Wednesday, 8 Oct 2008

Srilankan army stops action in Kilinochi

இலங்கை ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல் நிறுத்தம்

கொழும்பு: தமிழர்கள் அதிகம் வசிக்கும்பகுதிகளில் குண்டு வீசுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது இலங்கை ராணுவம். இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பைக் கண்டு இந்த நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கண்மூடித்தனமான தாக்குதலை நிறுத்த ராணுவத்துக்கு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்குமிடையே தொடர்ந்து கடும் சண்டை நடந்து வருகிறது. விடுதலைப்புலிகளின் கைவசமுள்ள கிளிநொச்சி பகுதியை கைப்பற்றவும், பிரபாகரன் தங்கியிருப்பதாக கூறப்படும் பதுங்குக் குழிகளை அழித்திடவும் அப்பகுதியில் குண்டுவீசி தாக்கி வருகிறது இலங்கை ராணுவம்.

இந்தத் தாக்குதலில் அப்பகுதியில் வசித்துவரும் தமிழர்கள் பலரும் குண்டடிப் பட்டு தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் தமிழர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கடுமையான எதிர்ப்பை காட்டி வருகின்றன.

முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டபடி, ஆயிரக்கணக்கானோர் பிரதமருக்கு தந்தி கொடுத்தனர்.

இதன் விளைவாக பிரமர் மன்மோகன் சிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை வரவழைத்துப் பேசினார். அவர் உடனே இலங்கை துணைத் தூதரை அழைத்து, இலங்கை தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கடுமையயாக கண்டித்தார். தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

அது மட்டுமல்லாது இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் வேண்டும் என்றும், போரில் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதியில் இலங் கை அரசு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நேற்று, நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிளுடன் கடந்த ஒருமாதத்தில் நடந்த சண்டையில் ரராணுவத்தினர் 200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் சொன்னார்.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா, இலங்கை நாடாளுமன்றததில் நேற்று எம்.பி. யாக நியமிக்கப்பட்டார். இவர் தமிழர்களுக்காக குரல் கொடுப்பாரா என்பது  சந்தேகமே.

இதற்கிடையே இலங்கை ராணுவம் கிளிநொச்சியில் தனது கண்மூடித்தனமான தாக்குதலை நேற்று முன்தினம் நிறுத்திக்கொண்டது.

Related Posts Title


Leave a Reply