Thursday, 2 Oct 2008
இலங்கை பிரச்னைக்காக இ.கம்யூனிஸ்ட் உண்ணாவிரதம்
சென்னை: இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று இ.கம்யூனிஸ்ட் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாக ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட கட்சிகள் கலந்து கொண்டன.
இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது, இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தவேண்டும், இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடந்தது.
சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வர்கள் கலந்துகொண்டனர். உண்ணாவிரதத்தை கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா தொடங்கி வைத்தார். தா.பாண்டியன் தலைமை வகித்தார்.
இதேபோல் தமிழகம் முழுவதும் 28 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் இ. கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., தே.மு.தி.க., லட்சிய தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், திராவிடர் கழகம், பெரியார் திராவிடடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் உள்பட பல கட்சிகள் கலந்துகொண்டனர்.
இ. கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்திருந்த அ.தி.மு.க., கடைசி நேரத்தில் போராட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டது.









































