Friday, 19 Sep 2008

2008/09/19 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எஸ்.அசோகன், சென்னை-84.

பொதுமக்களிடமிருந்து புகார்களை வாங்க காவல்துறை மறுக்கிறதே?

நீங்கள் சொல்கிற இடம் மதுரைக்கு உள்ளேவா, மதுரைக்கு வெளியேவா? இதைச் சொல்லாத வரை உங்களின் இந்தப் புகாரை என்னால் ஏற்க முடியாது. காவல்துறை என்றால் உங்களுக்கு இளப்பமாய்ப் போச்சு. அவர்களுக்குக் கட்டப்பஞ்சாயத்துக்கே நேரமில்லை. இதிலே உங்கள் புகார் வேறு!


சி.மைக்கேல், விழுப்புரம்.

இடதுசாரிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்துவிட்டார்களா?

வரவேற்பு முடிந்ததும் கல்யாணம் நின்றுபோகிற காலம் இது! அவசரப்படாதீர்கள்.


ஆர்.பாண்டுரங்கன், திருத்தணி.

மூளைச்சலவை என்பது என்ன?

தி.மு.க.விற்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை ஒரு நடுநிலையாளனிடம் கேட்கிறீர்களே? இது நியாயமா?


கே.தணிகை, மதுரை.

சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை?

ஆற்காட்டாரை ‘இருளப்பன்’ என்றும், ப.சிதம்பரத்தை ‘ஆண்டியப்பன்’ என்றும் பா.ஜ.க.வின் இல.கணேசன் நக்கலடித்தாரே, அது! அரசியல்வாதிகளைப் பார்த்துச் சிரித்தது போய், அவர்களும் நம்மைச் சிரிக்க வைக்கிறார்களே என்கிறபோது சிரிப்புச் சிரிப்பாய் வருது.


வி.கர்ணன், திண்டிவனம்.

நெற்றி அகலமாக இருந்தால் அறிவு அதிகமாமே, உண்மையா?

நெற்றியானது மீட்டர் கேஜை விடக் கொஞ்சம் பிராட்கேஜாக இருந்தால் அறிவு அதிகமா என்று கேட்கிறீர்கள்? அப்படி பார்த்தால் சிலருக்கு நான்கைந்து பிராட்கேஜ் லைன்கள் இழுக்கிற அளவு அகலமிருந்தும் அவர்களுக்கு அறிவு இல்லாதது ஏன்? நெற்றியே இல்லாதவர்கள் சொன்ன தகவல் இது. என்னை விடுங்க. எனக்கு பிராட்கேஜ்தான்.


ந. பசுபதி, சென்னை.

நாட்டுக்கு இப்போது தேவையானது?

கெளரவ டாக்டர் பட்டங்கள்! வறுமை, வெள்ளம், மதக் கலவரங்களை எல்லாம் பத்திரிகைகளின் கறுப்பு ‘மை’கள் ஏற்றுக் கொள்ளப்படாதபடி இருட்டடிப்புச் செய்ய, இந்த கறுப்பு கவுன்கள் சிலருக்கு மிகமிக அத்தியாவசியமாய்த் தேவைப்படுகிறது.


டி.ஹரிஹரன், பள்ளிக்கரணை.

பரதம் இப்போது இருக்கிறதா?

அது சுத்த சைவ நடனம். இதை எத்துணைப் பேர் பார்ப்பார்கள்? இப்போதெல்லாம் (சுத்த) அசைவ நடனங்கள்தாம்! நமது கிழக்குக் கடற்கரை சாலை கிழக்காக இருந்தாலும் அதன் பொழுதுகள் எல்லாமே மேற்காகத்தான் இருக்கிறது.


மா.செல்வராஜ், சென்னை-31.

குன்னக்குடி வைத்தியநாதனின் மரணம் குறித்து?

இவர் உடல்நலக்குறைவாக இருந்த காலத்திலேயே இவர் நீண்ட காலம் வாழவேண்டும் என்று உங்கள் மத்தியில் விருப்பம் தெரிவித்தவன் நான். வயலினுக்கே மரியாதை தந்தவர். மேட்டுக்குடி இசைக்கருவியான வயலினைப் பாமரர்களும் இரசிக்க வைத்தவர். இந்திய அளவில் மதிக்கப்பட்ட மிகச் சில தமிழகக் கலைஞர்களுள் குன்னக்குடி குறிப்பிடத்தக்கவர். இவர் வயலின் மட்டும் அல்ல, இவர் பேச்சும் உள்ளத்திற்கு உற்சாகம் தரும். மனிதர் சோர்ந்து, அசந்து, தளர்ந்து பார்த்ததே இல்லை! குன்னக்குடியிடம் கற்றுக் கொள்ள வேண்டியது இசை மட்டுமல்ல, உற்சாக மனநிலையும்கூட!


ஆர்.பாலாஜி, கும்பகோணம்.

பெட்ரோல் விலையைச் சமாளிக்க ஒரு வழி?

இதற்கு நமது வலது, இடதுகள் ஒத்துழைக்க வேண்டும். அவை ஒத்துழைத்தால் இந்த பெட்ரோல், டீசல் தேவைகளை(யே) நாம் எரித்துவிடலாம். இந்த வலது, இடதுகள் என்பது நமது கட்சிகள் அல்ல, நமது கால்கள். மிதிவண்டியை மிதிக்க அவை தயாரானால் நமக்கு ஒரு பெட்ரோலும் வேண்டாம்.


எம்.மாசிலாமணி, காஞ்சிபுரம்.

பாகிஸ்தான் பிரதமரைக் கொல்லப் பார்த்திருக்கிறார்களே?

அங்கு தினமும்தான் துப்பாக்கியைத் தூக்குகிறார்கள். ஆனாலும் அவர்கள் ஒலிம்பிக்கில் வர முடியவில்லையே? மண்ணைக் கவ்விக் கொள்கிறார்களே?


எஸ்.சங்கரன், சென்னை-87.

அணு ஆயுத ஒப்பந்த ரகசியங்கள் வெளிப்பட்டுவிட்டனவே?

பொத்திப் பொத்தி வைத்தாலும் கருவிலிருக்கும் குழந்தை வெளிப்பட்டுத்தான் தீரும். இந்தக் குழந்தை வெறும் அரசியல் மருத்துவக் கண்காட்சிக்கு மட்டுமே உதவும்!


பி.ஸ்ரீராம், பொழிச்சலூர்.

அரசியலில் பெண்கள் பங்கேற்கலாமா?

தாராளமாய்ப் பங்கேற்கலாம். ஒரு சிலர் கட்சி மாறாமலிருக்க அங்குள்ள மகளிர் அணிகளே காரணமாய் இருப்பதைப் பார்த்தால், அவர்களின் வலிமை புரியும்.


ஜே. பாலமுருகன், கோவை.

புதுவை மாணவர்களுக்கு மாதந்தோறும் பாக்கெட் மணி வழங்க உத்தரவிட்டுள்ள அம்மாநில புதிய முதல்வர் வைத்திலிங்கம் பற்றி?

வைத்திலிங்கத்தின் இந்த வைத்தியம் சரியில்லை! பாக்கெட் மணி படிப்புக்கு உதவாது. வேண்டுமானால் அவை புகைக்கும் போதைக்கும் உதவலாம்.


ஆர்.ராகவன், ஈகை.

முடிந்தால் ஜெயலலிதா கூட தி.மு.க.வில் சேரக்கூடும் என்ற கலைஞரின் பதிலைப் பற்றி?

ரசிக்கும்படியாக இல்லை. கலைஞருக்கு புளிக் கரைசலை ஊற்றத்தானே ஜெயலலிதா அரசியலே செய்கிறார்.


பா.சங்கர், சிந்துப்பூத்துறை.

விஜய் ஏசுதாஸ் எப்படி?

ஏசுதாசின் குரலில் இருந்த இளமை போய்விட்டது. இளம் நாயகர்களுக்கு ஏற்ற குரலாய் இல்லை. இவரும் இதைப் புரிந்து கொண்டு அமெரிக்காவில் வாழ்ந்தபடி இந்தியாவை எட்டிப் பார்க்கிறார். ஏசுதாஸை எண்ணி ஏக்கப்படுகிறவர்களுக்கு இவர் மகன் விஜய் நல்ல மாற்று. அச்சான ஆனால் இளமை ததும்பும் குரல். அரசியலில்தான் சில வாரிசுகள் எரிச்சலூட்டுகின்றனர். கலைத்துறையில் அல்ல!


கே.இசக்கிமுத்து, வண்டலூர்.

வடக்கே பிடித்த நடிகர்?

சத்ருகன்சின்ஹா. இன்னமும் இளமை குலையாமல் இருக்கிறார். ரஜினியே ஒரு முறை, நான் சத்ருகனைத்தான் பல நேரங்களில் பின்பற்றுகிறேன் என்று. சூப்பர் ஸ்டாருக்கே குரு என்றால் சாதாரணமா? வில்லனாய் நடித்து நெஞ்சில் இடம்பிடிப்பது மகாக்கடினம்!


எல்.நவீன், ஆத்தூர்.

சன்.டி.வி.யின் காமெடி என்கிற நகைச்சுவை சேனல் வரவேற்பைப் பெறுமா?

சோகம் அலுப்புத் தட்டும். சண்டை அலுப்புத் தட்டும். காதலும் நகைச்சுவையும் அலுப்புத் தட்டாது. அழவைத்து வேடிக்கை பார்த்த தொலைக்காட்சித் தொடர்களுக்கு இது நல்ல பிராயச்சித்தம்!


கா.பாலு, சேலம்-4.

தி.மு.க. ஆட்சியின் மைனஸ் பாயிண்ட் எது?

மின்துறை! ஆற்காட்டார்தானே கலைஞருக்கு மிக மிக வேண்டியவர் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்!


கு.அல்லாபிச்சை, திருச்சி-2.

கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி தண்டிக்கப்பட்டிருக்கிறாரே?

வசமாகச் சிக்கியவர் ஒருவர் மட்டும்தான்!


எஸ்.நந்தகுமார், கோவை-1.

கோயில்களில் கூட்டம் அதிகரித்து வருவது எதைக் காட்டுகிறது?

பக்திப் பெருக்கத்தை விட மக்களின் பிரச்னைப் பெருக்கம் அதிகமாகிவிட்டது என்பதை!


மு.பார்வதி, மணவை.

அக்காள் கணவரைக் கொல்ல ஒரு பெண்மணி கொலையாளிகளை அமர்த்துவது எதைக் காட்டுகிறது?

தொலைக்காட்சித் தொடர்களின் கோரக் கரங்கள் வீட்டினுள் புகுந்தது மட்டுமின்றி மனத்திலும் புகுந்துவிட்டனவே, அதை!

12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்

Related Posts Title


Leave a Reply