தைவான் சென்று வந்தேன்
இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம் !
ஜெட் ஸடார் விமானத்தின் சக பயணி ராஜீவ் தைவானை வியப்பதாலோ என்னவோ அல்லது பலமுறை தலைநகர் தைப்பேவுக்குப் பறப்பவர் என்பதாலோ தைவானைப் பற்றிய பல விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார்.
”ராஜீவ்! தைவானைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ, அதையெல்லாம் சொல்லுங்கள்.”
”இப்படியெல்லாம் கேட்டால் எனக்குச் சொல்ல வராது. என்னென்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களோ, அதைக் கேளுங்கள். கேட்கக் கேட்க நான் சொல்லுகிறேன். அதற்குமுன் நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். தைவானின் பழைய பெயர் என்ன? சொல்லுங்கள் பார்ப்போம்!”
”பார்மோசா தீவுகள்!”
”அட! பல பேரிடத்தில் இக்கேள்வியைக் கேட்டிருக்கிறேன். தெரியாது என்றே பெரும்பாலும் சொல்வார்கள். நீங்கள் விதிவிலக்கு.”
”நன்றி. தைவானில் எத்தனை தீவுகள்?”
”மூன்றுதான். ஏதோ ஏகப்பட்ட தீவுகள்போல் பார்மோசா தீவுகள் என்று பெயர் சூட்டிவிட்டார்கள். சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் இவை இருக்கின்றன. ஆதியில் சீனாவின் வசம் இருந்த இந்த நாடு, ஷியாங்கே ஷேக்கினால் 1950இல் சீன தேசியக் குடியரசு (ரிபப்ளிக் ஆப் சைனா) என்று அறிவிக்கப்பட்டுப் பிரிந்துவிட்டது. ஷியாங்கே ஷேக் தைவானின் தந்தை போன்றவர். இவர் தலைமையில் தைவான் அபாரமாக வளர்ந்தது. ஆனால் ஷியாங்கே ஷேக் சற்று சர்வாதிகாரப் போக்கை உடையவர். 48 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர்களால் இப்போது தைவான் ஆளப்படுகிறது.”
”ஒரு சிறு கேள்விதான் கேட்டேன். நீங்கள் தைவானின் அரசியலையே அலசிவிட்டீர்கள். தைவானின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்ன?”
”தைவானிய மக்கள்தாம். தைவானியர்கள் கடுமையான உழைப்பாளிகள். மின்னணு உலகில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். இன்று உலகில் 100 லாப்டாப்புகள் தயாரிக்கப்பட்டால், அவற்றுள் 60 தைவானில் உருவானதாக இருக்கும்.”
”அப்படியா? நம்ப முடியவில்லையே!”
”தைவானில் தயாரித்து மற்ற நாடுகள் தங்கள் பெயரைக் குத்திக் கொள்கின்றன. இதனால் வெளிஉலகிற்குத் தெரிய வாய்ப்பு இல்லை.”
”அப்படிச் சொல்லுங்கள்.”
”லாப் டாப் என்பது இந்த நாட்டில், நம் நாட்டில் சிவகாசிப் பட்டாசுபோல், குடிசைத் தொழில்போல.”
”அப்படியா?”
”ஆமாம். குடும்பப் பெண்களே ஓய்வு நேரத்தில் வீட்டில் இருந்தப்படி பல மின்னணுப் பொருள்களை அசெம்பிள் செய்து விடுகிறார்கள்.”
”எப்படி இது சாத்தியம்?”
”86 சதவிகிதம் பேர் படித்தவர்கள். தொழில் நுட்பத்தில் அபார திறமை உள்ளவர்கள். இவர்களின் முன்னணி ஏற்றுமதி நாடுகள் ஜப்பானும் அமெரிக்காவும் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்.”
”விற்கிறவர்கள்” என்று சொல்லுங்கள்.
”புரியவில்லையே.”
”கன்னடத்தில் இப்படி ஒரு பழமொழி இல்லையோ? சரி சரி! திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களுக்கே வேலை காட்டுகிறவர்கள் என்று சொல்ல வந்தேன்.”
”சரிசரி. ஹாங்காங்கில் திரும்பிய கடையெல்லாம் தைவானியப் பொருள்களை அதிகம் பார்க்கலாம். விலை மிக மலிவு.”
”ஆனால் ராஜீவ் சீனப் பொருள்களைப் போல் தைவானியப் பொருள்களைப் பற்றியும் எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை.”
”அப்படி ஒரு முடிவிற்கு வந்துவிடாதீர்கள். ஒவ்வொரு விலைக்கும் ஒரு தரம் இருக்கிறது. தைவானிய லாப்டாப்புகள் உலகெங்கும் நல்ல பெயர் எடுத்திருக்கின்றன. இல்லாவிட்டால் ஜப்பானிய, அமெரிக்க ஆர்டர்களைப் பெற முடியுமா, சொல்லுங்கள்.”
”தைவானிய நாணயத்தின் பெயர்?”
”டாலர்தான். தைவானீஸ் டாலர் என்று சேர்த்துச் சொல்ல வேண்டும்.”
”மதம்”
”பெளத்தம்தான். இந்தியாவில் தோன்றிய மதம் என்பதால் இந்தியர்களைச் சற்று மரியாதையோடுதான் பார்ப்பார்கள்! மற்றபடி தாவோயிசமும், கன்பூஷியசமும் உண்டு.”
”இந்தியத் தூதரகம் தைபேயில் எங்கு இருக்கிறது?”
”உங்களுக்குத் தெரியாதா? தைவானில் தூதரகம் அமைக்கும் எந்த நாடும் சீனாவின் பிளாக் லிஸ்டிற்குப் போய்விடும். இதற்குப் பயந்தே தைவானில் இந்தியத் தூதரகத்தை அமைக்கவில்லை.”
”ஆனால் தைவானியத் தூதரகம் டெல்லியில் இருக்கிறதே! எனக்கு ஒரு மாத விசா தந்துள்ளதே!”
”தவறான தகவல். தைவானிய கலாசார அமைப்புதான் உங்களுக்கு விசா தந்தள்ளது. தைவானியத் தூதரகம் என்று இந்தியாவில் எதுவுமே இல்லை.”
”ஓ! நான்கூடக் கவனிக்கவில்லை. ஒரு கலாசார அமைப்பு எப்படி ஒரு நாட்டின் விசாவை நிர்ணயிக்கமுடியும்?”
”சீனாவுக்குப் பயந்து, இந்தியா, தைவானியத் தூதரகத்தை அமைக்க மக்களின் போக்குவரத்து நடந்தாக வேண்டும். தைவானிய அரசு ஊழியர்களே கலாசார அமைப்பு என்ற பெயரால் இயங்கி விசா வழங்குகிறார்கள்.”
”செம ஏமாற்று வேலையாக இருக்கிறதே! சீனா இதைக் கண்டுகொள்ளாதா?”
”தூதரகம் என்று அறிவித்துச் செயல்படாதவரை சீனாவுக்கு இதுபற்றிக் கவலையில்லை.”
”நல்ல கண் துடைப்பு இது. தைவான்மீது சீன அரசுக்கு என்ன கோபம்?”
”பிரிந்து சென்ற நாடல்லவா? பழம் பகைமையுணர்வு இருக்குமல்லவா?”
”பூகோளக் கோணத்தில் ஏதும் தெரிந்து வைத்திருக்கிறீர்களா?”
எனக்கு தெரியாதது என்ன இருக்கிறது என்பதுபோல சட்டென்று பதில் சொன்னார் ராஜீவ்.
”36,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாடு. 25% நிலத்தில்தான் விவசாயம் நடக்கிறது. எப்போதும் மழை பெய்வதால் அடர்த்தியான காடுகள் உண்டு. உலகில் வெயில் காலத்தில் கூட மழை பிய்த்து எடுக்கும் ஒரே நாடு இதுதான்.”
”ஓ!”
”நம் நாட்டைப் போலத்தான் பயிர்கள். அரிசி, கோதுமை, கரும்பு, வள்ளிக்கிழங்கு என்று நம் பக்கத்து விவசாய நிலங்களைப் போலவே இருக்கும்.”
”பொருளாதாரம் எப்படி?”
”உலகின் பத்து பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளுள் தைவானும் ஒன்று.”
”அடேயப்பா!”
”கற்பூரத்தின் உற்பத்தி இங்கு மிக அதிகம். பெட்ரோலியம், எரிவாயுக்கள், கனிமங்கள் நன்கு கிடைக்கின்றன. மக்களின் நல்ல உழைப்பும் சேர்ந்து இந்த நாட்டை வளமானதொரு நாடாக ஆக்கிவிட்டன. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். அடிக்கடி கடும் சூறாவளிகள் ஏற்படும். இதன் பூகோள அமைவிடம் அப்படி.”
விமானத்தின் ஏதோ அறிவிப்பு காதில் ஏறவில்லை. கதை கேட்கும் சிறுபிள்ளைப் போல் தைவானைப் பற்றிய விஷயங்களை ஆர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்ததன் விளைவு.
விமானத்தின் மூக்கு, தைப்பேயை இலக்காக்கி இறங்க ஆரம்பிக்க, ”ரொம்ப நன்றி ராஜீவ். பல தகவல்களைச் சொன்னீர்கள்.”
”எதற்கும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். நான் அறிந்தவரை நினைவில் இருந்தவற்றைச் சொன்னேன்.”
”இன்னும் ஒரே ஒரு சந்தேகம். தைவானில் ஏதேனும் ஒரு தமிழரை அறிமுகம் செய்ய முடியுமா?”
”ஓ! சுரேஷ்குமார் என்பவரைத் தெரியும். இந்தாருங்கள். இது பழைய எண்ணாகக் கூட இருக்கலாம். அப்புறம் திட்டாதீர்கள்!”
”சேச்சே! நல்ல அறிமுகம். சுரேஷ்குமார் என்ன செய்கிறார்?”
”தைப்பே பல்கலைக்கழகத்தில் படிக்கிறார். கோயமுத்தூர்க்காரர்.”
”ரொம்ப நன்றி” இருக்கைக்குத் திரும்பியதும் ஒரு சந்தேகம். ஒய்.எம்.சி.ஏ.வுக்கு எப்படிப் போவது? என்பதைக் கேட்க மறந்துவிட்டேன். சரி. சமாளிப்போம்.
தைப்பே விமானத்தில் ராஜீவ் எங்கோ கரைந்து போனார். தெரியாத ஊர், புரியாத மொழி. அறிமுகம் என்று எவரும் இல்லை. ”நிச்சயம் தடுமாறப் போகிறாய் நீ” என்றது மனது. அது நடந்தது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title































