Saturday, 27 Sep 2008
மன்மோகன் சிங், புஷ் சந்திப்பு
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூம் வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்துப் பேசினர். அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அவர்கள் பேசினர்.
அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை உறுதி செய்யும் பொருட்டு மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்த மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தின் மேல் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா தாக்கல் ஆவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இன்று சனிக்கிழமை விவாதம் நடக்கவுள்ளது.
இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.
இதன் பின்னர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,
”அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நிறைவேறும் என நம்புகிறேன்.
வரலாறு எழுதப்படும்போது அதில், இரண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளை நெருங்கி வரச் செய்ததில் அதிபர் புஷ் பெயர் மிகப்பெரும் பங்காற்றியிருப்பது பதிவாகியிருக்கும். இந்த ஒப்பந்தத்திற்காக அவர் அவ்வளவு உழைத்திருக்கிறார்.
34 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் அணுசக்தி வர்த்தக நிலையை மாற்றி அமைத்திருக்கிறார் அதிபர் புஷ். பெருமை எல்லாம் அவரையே சேரும்” என்றார்.
இதுகுறித்து புஷ் கூறுகையில்,
”இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மன்மோகன் சிங் கடினமாக உழைத்திருக்கிறார். எனவே பாராளுமன்றத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம். அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான ராஜ்ஜிய உறவுகள் வலுப்பெறும். நாமும் அதற்கு பாடுபடுவோம்” என்றார்.
இந்திய - அமெரிக்க அணுசக்ததி ஒப்பந்தம் மட்டும் நேற்று கையெழுத்தாகியிருந்தால் பிரதமருக்கு அது மிகச் சிறந்த பரிசாக அமைந்திருக்கும். காரணம் நேற்று அவருடைய 76 ஆவது பிறந்த நாளாகும்.
ஒப்பந்தம் கையெழுத்து ஆவது தள்ளிப்போவதால் இனி, அமைச்சரவை அளவில் மட்டுமே ஒப்பந்தம் முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.









































