Friday, 10 Oct 2008

2008/10/10 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.கண்ணன், சின்னசேலம்.

நடிகை திரிஷா இந்திப் பக்கம் போகப் போகிறாராமே?

தமிழக இதயங்களின் இதயம் மும்பைக்குப் போவதாயிருந்தால், தும்பைச் பூச் சிரிப்போடு வாழ்த்துவோம்! இதயத்திற்கு மொழியேது!


ஆர்.செபாஸ்டியன், சென்னை.

இன்றைய அரசியல்வாதிகள்?

மாடலிங்குகள் கெட்டார்கள். அந்த அளவிற்குப் புகைப்படங்களுக்குக் காட்சி தருகிறார்கள். கேமராவின் கோணங்களை இவர்களே முடிவு செய்கிறார்கள். மக்களுக்காக இயங்குவதைத் தவிர மற்ற எல்லா டைரக்ஷன்களையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.


எஸ்.ராதாகிருஷ்ணன், பெங்களூர்.

சென்னையில் இரண்டாவது இதய தானம் கூட நிகழ்ந்திருக்கிறதே?

அதே தேனாம்பேட்டை மருத்துவமனை, அதே காவல் துறையினர், அதே முகப்பேர்! அடுத்த இதயத்திற்கான இரக்கத்தோடு வெற்றி பெற்றிருக்கிறது. எங்கள் சென்னை மக்களுக்குப் புரிந்துவிட்டது, இதயத்தின் பயணப்பாதை எதுவென்று?


எம்.சீனிவாசன், வாழப்பந்தல்.

தமிழக கோயில்களுக்குப் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறதே?

ஆமாம். ஆண்டவனுக்குப் பாதுகாப்பு அதிகரித்திருக்கிறது. காரணம் இது நவ இந்தியா! கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. ‘மெட்டல் டிடெக்டர் இல்லாத கோயில்களில் பூஜிக்க வேண்டாம்’ இது புது மொழி.


என்.அசோகன், நெம்மேலி.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டிய லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்புகள்?

ஏதோவொரு பத்திரிகை அலுவலகத்திற்கு ஆபத்து வரப்போகிறது. அந்தக் கணிப்பு இதிலே ஏன் காணோம்?


கே.எம்.ஏ, ஆரணி.

பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பெண்ணிடம் பேசலாமா?

அவள் மங்கையா, மடந்தையா, அரிவையா, தெரிவையா, பேதையா, பெதும்பையா, பேரிளம் பெண்ணா என்று முதலிலே முடிவு செய்யுங்கள். பின் தரத்திற்கேற்ப அவளிடம் உங்கள் சாரீரத்தை தீட்டலாம். அப்போதும் ‘நோ சரீரம்’ நீட்டல்!


ஆர்.சதீஷ்குமார், வந்தவாசி.

கருத்துக் கணிப்பு ரேஸில் தே.மு.தி.க. மூன்றாவது இடத்தில் வருகிறதே?

அப்போது அது முதலாவது இடத்திற்கு வர இன்னும் இரண்டு தேர்தல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். 2011ஐ 2021ஆகத் திருத்திக் கொள்ளுங்கள். இந்தத் திருத்தம்தான் சரியாக இருக்கும்.


டி.வெங்கடேஷ், சென்னை-72.

ஏ.சி. சண்முகம் தனது பிறந்த நாட்களின் போது ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுக்கிறாராமே?

பல கோடியில் முதியோர் இல்லம் கட்டப் போகிறார். அதற்கு இப்போது அணி சேர்க்கிறார். இரக்கமுள்ள நல்ல முயற்சி.


ஆப்ரஹாம், மணப்பாக்கம்.

தக்காளி விலை எங்கேயோ இருக்கே?

இது தக்காளியின் குற்றமல்ல. பொதுவாக அழுகல்களுக்கு இப்போது மதிப்பு அதிகம்! அந்த வகையில், இது காலத்தின் குற்றம்!


எஸ்.ஸ்ரீதர், மாதவரம்.

புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் இன்னும் தள்ளிப் போகும் போல் இருக்கிறதே?

கொடி மரம், மைதானமெல்லாம் கேட்டு இன்னொரு வரைவுத் திட்டம் கேட்கிறார்களாம்! அரசாங்க சி.டி. ஸ்கேன்களில் கூட இதுபற்றித் தெரிய மாட்டேங்குது. அரசாங்க சி.டி.ஸ்கேன்கள் நல்ல நாளிலேயே நாயகம்!


ஜி.பாஸ்கர், கிருஷ்ணகிரி.

மன்மோகன்சிங்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்கிறாரே, ராகுல்?

இது பக்கத்து இலை பாயசம் கதை! பந்தியில் அப்படித்தான் சொல்ல முடியும்! ஓரங்கட்டிக் கேட்டுப் பாருங்க. மனிதர் புன்னகைப்பார்.


ஆர்.ராஜேஷ், குரோம்பேட்டை.

வரும் தேர்தலில் அடித்தட்டு மக்களின் குரல் ஓங்கி ஒலிக்குமா?

தேர்தல் வரை போவானேன்? இப்போதே ஒலிக்கிறது. ஆனால் ‘வலி’யால் ஒலிக்கிறது. விலைவாசி வலியால் ஒலிக்கிறது. வன்மையால் ஒலிக்கவில்லை. அரசியல்வாதிகளின் வன்மைக்கு எதிராக இவர்களின் குரல் போய் ஒலிக்குமா?


பா.செந்தில்குமரன், பல்லாவரம்.

நாயகன் படம் வெற்றியா?

தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதே வெற்றியின் அளவுகோல். அதிக உயரம் இல்லை. ரொம்ப இளசும் இல்லை. கவர்ச்சிகரமான அழகென்றும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ரித்தீஷ்குமார் வென்றுவிட்டார். எங்கள் முகவை மாவட்டத்துக்காரர் அமைச்சர் கப. தங்கவேலுவின் மகள்வழிப் பேரன். வரட்டும் புது நாயகர்கள்!


யு.செல்வராஜ், ஆலப்புழை.

மிகச் சிறந்த இசை ஒரு படத்தைக் காப்பாற்றுமா? ஓட உதவி செய்யுமா?

‘சக்கரக்கட்டி’யை இசை காப்பாற்றியதாகத் தெரியவில்லையே!


மு.யசோதா, திருமங்கலம்.

சிகரெட் தடையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியுமா?

நீதிமன்றங்களின் பலமான ஆதரவு இருப்பதால் கவலை இல்லை. கண்காணிக்கக் காவலர்கள்தான் வேண்டும் என்பதில்லை. சிகரெட் பிடிக்காதவர்களே நன்கு கண்காணித்து மாட்டிவிட்டுவிடுவார்கள் என நம்பலாம். ஐயா! சாமி! _! கண்ணு! என்று கெஞ்சிப் பார்த்தார்கள் சிகரெட் பிடிப்பவர்களை நடக்கவில்லை. மூக்கணாங்கயிறு போட்டுவிட்டார்கள்!


மு.பவானி, கோவை-1.

உங்களுக்குக் கோபம் வருமா?

நேரத்தைக் கடைப்பிடிக்காமல் படுத்துபவர்களும் தமிழ்ப் பாடல்களைக் கொலை செய்து உச்சரிக்கும் வடக்கத்திய பாடகர் பாடகிகளும் என் இரத்த அழுத்தத்தைப் பன்மடங்காக ஆக்கிவிடுவது உண்டு!


கே.யயாதி, மதுரை.

கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழுவின் தலைவராக ஆகியிருக்கும் ஸ்ரீகாந்த், பெயரைக் காப்பாற்றுவாரா?

வருணனையாளராக இருந்து தொடர்ந்து பல ஆலோசனைகளை கிரிக்கெட் உலகிற்கு எடுத்துச் சொன்னவர். தமது சொந்தத் தொழிலைக்கூட அதிகம் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட் உலகிலேயே அதிகம் ஈடுபாடு காட்டியவர். எனவே தேர்வு நுணுக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஸ்ரீகாந்த் சார், தெற்கத்தி ஆளுங்களை இன்னும் நல்லா விளக்கெண்ணெய் போட்டுத் தேர்ந்தெடுங்க!


கே.பி.நரேன், தாராவி.

‘விஜயகாந்த் எங்கு நின்றாலும் எதிர்த்து நின்று தோற்கடிப்பேன்’ என்று சொல்லும் வடிவேலுவைப் பற்றி?

வடிவேலுவின் நகைச்சுவைகளிலேயே இதுதான் டாப். வன்னியர்களின செல்வாக்குத் கடலிலேயே முத்தெடுத்து வெளிவந்தவர் விஜயகாந்த். மக்களுக்கு நல்லது செய்ய எண்ணும் கலைஞரையே கலக்குகிற ஆற்றல் உள்ளவர். தமிழகத்தின் மூன்றாவது அரசியல் சக்தி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த வடிவேலு தன்னைப்பற்றி? இவர் வென்றால் என்னத்தைச் சாதிப்பாராம்? ‘வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க’ என்று சட்டமன்றத்தில் காமெடிகள் செய்ய முடியும் இவரால். மக்களுக்குத் துரும்பையாவது எடுத்துப் போட முடியுமா?


மு.ஆண்ட்ரூஸ், சென்னை-10.

‘காதலில் விழுந்தேன்’ படத்திற்கு இவ்வளவு எதிர்ப்புக் காட்ட நினைப்பது நியாயமா?

தெற்கே அதுபாடு ஒரு தனி ஆட்சி நடக்கிறது. உலகம் சுற்றும் வாலிபனும், முதல்வனும் கலைஞர் ஆட்சியில் மோசமான எதிர்ப்பைக் கண்டன. ஆனால் இரண்டும் நல்ல வெற்றியைப் பெற்றன. இந்தப் படத்தைத் தமிழகமே பேசவைத்த பெருமை தெற்கத்திய மனிதர்களுக்கு உண்டு. இந்த எதிர்மறை விளம்பரமும் படத்திற்கு நல்லதுதான்!


சே.மு.தமிழ்மணி, சென்னை-18.

பூர்ணம் விஸ்வநாதனுடன் உங்களுக்குப் பழக்கம் உண்டா?

அவருக்கும் எனக்கும் ஓர் இராசி உண்டு. இருவரும் பெரும்பாலும் திருமணங்களில் தவறாது கலந்து கொள்வோம். பார்க்கும் போதெல்லாம் நின்று நிதானித்து என்னுடன் இரு நிமிடங்கள் பேசாமல் போகமாட்டார். ‘திருமண வீட்டிற்கும் நமக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கிறது’ என்பார். (சாட்சி : உடன் எப்போதும் வரும் திருமதி பூர்ணம்) பூர்ணம் நடித்தால் அவரது நடிப்பாகவே தெரியாது. அப்படி ஒரு யதார்த்த நடிகர். சமயங்களில் கண்களைக் கலங்கடித்துவிடுவார். தம் மறைவால் நிரந்தரமாக இதை ஆக்கிவிட்டார்.


சு.தங்கமணி, விஜயவாடா.

தமிழக வீரர் பத்ரிநாத் டெஸ்ட் அணிக்குத் தேர்வு செய்யப்படுவார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதானே?

தேர்ந்தெடுக்கப்படாதிருந்தால் ஏமாற்றம் அதிகமாக இருந்திருக்கும் என்கிற அளவுகோலின்படி நோக்கினால் உங்கள் வாதம் சரி என்றுபடுகிறது. உள்நாட்டு ஆட்டங்கில் சராசரியாக 55 ரன்களை எடுத்தவர் பத்ரிநாத். உலக அளவில் போட்டி எழும்போது அதன் தரமே வேறு. நிரம்பி வழியும் பார்வையாளர்களிடம் உள்ள நிறைந்த எதிர்பார்ப்பை, பரப்பரப்பான சூழ்நிலையிலும் பதற்றமான சூழ்நிலையிலும் ஈடுகட்ட அசாத்திய மனத்திடம் வேண்டும். வெறும் தொழில் நுட்பம் மட்டுமே இருந்தால் போதாது. இது பத்ரியிடம் உண்டா என்பது தெரியவில்லை.

03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply