Thursday, 11 Sep 2008
அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
வாஷிங்டன்: இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமான 123 க்கு ஒப்புதல் பெற, இந்த ஒப்பந்தம் சம்பந்தமான அனைத்துக் கோப்புகளையும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல்சபைக்கு அனுப்பியுள்ளார் அதிபர் ஜார்ஜ் புஷ்.
மேலும் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு வருகை தரும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்க அதிபர் புஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை பிரிவு செயலாளர் டேனா பெரினோ கூறியதாவது:
”வருகிற 25ஆம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கை வெள்ளை மாளிகையில் சந்திக்க அதிபர் புஷ் ஆர்வமாக உள்ளார். அப்போது விவசாயம், கல்வி, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசப்படும்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால், இந்தியாவின் சுற்றுச்சூழல் கெடாமல் அதன் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒப்பந்தத்தில், வரும் 25ஆம் தேதி அதிபர் புஷ்ஷூம், மன்மோகன் சிங்கும் கையெழுத்திடுவர்” என்றார்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் மன்மோகன் சிங் வரும் 23ஆம் தேதி 5 நாள் பயணமாக அமெரிக்கா புறப்படுகிறார்.









































