Tuesday, 30 Sep 2008

180 dead in Jodhpur Samundi temple stampede

ஜோத்பூர் நவராத்திரி விழா நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் பலி

180 dead in Jodhpur Samundi temple stampede

ஜோத்பூர்: ராஜஸ்தான் மலைமீது அமைந்துள்ள சாமுண்டி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 180 பக்தர்கள் இறந்தனர். இதில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு மலைமீது அமைந்துள்ள மேகரங் கார்க் கோட்டையில் உள்ளது சாமுண்டி அம்மன் கோயில். நவராத்திரி விழா நேற்று தொடங்கியதையொட்டி அங்கு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் கோயிலில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர். பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் வந்திருந்தனர்.

சாமுண்டி அம்மனுக்கு அலங்காரம் நடந்துகொண்டிருந்ததால் கருவறை சார்த்தப்பட்டது. கருவறை திறந்ததும் அம்மனை தரிசித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் பக்தர்கள் ஒருவரையொருவர் முண்டி அடித்தனர். இதனால் கோயிலின் புறவாசல் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. சத்தத்தை சிலர், குண்டு வெடித்தது என்று கத்தினர். அடுத்த நொடி பக்தர்களிடம் பெரும் பீதி ஏற்பட்டது.

அனைவரும் ஒரே சமயத்தில் கோயிலைவிட்டு வெளியேற முயற்சித்தனர். குறுகிய பாதை என்பதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலர் கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு பலர் ஓடினர். இதனால் மிதிப்பட்டும், மூச்சுத்திணறியும் 180 பக்தர்கள் மாண்டனர்.
இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். மேலும் 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Posts Title


Leave a Reply