப்போது தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது மாதிரி வினா வங்கிகளுக்கு இவர்கள் காபிரைட் வாங்கிவிட்டதாகக் கேள்வி!

சி.எஸ்.ஏ., சென்னை.

கோத்ரா இரயில் விபத்தில் மோடி குற்றமற்றவர் என் நிரூபிக்கப்பட்டிருக்கிறாரே?

அவ்வளவு பெரிய இரயில் விபத்தில் இந்த என்ஜின் மட்டும் தப்பிப்பது பெரிய ஆச்சரியமான விஷயம்!.

10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


2 Responses to “2008/10/17 Junior Kelvi Pathil”

  1. Amudha

    Dear Sir,
    I think answer to the question (Americavukkum adi sarukukirathey) is wrong. It’s World Trade Center(WTO) not an Empire state building.

    Regards,
    Amudha mohan

  2. Jadhi

    Dear Sir,

    Do you have any plans for eliminating caste system in India?

Leave a Reply