Friday, 10 Oct 2008

2008/10/10 Lenavin Payna Katturai

taiwan-travel.jpgதைவான் சென்று வந்தேன்!

தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

தைவானின் தலைநகரான தைப்பேயில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.வை அடைந்து என் அடையாளங்களை, அறைப்பதிவைக் காட்டியபோது வரவேற்பாளர் தன் கண்களைக் குறுக்கிக் கொண்டு பார்த்தார். பார்க்க, சீனர்போல் இருந்தார். ”ஆமாம், உங்களுக்கென ஓர் அறை உள்ளது. ஆனால் உங்களுக்கென்று சலுகை எதுவும் கிடையாது. எல்லோருக்கும் உள்ள வாடகைதான் உங்களுக்கும்.”

”நான் ஒய்.எம்.சி.ஏ.வில் உறுப்பினன்!” கடைசிக் சொல்லைச் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னேன். உறுப்பினர்களுக்குச் சலுகை உண்டு என்பதுதான் உலகம் முழுவதிலுமுள்ள ஒய்.எம்.சி.ஏ. விடுதிகளில் உள்ள விதி.

”இருக்கலாம். இது. ஒய்.எம்.சி.ஏ. இல்லையே!”

”என்னது! இது ஒய்.எம்.சி.ஏ. இல்லையா? எனக்கு என்று பதிவு செய்யப்பட்ட அறை இருக்கிறது என்று சொன்னீர்களே!”

”ஒய்.எம்.சி.ஏ. விடமிருந்து நாங்கள் நிர்வாகத்தை வாங்கிக்கொண்டுவிட்டோம்.”

”ஆனால் கட்டடத்தின் வெளியில் இன்னமும் இது ஒய்.எம்.சி.ஏ. என்றுதான் அறிவிப்பு இருக்கிறது.”

”போர்டை இன்னும் மாற்றவில்லை”

”எனக்கு வந்த மின்னஞ்சல் பதிலில் கூட ஒய்.எம்.சி.ஏ. என்றுதான் பெயர் உள்ளது.”

”இப்போதுதான் நிர்வாகம் மாறியது என்று சொன்னேனே!”

வழக்கத்திற்கு மாறாக நான் சூடானேன்!

”ஒய்.எம்.சி.ஏ.வில் அறை பதிவு செய்தால் கட்டணம் குறைவாக இருக்கும்; சலுகையும் தரப்படும் என்பதால்தான் தைப்பேயில் உள்ள எத்துணையோ ஓட்டல்களை விட்டு விட்டு உங்களிடம் அறை பதிவு செய்தேன். எனவே எனக்கு உறுப்பினர் சலுகை என்று ஏதாவது தாருங்கள்.”

“மன்னிக்க வேண்டும். தினமும் 5000 ரூபாய் (714 தைவாய் டாலர்கள்) மற்றும் ஆடம்பர வரிகள் சலுகைகள் எதுவும் இல்லை.”

”ஐயாயிரமா? தாங்காது! என் பட்ஜெட்டில் இடமில்லை.”

”அதை நீங்கள்தாம் முடிவு செய்ய வேண்டும்.”

நான் சக்கையாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். ஒய்.எம்.சி.ஏ. இலாப நோக்கம் அற்ற அமைப்பு. இவர்களோ நிர்வாகத்தை மாற்றிக் கொண்டு பெரிய கட்டணமாகச் சொல்கிறார்கள். வாடகைக்கே இவ்வளவு என்றால் இந்த விலைவாசி மிகுந்த நாட்டில் சொச்ச நாளை எப்படி ஓட்டுவது?

”என் உடமைகள் இங்கே இருக்கலாமா? நான் பக்கத்தில் போய் என் பட்ஜெட்டில் ஏதும் ஓட்டல் இருக்கிறதா எனப் பார்த்துவிட்டு வருகிறேன்.”

சட்டென முகம் மாறினார் அந்தத் தைவானியர். ஆள் தப்பிக்கிறானே என்கிற வருத்தமெல்லாம் காணோம். என் ஓட்டலிலேயே பெட்டிகளை வைத்துவிட்டு வேறு ஓட்டலில் இடம் தேடப் போகிறாயா? என்கிற சலிப்புப் பார்வை அது.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முதலில் திணறிய அவர், ”சரி, ஓரமாக வையுங்கள்” என்றார். ஓரமாக வைத்த நான் ‘நன்றி’ என்று சொல்லிவிட்டு ஓட்டல் அறை தேடப் புறப்பட்டேன்.

பார்க்க ஓரளவு நடுத்தரமாக உள்ள ஓட்டல் வாடகை 500 ரூபாய் என்றால் ஆடம்பர ஓட்டலில் நுழைந்து வாடகை கேட்கவே கூடாது என ஓர் அளவுகோல் மட்டும் வைத்துக் கொண்டேன்.

நான் பெட்டிகளை வைத்திருந்த முன்னாள் (?) ஒய்.எம்.சி.ஏ. ஓட்டலை விட அனைத்தும் மிக ஆடம்பரமாகவே இருந்தன.

ஒய்.எம்.சி.ஏ.வைச் சுற்றி ஓட்டல்களுக்குப் பஞ்சமே இல்லை. இரவு 11.00 ஆகியும் தெருக்களில் அப்படி ஓர் நடமாட்டம். உணவுக் கடைகளும் கணக்கு வழக்கில்லாமல் இருந்தன.

கடந்து போகையில் நாற்றம் தாங்க முடியாதபடி இருந்தது. ஐயயோ! இந்த மாற்றத்தை எப்படித்தான் சகித்துக் கொண்டு என்னதான் சாப்பிடப் போகிறோமோ என்று இருந்தது.

பசிவேறு வயிற்றைப் பதம் பார்த்தது. முதலில் உணவு பிறகு தான் தங்குமிடம் தேடல். பெரிதாக வலம் வந்தேன். கால் கடுக்க நடந்தேன். அத்துணையும் நாற்றக் கூடங்கள்! அசைவம் சாப்பிடுபவர்களால்கூடச் சகித்துக் கொள்ள முடியாத நாற்றம்.

ஓர் உணவுக் கடையில் கேட்டேன். ”இங்கு இந்திய உணவுக் கடை ஏதும் இருக்கிறதா?” முகத்தில் எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லை. என்ன இப்படி அலட்சியம் செய்கிறானே இந்த ஆள்?

மறுபடி கேட்டேன். ”என்னவோ கேட்கிறான் பார் இந்த ஆள்” என்கிற பாணியில் உள்ளே இருந்த ஒருவரிடம் சொல்ல, அவரிடம் நான் விளக்க, அவரும் பதில் சொல்லாமல், முதலில் கேட்ட ஆளிடம் ஏதோ விளக்க, இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

இந்திய உணவுக் கடை எங்கே என்று கேட்டால் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? எரிச்சல் உண்டானது. நகரப்போன கணத்தில் ஒருவர் ”நோ இந்தியன்! நோ புட்” என்றார். இந்திய உணவுக்கடை இங்கு இல்லை என்று புரிந்து கொள்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

சென்னை பாரிஸ் பகுதியில் காசி செட்டித் தெருப் பகுதியை ஒப்பிடும்படியான பகுதி அது. குறுகலான சாலைகள். நெருக்கமான கடைகள். ஆனால் சுத்தம், ஒழுங்கு இருந்தன.

அலைந்து தவித்து ஒரு கடையைத் தேர்ந்தெடுத்தேன். எதோ ஒருவகை பாலில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் முட்டைகோஸ் கறியை நறுக்கிப் போட்டு கனம் கனமாக வெட்டி எடுத்து டப்பாவில் போட்டுக் கொடுக்கிறார்கள். நாற்றமில்லாமல் இருந்தது.

வாங்கப் போனதும் டக்கென்று ஒரு பட்டனை அழுத்தினார் ஓர் அம்மணி. கணவன் சமைக்க, அம்மணி கல்லாப் பொறுப்பு. ஒரு சாக்கு முட்டை நிறைய நறுக்கிப் போடப்பட்ட முட்டைக் கோசுகள். தயாராக வைத்திருக்கும் மாவு, முட்டைக் கலவை. வாய் பிளந்து வைக்கப்பட்ட எண்ணெய் டின். அதிலிருந்து ஒரு மரக் கரண்டியில் ஏகப்பட்ட எண்ணெயை ஊற்றி நம்மூர் ஓட்டல் தோசைக் கல் போன்ற மிகப் பெரிய(2-1/2 x 4) கல்லில் சரசரவென்று மாவை ஊற்றி அந்த உணவைத் தயார் செய்கிற வேகம் அபாரம்.

அந்த அம்மணி நீட்டிய சீட்டு டோக்கனில் 169 என்று இருந்தது. கடையைச் சுற்றி ஏகப்பட்ட பேர் காத்திருந்தார்கள். 142 ஆம் எண் கொண்ட டோக்கனை நீட்டியவரிடம் பார்சலைக் கொடுத்து காசை வாங்கிப் போட்டார் அம்மணி.

ஐயயோ! இன்னும் 26 பேர்களா? எப்பய்யா தருவீங்க?

அதற்குள் ஓட்டல் வலம் வந்து விடுவோமா? சரியான உணவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் போலிருக்கிறதே! இவ்வளவு கூட்டமான கடை என்றால் நிச்சயம் நன்றாக இருக்கும். வேறு எந்த உணவகத்திலும் இவ்வளவு பேர் காத்திருக்கவில்லையே!

துணிந்து வெளியேறினேன். நம் முறை வருவதற்குள் தங்க இடம் தேடிப் பிடிக்க வேண்டும்.

ஒரு நடுத்தர ஓட்டல் இது என்று கணித்துக் கேட்டதற்கு 8500 ரூபாய் (1,214 தைவான் டாலர்) வாடகை என்றார்கள். ஐயோ! முன்னாள் ஒய்.எம்.சி.ஏ.வே தேவலை போலிருக்கிறதே!

நடுவில் ஒரு பிரமாண்ட ஓட்டலைக் கடக்க நேரிட, அதன் வாடகையைக் கேட்டேன். ஒரு நாளைக்கு இலட்ச ரூபாயாம்! ஒரு நாள் வாடகைதான். தலை சுற்றாத குறைதான்!

பேசாமல் ஒய்.எம்.சி.ஏ.விடம் போய் அசடு வழிந்து விட வேண்டியதுதான். ஐயாயிரம் ரூபாய்தான் இருப்பதிலேயே விலை மலிவான ஓட்டல் என்றால் தைப்பேயின் தரம் என்ற என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த ஆளிடம் போய் மறுபடி நிற்க வேண்டியிருக்கிறதே என்கிற யோசனை பலமாக எழ, சரி வேறு வழியில்லை என்று சமாதானம் சொன்னது -

முட்டைக்கோஸ் முட்டைத் தோசை பார்சலை வாங்கிக் கொண்டேன். வழியிலேயே தின்றுவிடலாமா என்கிற அளவுக்குப் பசி. பக்கவாட்டில் கையை விட்டு சற்றே உருவி சற்று ருசி பார்த்தேன். அட பிச்சுட்டான்யா பிச்சு! இருக்கிற பிரமாத ருசிக்கு இது போதுமா? பரவாயில்ல. ஒரு கோக் வாங்கி மீதமுள்ள காலியிடத்தை நிரப்புவோம்.

வரவேற்பறையில் இருந்தவர் மாறியிருந்தார். சே! மாறியிருந்தாள் என்பதே சரி. ஓர் அழகான தைப்பே பெண்மணி. தங்கக் கண்ணாடி பிரேமில் பளீர் என்று இருந்தாள்.

”எஸ்! மே ஐ ஹெல்ப் யூ?”

நடந்த கதையெல்லாம் சொல்லி, ”இந்தப் பெட்டிகள் என்னுடையவை” என்றேன்.

முன்பணம் கட்டச் சொன்னாள். கேட்ட தொகை எப்போது தைப்பேயை விட்டு ஓடலாம் என்கிற உணர்வையே உண்டாக்கியது.

(தொடரும்)

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

Related Posts Title


Leave a Reply