Friday, 19 Sep 2008

2008/09/19 Punch Balu

punch-balu.jpg‘பஞ்ச்’ பாலு

கடவுளே ஆண்டாலும் அந்த ஆட்சியிலும் குறைகள் இருக்கவே செய்யும் - முதல்வர் கருணாநிதி
பதில் அறிக்கை விட கடவுள் இறங்கி வரமாட்டார்ன்னு கடவுள் மீது அவ்வளவு நம்பிக்கையா?

பயங்கரவாதத்தை ஒடுக்குவதை விட்டுவிட்டு, பயங்கரவாதிகளுக்கு வெண் சாமரம் வீசும் போக்கை மத்திய அரசும், மற்ற கட்சிகளும் மாற்றிக்கொள்ள வேண்டும். - இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன்
மதத்தின் மீது தீவிரம் கொண்ட சிலர், அந்த மதத்தின்மீது தீவிரமாக வெண் சாமரம் வீசாமல் இருந்தாலே தீவிரவாதம் தோன்றாதே!
அதை நீங்களே ஆரம்பித்து வையுங்களேன் பார்ப்போம்.

அணுசக்தி ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இந்தியாவிற்கு அமெரிக்கா, சின்ன வீடு தகுதியைக் கொடுத்துள்ளது. சின்ன வீட்டிற்கு எல்லா சலுகைகளும் கிடைக்கும்: ஒரிஜினல் மனைவிக்குரிய தகுதி கிடைக்குமா? - ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி
அ.தி.மு.க. வுடன் கூட்டணி வைத்தால் ஜனதா கட்சி சின்ன வீடுதானே? அதுபோலத்தான் இதுவும். அமெரிக்காவின் சின்ன வீடானாலும் இந்தியப் பிள்ளைகளுக்கு நன்மை கிடைத்தால் சரி!

பாண்டிச்சேரியில் 1980ஆம் ஆண்டு ‘மதுவிலக்குக் கொண்டு வரப்படும்’ எனக் கூறித் தேர்தலைச் சந்தித்தபோது, மக்கள் அதற்கு எதிரான தீர்ப்பை அளித்தனர். அதனால் புதுச்சேரியில் மதுவிலக்கைக் கொண்டு வருவது கடினம். - புதுச்சேரி முதல்வர் வைத்திலிங்கம்
அந்த அளவுக்கு மக்கள் மதிமயங்கிக் கிடப்பதாகக் கருதினால் அந்த மயக்கத்தை தெளியவைக்க வேண்டியதுதானே ஒரு நல்லஅரசின் கடமை? ஆட்சிப் போனாலும் பரவாயில்லை என்று மதுக்கடைகளை மூடித்தான் பாருங்களேன்.அடுத்த ஆட்சியும் உங்கள் கைக்கே கிடைத்தாலும் கிடைக்கும்.

இனி பார்லிமெண்ட், சட்டசபை மற்றும் பொறுப்புகளுக்கு கோஷ்டி அடிப்படையில் இடம் ஒதுக்கக்கூடாது. தகுதி திறமை அடிப்படையில் தான் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். - சோனியா காந்தி கூறியதாக தங்கபாலு
அப்போ… மக்கள் எப்படித்தான் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டுக்கொள்வதாம்?

மின்சாரக் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தலாம் - செய்தி
இணையதளம் இயங்க மின்சாரம் இல்லைன்னா என்னங்க பண்றது?

Most Commented Posts


Leave a Reply