No Smoking in public from oct.2
பொது இடங்களில் புகை பிடிக்க அக். 2 முதல் தடை: அன்புமணி
டெல்லி: ஓட்டல்கள், அலுவலகங்கள் உள்பட அனைத்து பொது இடங்களிலும் சிகரெட் பிடிக்க அக்டோபர் 2ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. மீறினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி கூறினார். புகையிலை பயிரிட தடை விதிக்கவும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் நேற்று நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
”புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து தீவிர பிரசாரம் செய்தும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. இதனால் புகையிலை பயிரிடுவதை தடை செய்ய அரசு யோசித்து வருகிறது. அதற்கு பதில் மாற்று பயிர் பயிரிட, விவசாயிகளிடம் வலியுறுத்தப்படும். இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
புகையிலை பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களில் எவ்வளவு நிக்கோடின் இருக்கிறது என்பதை அறிய புகையிலை சோதனை ஆய்வுக் கூடங்கள் நிறுவப்படும்.தற்போது அகமதாபாத்தில் உள்ளது போல சென்னை மற்றும் டெல்லியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புகைப் பழக்கத்தை கைவிடுபவர்களுக்கு சிகிச்சையளிக்க பல இடங்களில் அதற்கான மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் இதற்கான தனிப்பிரிவு அமைக்க நிதி உதவி செய்யப்படும்.
ஓட்டல்கள், அலுவலகங்கள் உள்பட அனைத்து பொது இடங்களிலும் அக்டோபர் 2முதல் சிகரெட் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுபவர்களிடம் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும். இந்த அபராதத் தொகை சில மாதங்களில் ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
புகையிலைப் பொருட்களில் அதன் ஆபத்தை குறிக்கும் வகையில் படத்துடன் கூடிய எச்சரிக்கையை டிசம்பரில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
Related Posts Title
Tags: Anbumani Ramadoss, Ban, Smoking, அன்புமணி, சுகாதாரத் துறை, புகை பிடிக்க தடை