Friday, 26 Sep 2008
‘பஞ்ச்’ பாலு
தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.
பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!
அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.
பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?
…………………..
கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் கருணாநிதி தொடங்கிய டிவிக்கு கலைஞர் டிவி என்று பெயர் வைத்துக் கொண்டார். ஏன் அண்ணாவின் பெயரை வைக்கவில்லை? குறைந்தபட்சம் இசையருவி டிவிக்காவது அண்ணாவின் பெயரை வைத்திருக்கலாமே.
-ராமராஜன்
இதே கேள்வியை எம்.ஜி.ஆர். என்று மாற்றி அம்மாகிட்ட கேட்க தில்லு இருக்கா உங்களுக்கு?
இந்தியாவில் உள்ள மாநகரங்களுக்குத் தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ளது. அந்த வகையில் சென்னை நகரமும் தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளது.
- தமிழக டி.ஜி.பி., கே.பி. ஜெயின்
அதுதான் மக்களுக்கே தெரியுமே. தீவிரவாதிகளை எப்படி ஒடுக்கப்போறீங்க, மக்களை எப்படி காப்பாற்ற போகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.
கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே வடிவேலு என்மீது குற்றம் சாட்டுகிறார். வடிவேலு என்னை எதிர்த்து தேர்தலில் நிற்பேன் என்கிறார். கருணாநிதியே என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நான் பயப்பட மாட்டேன். கலைஞர் மீதியிருந்த மரியாதையே போய்விட்டது. இனி அவரை கருணாநிதி என்றுதான் அழைக்கப் போகிறேன்.
நீங்க எப்படி அழைத்தாலும் அவர் உங்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அப்படியிருக்க, எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டி, கண்டுக்கவே கண்டுக்காதவர்களைப் பார்த்து கர்ஜிப்பது பலவீனமாகத் தெரிகிறதே. அப்புறம்… எது கேட்டாலும் பயப்படமாட்டேன் என்று பதில் சொல்வது, உங்களைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என்கிற நினைப்பில்தானே? இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னம்பிக்கை கூடாதுங்க. இப்பவே முதல்வர் மாதிரி பேசற உங்களை விட பழையவர்களே மேல் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டது உங்க காதுல விழுந்ததா?
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீடிக்கிறது. மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கோ, மாற்று நடவடிக்கை எடுப்பதற்கோ தமிழக அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
- இந்திய. கம்யூ., மாநிலச் செயலர் தா. பாண்டியன்
கூட இருந்தாலும் திட்டுறீங்க. இல்லாவிட்டாலும் திட்டுறீங்க. மக்கள் நண்பனாக நடிக்கத்தான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது? பேசாம இ. கம்யூனிஸ்ட் என்பதை தி.(திட்டற) கம்யூனிஸ்ட்ன்னு மாத்திடுங்கன்னு தி.மு.க. உறுப்பினர்கள் புலம்புவது கேட்கிறதா?
காமெடியனை ஹீரோவாக்கிட்டாரு விஜயகாந்த். நானா அவரா பார்த்துருவோம். கட்சி ஆரம்பிக்கிறேனோ இல்லையோ… அவர் தேர்தலில் எங்கே போட்டியிட்டாலும் அவருக்கு நான்தான் சரியான போட்டி. பார்த்துப்புடுவோம். மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்குன்னு பார்த்துப்புடுவோம்.
-வடிவேலு
நல்லா ஜோக் அடிச்சீங்க போங்க! சின்னக்கவுண்டரில் குடை பிடித்ததை மறந்துவிட்டு பேசக் கூடாது. கைப்புள்ளக் கணக்கா கவிழ்ந்திடாம பார்த்துக்கணும். நாய் சேகர் வழியில் நாக்கு மட்டும் பேசாம பார்த்துக்கணும். அப்பதான் அரசியல் களம் சூடா இருக்கும். என்னாங்கிறீங்க?









































