Monday, 29 Sep 2008

Kadhalil Vizhunthen Film Review

காதலில் விழுந்தேன்

kadhalil-vizhunthen-review.jpg

நடிப்பு: நகுலன், சுனேனா, ஹரிராஜ், லிவிங்ஸ்டன், சம்பத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ், அட்லாண்டிக் சினிமாஸ்
இயக்கம்: பி.வி. பிரசாத்
இசை: விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு! காதல் அதிகமானால் அமிர்தமா, நஞ்சா? என்பதற்கு விடை தேடுவதுதான் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் ஒருவரிக் கதை…

சிறுவனாக இருக்கும்போதே தாயை இழந்த நகுலன் குடிகார அப்பனிடம் வளர்கிறார்.

அன்புக்கு ஏங்கும் அவருக்கு அதன் அட்சயபாத்திரமாக கிடைக்கிறார் சுனேனா. கல்லூரி மாணவனான நகுலனுக்கு, விபத்தொன்றின் மூலம் அறிமுகமாகிறார் கல்லூரி மாணவி சுனேனா. அந்த விபத்துக்கு அவர்தான் காரணம் என்பதால் நகுலனை  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறார். காதல் தீ பற்றிக்கொள்ள இந்த சம்பவங்கள் போதாதா என்ன. சிகிச்சை சமயத்தில் அவர்களிடையே ஏற்படும் நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இருவரும் காதலில் சிக்கும்போது வாழ்க்கை சிக்கலும் தொடங்குகிறது.

நகுலன் கால்பந்து போட்டிக்காக ஊட்டி சென்றிருந்த சமயத்தில், சுனேனா இறந்ததாக தகவல் வர, ஊருக்குத் திரும்பும் நகுலன், காதலி இறந்ததை நம்ப மறுக்கிறார்.

அதே சமயம் நகுலனை கும்பலொன்று துரத்திக்கொண்டே இருக்கிறது. அவர்கள் ஏன் துரத்துகிறார்கள்? காதலி சுனேனா என்ன ஆனார்? அவர்களுடையக் காதல் என்னவாயிற்று? என்பது சுவாரஸ்யமிக்க மீதி கதை.

அறிமுக இயக்குநர் பி.வி. பிரசாத்துக்கு தாராளமாக கைகுலுக்கலாம். பின்னே, கவிதையான காதல் கதையை அதிரடி ஆக்ஷன் கலந்து காக்டெயிலாக்கி நம்மை கலங்கடிக்கிறாரே!

ஷங்கரின் பாய்ஸ் திரைப்படத்தில் வந்த பப்ளிமாஸா இது?  கதாநாயகன் நகுலனைத்தான் சொல்கிறோம். ரொம்ப லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்திருக்கிறார் நகுலன்(தேவயானியின் தம்பி). இனி இவருக்கு ஏறுமுகம்தான்.

நாயகி சுனேனா அழகு. குழந்தை முகத்தோடு வந்து, காதலியாய் உருகி நம்மையும் உருக்கி விடுகிறார். பயணச்சீட்டு பரிசோதகர் லிவிங்ஸ்டன் கதை சொல்வதும், மின்சார வண்டியின் வேகத்தில் கதை நகருவதும் புதுசு.

நகுலனை நசுக்கக் கிளம்பும் காவல்துறை அதிகாரி சம்பத், நகுலனின் கதையை அறிந்து மனம் மாறி நகுலனைக் காப்பாற்றத் துடிப்பது அசத்தல். சுனேனாவின் இறப்பு பின்னணி திகில் ஊட்டுகிறது.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இளைஞர்கள் கொட்டடித்துக் கொண்டிருக்கும் ‘நாக்க முக்க’ பாடல் திரையிலும் ஜொலிக்கிறது. இது செம குத்து என்றால், ‘உன் தலைமுடி விழுவதைக் கூட’, ‘தோழியா, என் காதலியா’ பாடல்கள் எந்நேரமும் மனதிற்குள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் மெலோடிஸ்.

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், சண்டை பயிற்சியாளர் ஆக்ஷன் பிரகாஷ், கலை இயக்குநர் சகு ஆகியோரும் தங்கள் பங்குக்கு காதலில் விழுந்தேன்- னை மெருகேற்றி உள்ளனர்.

ஒரு காதல் கதையை அதற்குரிய தன்மை மாறாமல் அடிதடி ஆக்ஷன் கலந்து கொடுத்து, ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார் இயக்குநர் பி.வி. பிரசாத். தமிழ்த் திரையுலகத்திற்கு சிறந்த இயக்குநர் ஒருவர் கிடைத்திருக்கிறார்.

Click for bigger size

Related Posts Title


Leave a Reply