நடிகர் வடிவேலு தாக்குதல் விவகாரம்: தே.மு.தி.க. வினர் 13 பேர் சரண்
சென்னை: நடிகர் வடிவேலு அலுவலகத்தை தாக்கிய வழக்கில் தே.மு.தி.க. வினர் 13 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் அலுவலகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாததம் 12ஆம் தேதி தாக்கப்பட்டது. அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வந்தார் வடிவேலு. அவருடைய வீட்டுமுன் நிறைய கார்கள் நிற்பதைக் கண்டவர் அவற்றை அப்புறப்படுத்த கூறியுள்ளார்.
இதனால் அவரது வீட்டையும் அலுவலகத்தையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. நடிகர் வடிவேலு மற்றும் உதவியாளர் மாரிமுத்து கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன், சரவணன், கிருஷ்ணன், சையத் அலி, தட்சிணாமூர்த்தி, தயாளன், கங்காதரன், வெங்கடேசன், அன்புராஜ், முருகன், மாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே விடப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் வந்தபோது நடிகர் வடிவேலு மற்றும் உதவியாளர் மாரிமுத்து சாட்சியம் அளித்தனர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதைத் தொடர்ந்து தே.மு.தி.க. வைச்சேர்ந்த 13 பேருக்கும் பிடிவாரண்டு பிறப்பித்தார் நீதிபதி.
இந்த வழக்கில் சம்மன் வந்தால் மட்டுமே நேரில் ஆஜராகவேண்டும் என்று வடிவேலுக்கு உத்ரவிட்டார் நீதிபதி.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட விஜயகாந்தின் மேலாளர் சதீஷ்குமார் உள்பட 13 தே.மு.தி.க. வினரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தங்கள் மீதான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கோரி அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி பெஞ்சமின் ஜோசப், 13 பேரின் பிடிவாரண்டையும் ரத்து செய்து, விசாரணையை அடுத்த மாதம் 6 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

































ஓரின சேர்க்கை விவகாரம்: அன்புமணி கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு



