2008/09/12 Lenavin Payna Katturai
தைவான் சென்று வந்தேன்!
இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
என் கண்ணெதிரே நான் கொண்டு வந்த உணவு கொட்டப்பட்டதைப் பார்த்தபோது எனக்குச் சற்று வேதனையாக இருந்தது.
இந்தியர்கள் என்றால் எங்கும் உணவை எடுத்துச் செல்கிறவர்கள் என்கிற கருத்து உலக விமான நிலையங்கள் அனைத்திலும் இருக்கின்றன.
ஒன்று, நமது சிக்கனக் குணம். இரண்டாவது நம் உணவைத் தவிர, வேறு எந்த உணவும் நல்ல உணவு அல்ல! மற்ற உணவையெல்லாம் எவன் திம்பான்? வாய்க்கு விளங்காது? வயிற்றுக்கு ஆகாது என்பன போன்ற உறுதியான கருத்துகள் நமக்குள் அழுத்தமாகப் பதிந்துவிட்டன.
புதிய புதிய நாடுகளில் பொருள்களை வாங்கிக் குவிக்கும் குணம் உள்ள நமக்கு, புதிய புதிய உணவுகளை உண்டு பார்ப்போம் என்ற எண்ணம் இல்லை.
இந்த நம் கொள்கை (?) உலகப் பிரசித்தம் போலிருக்கிறது.
என்னைத் தவிர வேறு எவரிடமும் உங்களிடம் உணவுப் பொட்டலங்கள் இருக்கின்றனவா என்று விமான ஊழியர்கள் கேட்கவில்லை. இது உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று கேட்கிறீர்களா? எனக்குப் பின்னால் வந்தவர்களையெல்லாம் எப்படிச் சோதனை இடுகிறார்கள் என்று நான் சற்றுத் தூரத்தில் இருந்து கவனிக்க ஆரம்பித்தேன் என்பதால் இந்த வாக்கியத்தை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.
ஜெட் ஸ்டார் நிறுவனம் விமானச் சேவையில் உணவோ தண்ணீரோ வழங்காது. நாம்தான் விலைக்கு வாங்கிக்கொள்ள வேண்டும்.
விமானத்திற்குள் நடக்கும் விற்பனையைப் பாதிக்கும் விஷயம் என்பதாலேயே என் உணவுப் பொட்டலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்பது பின்னர் எனக்குப் புரிய வந்தது. ஜெட் ஸ்டார் விமான நிறுவனம் ஒவ்வொரு விஷயத்திலும் அப்படி ஒரு சிக்கனத்தைக் கடைப்பிடிக்கிறது. அவ்வளவு பெரிய விமானத்திற்கு இரண்டே பணிப்பெண்கள்.
விமான இருக்கைகளோ படு நெருக்கம். என்னைப் போன்று சராசரி உயரத்திற்கும் அதிகமான மனிதர்களுக்கு முன் இருக்கையில் முட்டி இடிக்கும். நம்மைக் கடந்து போகும் எவரும் நம்மை இடித்துக் கொண்டுதான் போக வேண்டும்.
பெண்களின் உடல் ஸ்பரிசங்களை விரும்பும் இடிமன்னர்களுக்கு ஜெட் ஸ்டார் ஏகமாக வசதி செய்துகொடுக்கிறது. சீனர்கள் இதைப் பற்றிக் கவலை கொள்வதே இல்லை என்பதை நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.
நம்மூர்ப் பெண்மணியாக இருந்தால், என்னைக் கடந்து போகிறீர்களா? ”இருங்கள்! நான் என் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்துவிடுகிறேன். நீங்கள் கடந்து போய் உட்கார்ந்தும் நான் அமர்ந்து கொள்கிறேன்” என்று மரியாதையாக எழுந்துவிடுவார்கள்.
சீனர்கள், சீனப் பெண்கள் நல்லா உரசிக்கோ என்று உட்கார்ந்தபடிதான் இருக்கிறார்கள். இருக்கைகள் பெருகப் பெருக விமான நிறுவனத்திற்கு வருமானமோ வருமானம்!
ஜெட் ஸ்டாரின் சிக்கனத்தைப் பற்றிச் சொல்ல வந்தேன் அல்லவா? போர்டிங் பாஸ் இருக்கிறதே இதில் கூடச் சிக்கனம்! அடேயப்பா! நம்மூர் திரையரங்கு சைக்கிள் டோக்கன் கூடப் பரவாயில்லை போங்கள் அவ்வளவு மோசம்!
தவறுதலாக எங்கோ வைத்துவிட, தொலைத்துவிட வாய்ப்புகள் அதிகம்.
நான் முன்ஜாக்கிரதை முத்தண்ணா (என் நட்பு வட்டம் தந்த பட்டப்பெயர்) என்பதால் பாஸ்போர்ட்டில் எப்போதும் சொருகி வைத்துள்ள ஜெம் கிளிப்பிற்குள் இதை அழுத்தி வைத்தேன்.
உணவு வேளை வந்தது. 18 சிங்கப்பூர் டாலர் என்றார்கள். உணவில் செயற்கை நிறம் சேர்க்கப்பட்டிருக்குமா? என்று நான் கேட்ட கேள்வி விமானப் பணிப்பெண்ணுக்குப் புரியவே இல்லை. புரிய வைப்பதற்குள் சலித்துப்போனது. ”சரி சரி எதையாவது கொண்டு வந்து தொலை!” என்பதுபோல் சலிப்பை வெளிக்காட்டாது சொன்னேன். வந்ததோ வண்ண உணவு! அட கன்றாவியே! எனக்கு இது ஆகாதே! வயிற்றைக் கலக்குமே!
சற்றுத் திரும்பி பின்வரிசையில் பார்த்தேன். அட! தமிழர் தோற்றத்தில் ஒருவர் இருந்தார்.
ஓர் இந்தியரைப் பார்த்து இப்படி நான் பூரிப்பு அடைந்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.
அவரருகே போய், ”நீங்கள் தமிழா?” என்றேன். அவர் மலங்க மலங்க விழித்ததும்தான், தவறான நபரிடம் கேட்கப்பட்ட தவறான கேள்வி இது என்பது புரிந்தது. நல்லவிதமாகப் பேசினார் ஆங்கிலத்தில்தான்!
”என் பெயர் ராஜீவ். நான் சிங்கப்பூர் குடிமகன். என் தாய்மொழி கன்னடம். தமிழ் ஓரளவு புரியும். ஆனால் பேச வராது. நான் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர். தைப்பேயில் என் வாடிக்கையாளருக்கு ஒரு பிரச்னை. அவருக்கு உதவ நான் போய்க்கொண்டிருக்கிறேன்” என்று ஆறு கேள்விகளுக்கான விடைகளை ஒரே நேரத்தில் கோர்வையாகச் சொன்னார்.
”மிக்க மகிழச்சி மிஸ்டர் ராஜீவ். விமானத்தில் இப்போதுதான் வாங்கினேன் இந்த உணவை. இதில் செயற்கை நிறம் நிறைய இருக்கிறது. என் வயிறு ஏற்காது. உங்களுக்குத் தரலாம் என்று பார்த்தேன்.” ”ரொம்ப நன்றி. நான் சாப்பிட்டுவிட்டேன். நான் உதவ முடியுமா உங்களுக்கு?”
”வண்ணமில்லாத உணவு வேண்டும் எனக்கு. இது வீணானால் பரவாயில்லை. அந்த விமானப் பணிப்பெண்ணுக்கு நான் சொல்வது புரியவில்லை. நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும்.”
”சரி, உங்கள் இருக்கையில் நீங்கள் அமருங்கள். உங்களுக்கு உணவு வரும்” என்றார் மிடுக்காக. தயங்கி நின்றேன்.
”என்ன விஷயம்!”
”தைப்பேயில் எனக்கு எவரையும் தெரியாது. ஓய்.எம்.சி.யில் அறை பதிவு செய்திருக்கிறேன். அதற்கு எப்படிப் போகவேண்டும்?”
”முதலில் நீங்கள் உணவை முடியுங்கள். இது நான்கு மணி நேரப் பயணம் நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. ஒய்.எம்.சி.ஏ.வுக்குப் எப்படிப் போக வேண்டும் என்று நான் சொல்கிறேன்” என்றார் ராஜீவ்.
அமர்ந்தேன். உணவு வந்தது. பணத்தை நீட்டினேன். மறுபடி 18 டாலர். விமானப் பணிப்பெண் மறுத்தார். ”உங்கள் நண்பர் கொடுத்துவிட்டார்!”
”ஓ! நன்றி” என்றவன் தொடர்ச்சியாக முகத்தைப் பின் இருக்கையை நோக்கி ”உங்களுக்கும் என் நன்றி” என்று ராஜீவ்வைப் பார்த்துச் சொன்ன அதே வேளையில் டாலர்களையும் காட்டினேன்.
”வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வாங்கிக் கொள்கிறேன்” என்று மெலிதாகப் பேசியபடி சைகை மொழியிலும் காட்டிக் மையமர்த்தினார்.
உணவு படுசூடாக இருந்தது. மேலே உள்ள மெல்லிய தகரம் போன்ற சில்வர் காகிதத்தைக் கிழித்தேன்.
ஒரு வாடை வந்தது பாருங்கள். ஐயகோ! நான் எப்பேர்ப்பட்ட உணவையெல்லாம் உண்டவன். என் தலையெழுத்து இந்த சகிக்கமுடியாத நாற்றம் பிடித்த உணவைத் தின்னவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டதே! என் உள்மனத்திற்கு வெளிமனம் சமாதானம் சொல்லும்படி ஆகிவிட்டது! மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓர் உணவை வாய்க்கு தள்ளவேண்டிய கொடுமை ஒருவருக்கும் வரக்கூடாது. என்ன செய்யச் சொல்லுகிறீர்கள். பசி! நல்ல பசி. மென்று தின்னாமல் அப்படியே விழுங்கினேன்.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொன்ன புண்ணியவானுக்கு நிச்சயம் சர்க்கரை போட வேண்டும்.
ராஜீவ் எனக்காக விமானத்தின்பின் பகுதியில் சேர்ந்தாற்போல் இரண்டு இடங்களை ஒன்றாகப் பார்த்து வைத்திருந்தார். விமானம் நிறையாததால் இது சாத்தியமாயிற்று.
ராஜீவ் தைவானைப் பற்றிச் சொன்ன பல விஷயங்கள் இவர் தைவானை மிகவும் நேசிக்கும், தைவானை மிகவும் வியக்கும் மனிதராகவே எனக்கு காட்டியது.
(தொடரும்)
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Related Posts Title
Tags: Payna Katturai, இடி மன்னர், கன்னடம், சிங்கப்பூர் டாலர், ஜெட் ஸ்டார், தைவான், ராஜீவ்
December 13th, 2008 at 7:24 am
ungalin payanakatturaigal endral enaku alwa pola padithu konde iruppen