கடவுளான ஹிதேந்திரன்!
திருக்கழுக்குன்றம்: இதய தானம் செய்த ஹிதேந்திரனின் உருவப்படத் திறப்பு விழா திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடந்தது. பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செய்ததுடன், தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதி மொழியும் எடுத்துக்கொண்டனர்.
விபத்தில் சிக்கி மூளை செயலிழந்ததால் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனுடைய பெற்றோரான மருத்துவர் அசோகன் - புஷ்பாஞ்சலி தம்பதியினர். அதன்படி ஹிதேந்திரனின் இதயம் பெங்களூரைச் சேர்ந்த, இதய நோயாளியான ஒன்பது வயது சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டது.
மகனை இழந்த சோகத்தையும் தாண்டி உறுப்பு தானம் அளித்த ஹிதேந்திரனின் பெற்றோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
இந்நிலையில் ஹிதேந்திரனின் சொந்த ஊரான திருக்கழுக்குன்றத்தில் அவனது உருவப்படத் திறப்பு நேற்று நடந்தது. திருமண மண்டபம் ஒன்றில் நடந்த இவ்விழாவில் எம் மகன் திரைப்பட இயக்குநர் திருமுருகன் கலந்துகொண்டு படத்தை திறந்துவைத்தார். விழாவில் திரைப்பட பாடலாசிரியார் பா. விஜய் பங்கேற்றார்.
இதய தானம் பெற்ற சிறுமி அபிராமியின் தந்தை சேகர், தாய் மஞ்சுளா இருவரும் ஹிதேந்திரனின் படத்துக்கு மலர் வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவர்கள் கூறுகையில்,
”ஹிதேந்திரன் படத்தை எங்கள் வீட்டு பூஜையில் வைத்து தினமும் பூஜித்து வருகிறோம். பெங்களூரில் ஹிதேந்திரன் பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்து எங்களால் இயன்ற உதவிகளை செய்வோம். கடவுள் பலவிதங்களில் வந்து எங்களுக்கு உதவி செய்துள்ளார்” என்றனர்.
ஹிதேந்திரனின் இதயத்தை பொறுப்புடன், அதேசமயத்தில் வேகமாக சிறுமிக்கு அபிராமிக்குப் பொருத்த உதவிய காவல்துறை உதவி ஆணையர் மனோகரன், ஓட்டுநர் மோகன் இருவருக்கும் சிறுமியின் பெற்றோர் சந்தன மாலை அணிவித்து நன்றி செலுத்தினர்.
இந்த பட திறப்புவிழாவில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும், ”வாகனங்களில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்வோம். கட்டாயம் ஹெல்மெட் அணிவோம். உடல் உறுப்புகளை தானம் செய்வோம்” என்று உறுதிமொழி எடுத்தனர்.
ஹிதேந்திரன் வீட்டுக்கு எதிரே, அவனது பெயரில் பூங்கா ஒன்றை அமைக்கவும், அந்தத் தெருவுக்கு அவன் பெயர் வைக்கவும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
Related Posts Title































