Wednesday, 17 Sep 2008
மின்வெட்டு: ஆற்காடு வீராசாமி பதவி விலகவேண்டும்: பா.ம.க. ஆர்ப்பாட்டம்
சென்னை: மின்வெட்டைக் கண்டித்தும், அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதவி விலகக் கோரியும் பா.ம.க. சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களிலும் பிற இடங்களிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பா.ம.க.வினர் கலந்து கொண்டு அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு எதிராக கண்டன குரல் எழுப்பினர்.
மேலும் தமிழகம் இருளில் மூழ்கி உள்ளதை குறிப்பாக உணர்த்தும் பொருட்டு, மெழுகுவர்த்தி, சிமினி விளக்குகளை கொண்டு வந்தும் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் செயல்படாத நிலையைக் கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
சென்னையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது அவர் பேசுகையில்,
”தமிழகதத்தில் வரலாறு காணாத வகையில் மின்வெட்டு நிலவுகிறது. மின்வெட்டே இல்லை என்று சட்டசபையில் கூறினார் ஆற்காடு வீராசாமி. ஆனால் அப்போது அமலில் இருந்த 5 மணிநேர மின்வெட்டு இப்போது 8 மணிநேரமாக அதிகரித்துவிட்டது.
தி.மு.க. அரசு, தனியாரை மின் துறையில் ஈடுபடுத்த ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அதையும் இன்னும் அமல்படுத்தவில்லை. அரசாங்க நிறுவனங்கள் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளும் செய்யப்படவில்லை. அனல்மின் உற்பத்தியில் 500 மெகாவாட் குறைந்துள்ளது.
கடந்த காலங்களில் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்றோம். இப்போது அவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தை இருளில் மூழ்கடித்துள்ள மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து முதல்வர் நீக்கவேண்டும்” என்றார்.









































