Sunday, 21 Sep 2008

Minister post for congress: Karunanidhi clarifies

அமைச்சர் பதவி: காங்கிரஸ் தலைமை கேடடால் பரிசீலிக்கலாம்: கருணாநிதி

திருச்சி: காங்கிரஸ் தலைமை கோரினால் அமைச்சர் பதவி அளிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. சார்பில் நேற்று நடந்த முப்பெரும் விழாவில் கலந்துகொள்ள திருச்சி வந்த முதல்வர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவருடைய பதில்களும்:

சேது சமுத்திரத் திட்டம் எப்போது முடிவடையும்?

இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றி கூற இயலாது. ஆனால் சேது திட்டம் பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்கள் மற்றும் தமிழக சான்றோர்கள் கண்ட கனவாகும். அத்திட்டம் நிறைவேற மொத்தத் தமிழ்ச் சமுதாயமும் அணி திரள வேண்டும். அந்த உறுதியோடு தான் இத்திட்டத்தை தி.மு.க. அணுகுகிறது.

இடது சாரி கட்சியினர் விஜயகாந்த்தைச் சந்தித்துள்ளனரே?

அதுப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

ஒரு ரூபாய் அரிசி தரமாக இல்லை என்கிறார்களே?

இதுவரையில் நான் அப்படி கேள்விப்படவில்லை. அப்படி சொல்பவர்கள் தரம்தான் சரியில்லை.

மேற்குவங்கத்தில் இருந்து வாபஸ் பெற்ற டாடா நானோ கார் திட்டத்தை தமிழக அரசு வரவேற்காதது ஏன்?

மேற்கு வங்க அரசுடன் பிரச்னை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே ஏட்டிக்கு போட்டியாக செயல்பட விரும்பவில்லை.

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?

அது அவருடைய கருத்து.

மக்கவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருமா?

இதனை அறுதியிட்டு கூறமுடியாது.

தமிழக காங்கிரசுக்கு தமிழக அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பேச்சு தொடர்ந்து வருகிறதே?

அவர்கள் கேட்கவில்லை பத்திரிகைகள் தான் செய்தி வெளியிடுகின்றன. காங்கிரஸ் தலைமை இதுபற்றி எதுவும் கூறுமானால், அதை அலட்சியப்படுத்தாமல் எங்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழுவினை கூட்டி விவாதித்து முடிவு எடுப்போம்.

அரசின் சாதனைப் பட்டியலை வேதனை  பட்டியல் என்று ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளாரே?

அவருக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.

திருச்சி தி.மு.க.  மாநாடு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமா, முன்கூட்டியே தேர்தல் வருமா?

முன்கூட்டியா? பின்கூட்டியா என்பது முக்கியமல்ல. தேர்தல் அறைகூவலைச் சந்திக்க தி.மு.க. எப்போதும் தயார்.

மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலையும் நடத்தும் வாய்ப்பு உள்ளதா?

இது தொடர்பாக பொதுக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும்.

அரசு கேபிள் இணைப்பு மக்களுக்க இலவசமாகத் தரப்படுமா?

நீங்கள் நிருபர் வேலையை இலவசமாகப் பார்த்தீர்கள் என்றால் நாங்களும் தருகிறோம்.

இலவச டிவி கொடுத்தது போல் கேபிள் இணைப்பும் இலவசமாகக் கொடுத்தால் நல்ல பெயர் கிடைக்குமே?

உங்கள் யோசனையை எதிர்காலத்தில் பரிசீலிக்கலாம்.

Related Posts Title


Leave a Reply