Car stoned: Jaya slams state police department

Posted on Friday 31 October 2008

jayalalitha.jpgபசும்பொன் கல்வீச்சு - காவல்துறை அதிகாரிகள் பதில் சொல்லும் காலம் வரும்!: ஜெ.,
 
சென்னை: ‘பசும்பொன் பிரச்னை குறித்து அரசியல்வாதிகளை போல காவ‌ல்துறை அதிகாரிகள் அறிக்கை விடுவது வரம்பு மீறிய செயல்மட்டுமல்ல, சட்டவிரோதமான செயல் என்று‌‌‌ம் இதற்கெல்லாம் பதில் சொல்லுகின்ற காலம் வந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்’ எ‌ன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 101ஆவது பிறந்த நாளையொட்டி, 30.10.2008 அன்று நான் பசும்பொன் கிராமத்திற்கு சென்றபோது, என் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

இது, கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட சதித்திட்டம் என்றும், காவல் துறையினரால் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்றும், சென்னை விமான நிலையத்தில் தொலைக்காட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்களிடத்தில் நான் பேட்டி அளித்தேன்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், ‘காவல்துறை இயன்றவரை தனது கடமையை செய்திருக்கிறது. எங்களால் எவ்வளவு பாதுகாப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கொடுத்திருக்கிறோம்’ என்ற அளவில் பேட்டி அளித்திருக்கிறார். மிகப்பெரிய பொறுப்புள்ள உயர்ந்த பதவியில் இருக்கும் காவல்துறை தலைமை இயக்குநரின் பேட்டி மிகவும் துரதிருஷ்டவசமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது; பொறுப்பற்றது மட்டுமன்றி கடும் கண்டனத்திற்குரியதும் ஆகும்.

நான் தேவர் திருமகனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது, எனது ஆதரவாளர்கள் உள்ளே நுழைய முற்பட்டனர் என்றும், அதனை காவல் துறையினர் தடுக்க முயற்சித்தபோது, காவல் துறையினர் மீதும், அங்கிருந்த வாகனங்கள் மீதும் கல்வீசி தாக்கியுள்ளனர் என்றும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை சட்டம்-ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக எனது கட்சிக்காரர்கள் எனது வாகனத்தின் மீதே கல்வீச்சு நடத்தியுள்ளார்கள் என்று கூறுவது மிகவும் நகைப்புக்குரியது மட்டுமல்ல, யாரும் இதுவரை கேட்டிராத ஒன்று. முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும், இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள எனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல் துறையின் தலையாய கடமை. தன்னுடைய கடமையை செய்வதை விட்டுவிட்டு, பொறுப்புள்ள காவல் துறை அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளிப்பது, ஆளும் கட்சியினர் சொல்கின்றபடி அறிக்கை விடுவது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எனது பாதுகாப்பு குறித்து அரசியல் வாதிகளைப் போல் காவல் துறை அதிகாரிகள் பேட்டி கொடுப்பதும், அறிக்கை விடுவதும் வரம்பு மீறிய செயல் மட்டுமல்ல, சட்டவிரோதமான செயலும் கூட. இது மட்டும் அல்லாமல், எனக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகும்.

கடந்த 29 மாத காலமாக வன்முறை கும்பல் நடத்தி வரும் கொலை வெறி தாக்குதல்களுக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இதற்கெல்லாம் பதில் சொல்லுகின்ற காலம் வந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம்’ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

admin @ 11:28 pm
Filed under: news
House for all people, Parithi Ilamvazhuthi beleives

Posted on Friday 31 October 2008

parithi-ilamvazhuthi.jpgசென்னை 2ஆவது மாஸ்டர் பிளானில் சாதாரண மக்களுக்கும் வீடு:
செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தகவல்

சென்னை: சென்னை பெருநகர 2ஆவது முழுமைத் திட்டம் - 2026, ‘வழிவகைகள் மற்றும் வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் விவாதிக்க, 2 நாள் கருத்தரங்கு சென்னையில் நேற்று தொடங்கியது.

இதை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ. - ) தலைவரும், செய்தித்துறை அமைச்சருமான பரிதி இளம்வழுதி தொடங்கிவவைத்தார். ‘சென்னப்பட்டினம் முதல் சென்னை வரை’ என்ற புகைப்படக் கண்காட்சியையும் அவர் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

”சென்னை நகரின் முதல் மாஸ்டர் பிளான் 1975இல் போடப்பட்டது. இப்போது 2ஆவது மாஸ்டர் பிளான் செயல்படுத்த, கடந்த மாதம் அரசு அனுமதி கொடுத்தது. எதிர்காலத் தேவைகளை கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பை உருவாக்க 2ஆவது மாஸ்டர் பிளானில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சாதாரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாஸ்டர் பிளானில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரியம் மிக்க கட்டடங்களை பாதுகாக்க சிறப்பு விதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் பெரும்பான்மையான மக்களுக்கும் வீட்டு வசதிகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

admin @ 11:12 pm
Filed under: news
Child killed, killer handover in court today

Posted on Friday 31 October 2008

குழந்தையை தண்டவாளத்தில் அடித்துக்கொன்ற கொலையாளி:
சென்னை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

சென்னை: சென்னையில் 2 வயது குழந்தையை ஈவு, இரக்கம் துளியும் இன்றி தண்டவாளத்தில் அடித்துக்கொன்ற கொலையாளி மும்பையில் கைது செய்யப்பட்டான். நேற்று ரயில் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். கொலையாளியைக் கண்ட குழந்தையின் தந்தை அவனை தூக்கில் தொங்கவிடவேண்டும் என்று ஆவேசத்துடன் கூறினார்.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் (வயது 30) இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஷகிலா (வயது 28). இவர்களுக்கு 2 வயதில் மோனிக் என்ற ஆண் குழந்தை இருந்தது.

இந்தக் குழந்தையை அவரது உறவினர் ஜூகுனு (25) கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி கடத்திச் சென்றுவிட்டார். பணம் கேட்டு கிடைக்காததால் குழந்தையைக் கடத்திய இந்தப்பாவி, அன்று இரவே ஆவடிக்கும் திருமுல்லைவாயிலுக்கு இடையே, குழந்தையை தலைகீழாக புரட்டி அதன் தலையை இரயில் தண்டவாளத்தில் அடித்து கொன்றான். கொலையை நிகழ்த்தியவன், குழந்தையைக் கொன்று விட்டதை மற்றொரு உறவினருக்கு போன் செய்து சொன்னான். பிறகு அங்கிருந்து தப்பிவிட்டான்.

குழந்தையின் உடலை மீட்டெடுத்த காவல்துறையினர் கொலைகாரன் ஜூகுனுவை தேடி வந்தனர்.
 
இந்நிலையில் அவன் மும்பையில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்கவே, இதற்கென்றே அமைக்கப்பட்டிருந்த தனிப்படையினர் மும்பை சென்று அவனை கைது  செய்தனர்.

அவன் நேற்று ரயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டான். யானை கவுனி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.

கொலைகாரனை கைது செய்து சென்னை அழைத்து வந்த காவல்துறை ஆய்வாளர்கள் குணசேகரன், அமிர்தலிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் இதுகுறித்து பேட்டியளிக்கையில்,

”கொலையாளி, கொலைசெய்யப்பட்ட குழந்தையின் நெருங்கிய உறவினர். அந்தக் குடும்பத்தாரிடம் இருந்து அடிக்கடி பண உதவி பெற்றுவந்துள்ளார். குழந்தை கடத்தப்பட்ட அன்றும் அவன் குழந்தையின் தாய் ஷகிலாவிடம் பணம் கேட்டிருக்கிறான். அவர் பணம் கொடுக்கவில்லை என்றதும் குழந்தையைக் கடத்தி கொன்று விட்டான்” என்றார்கள

கொலைகாரன் ஜூகுனு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றான்.

தன்னுடையக் குழந்தையைக் கொன்ற ஜூகுனுவைக் காண, யானை கவுனி காவல்நிலையத்திற்கு ஆனந்த் நேற்று வந்திருந்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

”ஜூகுனு எந்தக் காரணத்திற்காக என் குழந்தையைக் கொன்றான் என்று இதுவரை தெரியவில்லை. குழந்தை என்று பார்க்காமல் கொலை செய்த இவனுக்கு மரண தண்டனை தரவேண்டும். அல்லது ரோட்டில் விட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொல்லவேண்டும்” என்று ஆவேசப்பட்டவர், ”இரவு - பகல் பாராது அயராது உழைத்து, கொலைகாரனைப் பிடித்த காவல்துறையினருக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.

admin @ 10:31 pm
Filed under: news
Srilanka’s Tamils Issue: Directors Seeman, Ameer released on bail

Posted on Friday 31 October 2008

ஜாமீனில் விடுதலை: இயக்குநர்கள் சீமான், அமீருக்கு மதுரை சிறைவாசலில் அமோக வரவேற்பு

seemanameer.jpg

மதுரை: ஜாமீனில் விடுதலையான இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரை மதுரை சிறைவாசலில் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரையுலகினர் வரவேற்றனர்.

இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து, தமிழ் திரை உலகம் சார்பில் கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று ராமேஸ்வரத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக வழக்கு தொடரப்பட்டு, கடந்த 24ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு நேற்றுமுன்தினம் ராமநாதபுரம் விரைவு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் மதுரை 1ஆவது ஜூடுசியல் மாஜிஸரேட்டு நீதிமன்றத்தில் தினசரி காலையில் கையெழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனையுடன் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

நேற்று காலை 11 மணியளவில் சீமான், அமீர் ஆகியோர் மதுரை சிறையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாக்கியராஜ், பாலா, ஆர்.கே. செல்வமணி, வி. சேகர், மனோஜ்குமார், ராஜ்கபூர், பிரவீன்காந்த், சுப்ரமணிய சிவா, வெற்றிமாறன் நடிகர்கள் சேரன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சண்முகராஜா உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒருசின்ன வேனில் சீமான், அமீரை ஏற்றி ஆளுயர மாலைகள் அணிவித்து ஊர்வலமாக மதுரை சாலைகளில் அழைத்துச் சென்றனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சீமான் மற்றும் அமீரை வாழ்த்தியதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.

பின்னர் இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் இருவருக்கும் பாராட்டுவிழா நடத்தப்பட்டது.

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், ”இலங்கைத் தமிழருக்காகச் சிறைக்குச் சென்றுவந்த இவர்களி்ன் பெயர்களை தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுத வேண்டும். எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.

admin @ 9:37 pm
Filed under: srilanka news
Tamil actors in fasting for Srilanka’s Tamils

Posted on Friday 31 October 2008

இலங்கைத் தமிழர் பிரச்னை: நடிகர், நடிகைகள் இன்று உண்ணாவிரதம்: ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை: இலங்தைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து சென்னை நடிகர் சங்க வளாகத்தில் இன்று நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள்.

இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி உண்ணாவிரதம் மாலை 4 மணி வரை நடக்கவிருக்கிறது. இதற்காக சென்னை தி.நகர் ஹபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தினுள் பிரமாண்டமான உண்ணாவிரதப் பந்தல் போடப்பட்டுள்ளது. மழை கொட்டினாலும் யாரும் நனையாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பந்தலின் உள்ளே முன்னணி நடிகர்கள், நடிகைகள் திரைப்படத் துறையினர் 750 பேர் வரை அமர்கிற அளவுக்கு மிகப் பெரிய மேடை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழே பத்திரிகையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமர இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், விக்ரம், திரிஷா, நயன்தாரா உள்பட முன்னணி நாயக, நாயகிகள் கலந்து கொள்கின்றனர்.

நடிகர், நடிகைகளின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது சென்னை காவல்துறை. பாதுகாப்பு பணியில் 3 துணை ஆணையர்கள், 6 உதவி ஆணையர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ காவல்துறையினர் 250 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

மாலை 4 மணிக்கு முடிவுறும் உண்ணாவிரதத்தை, மூத்த நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிகர், நடிகைகளுக்கு பழரசம் கொடுத்து முடித்து வைக்கிறார்.

இந்த உண்ணாவிரதத்தைப் பார்வையிட பொதுமக்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

admin @ 8:37 pm
Filed under: srilanka news
Sathyaraj doing father role

Posted on Friday 31 October 2008

sathyaraj.jpg

வில்லனாக மீண்டும் நடிக்க ரஜினி, கமலுக்கே நோ சொன்ன சத்யராஜ், தங்கர் பச்சானுக்காக இறங்கி வந்திருக்கிறார். தங்கர் இயக்கத்தில் தொடங்கப்பட உள்ள புதிய திரைப்படத்தில், மாதவனுக்கு அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அப்ப அசத்தல் அப்பா கேரக்டராக இருக்கும் போல.

admin @ 6:50 am
Filed under: kollywood
Ajith raucous getup

Posted on Friday 31 October 2008

ajith1.jpg

அஜீத் நடிக்க, கெளதம் மேனன் இயக்கும் சிவாஜி பிலிம்ஸ் சுராங்கனி திரைப்படம் காக்க காக்க பாணியில் விறுவிறுவென எடுக்கப்பட உள்ளது. இதில் அஜீத் போலிஸ் அல்ல பொருக்கி! அதாங்க தாதாவாம்.

admin @ 6:47 am
Filed under: kollywood
Love in unusual way in Kartic Anitha

Posted on Friday 31 October 2008

kartic-anitha.jpg

கிங் மேஜிக் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் கார்க்தித், அனிதா. இதில் நடிக்கும் நாயகன் ரத்தன் மற்றும் நாயகி மஞ்சு இருவரும் புதுமுகங்கள். முதல்பாதியில் இவர்களின் சந்தோஷமான பகுதிகளையும், பின்பாதியில் அவர்களின் காதலையும் உணர்ச்சிகள் பொங்க பொங்க சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் ஸ்ரீஹரி. நாம் வில்லன்களாக பார்த்து பழகிய கோட்டா சீனிவாசராவ், ராஜன் பி. தேவ் இருவரும் இதில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் ரசிகனின் நெஞ்சுக்குள் கார்த்திக்குக் கிடைத்தது போல் ஒரு தோழி(அனிதா) நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கவைப்பதுதான் இயக்குநரின் நோக்கமாம்.

admin @ 6:44 am
Filed under: kollywood
No weight for Nayan in Aegan

Posted on Friday 31 October 2008

nayan.jpg

ஏகன் சுமார் ரகம் என்றாலும் சரியான போடடி இல்லாததால தேறிக்கொண்டிருக்கிறது. ஏகனில் அஜீத்தின் ஆக்ஷனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் என்பதால் நாயகி நயன்தாராவின் நிறைய காட்சிகளுக்கு கட் கொடுத்துவிட்டார்களாம். இது கண்டு நயன் தரப்பு கொதித்துப்போய் இருந்தாலும் சம்பளமான ஒரு கோடியில் சல்லிக்காசு குறையாமல் பெற்றதில் சந்தோஷம்தானாம்.

admin @ 6:41 am
Filed under: kollywood
Rajathi Raja film came excellent - Sakthi chidambaram

Posted on Friday 31 October 2008

rajathi-raja.jpg

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ராஜாதி ராஜா திரைப்படம் கலக்கலாக வந்திருக்கிறதாம். இயக்குநர் தான் இப்படி சொல்கிறார். ‘இது ஒரு மாஸ் படம். நான் இயக்கிய திரைப்படங்களில் இதுதான் அதிக ஹிரோயிசம் உள்ள படம். கதாநாயகன் ராகவா லாரன்சுக்கும்  காமெடியில் கலக்கியுள்ள கருணாசுக்கும் இந்தப் படம் நிச்சயம் திருப்புமுனையைத் தரும்’ என்றவர் ‘இந்தத் திரைப்படத்தில் கிரண், காம்னா, மும்தாஜ், ஸ்னிக்தா, மீனாட்சி, சமிக்ஷா என ஆறு நாயகிகள். ஆனால் ஆறு பேருக்கும் நடிக்க சமபங்கு தரப்பட்டுள்ளது. மேலும் காமெடியைவிட ஆக்ஷன் தூக்கலாக இருக்கும் ராஜாதிராஜாவில் ஆறு சண்டைகள், மூன்று சேசிங் காட்சிகள்’ என்றார். தினா இசையில் எல்லாப் பாடல்களையும் இயக்குநர் பேரரசு எழுதியிருக்கிறாராம். அதில், ‘ஆண்டிப்பட்டி, அரசம்பட்டி எங்க ஊருடா’ என்கிற பாடலில் விஜய டி. ராஜேந்தசர் பின்னி பெடல் எடுத்திருக்கிறாராம். படம் சம்பந்தப்பட்டவர்கள் எல்லாருமே ராஜாதி ராஜாக்கள் தான் போல.

admin @ 6:39 am
Filed under: kollywood