Tuesday, 30 Sep 2008

I worship Hanuman,says Sushil Kumar

நான் அனுமன் பக்தன்: சுஷில் குமார் சென்னையில் பேட்டி

சென்னை: நான் தீவிர அனுமன் பக்தன் என்று ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில்குமார் கூறினார்.

சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் நேற்று சென்னை வந்தார்.

பாடி பியூல்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ள சுஷில்குமாருக்கு, அவரது சாதனையைப் பாராட்டி அந்த நிறுவனத்தின் சார்பில் ரூ1.50 லட்சத்துக்கு காசோலை வழங்கப்பட்டது. மேலும் அந்நிறுவனத் தயாரிப்புகளை ஆயுள் முழுவதும் சுஷில்குமாருக்கு அளிக்கவும் அந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுஷில் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,

”2004ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் எனக்குக் கிடைத்த தோல்விதான் 2008இல் நான் பெற்ற வெற்றிக்குக் காரணமாகும். பதக்கம் வென்றதன் மூலம் மக்களிடம் எனக்குக் கிடைக்கும் அன்பும் ஆதரவும் என்னை திக்குமுக்காட வைக்கிறது. இதனை ஒருபோதும் மறக்கமாட்டேன். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. நான் வெண்கல பதக்கம் வென்ற பின் நிறைய இளைஞர்களிடம் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்.

பாராட்டு விழாக்களுக்காக நான் ஊர் ஊராகச் செல்வதால் என் பயிற்சி பாதிக்காது. நான் எங்கு சென்றாலும், அதிகாலை 3.30 மணிக்கே விழித்து விடுவேன். அதன்பிறகு 4 மணி முதல் காலை 9 மணி வரையும், மாலை 2 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபடுவேன்.

எனது அடுத்த இலக்கு 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெறுவதுதான். இதற்கான பயிற்சியைத் தொடங்கிவிட்டேன்.

அனுமன் பலமிக்கபவன் என்பதால் நிறைய மல்யுத்த வீரர்கள் அனுமன் பக்தர்களாக உள்ளனர். அதேபோல் நானும் அனுமன் பக்தன் தான். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவேண்டும் என்ற கனவு சமீபத்தில் நிறைவேறியது. சென்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்குள்ள மக்கள் அன்புடன் பழகுகிறார்கள். தமிழக உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் எனக்கு நிரம்பப் பிடிக்கும்” என்றார்.

Related Posts Title


Leave a Reply