Tuesday, 9 Sep 2008
மின் உற்பத்தி திட்டங்களில் கவனம் செலுத்தாத தி.மு.க.!: ஜி.கே.மணி
திண்டுக்கல்: மின் உற்பத்தி திட்டங்களில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தாததால் தான் தமிழகம் பெரும் பின்னடைவை தற்போது சந்தித்துள்ளதாக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
”நாட்டில் குடி பழக்கம் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் அனைத்து இளைஞர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிடுவர்.
குடும்பத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டிய இளைஞர்கள் குடிக்கு அடிமையாகிவிட்டால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும். டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும். டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு வீடு வீடாகக் கூட இலவச அரிசி வழங்கலாம்.
தமிழக மக்களை மின்வெட்டு ஒட்டுமொத்தமாக பாதித்துள்ளது. மின் உற்பத்திக்கு சிறு சிறு திட்டங்கள் செயல்படுத்தியிருந்தாலே ஓரளவு மின் தட்டுப்பாடு சரி செய்யப்பட்டிருக்கும். பல கோடி செலவில் பெரிய மின்திட்டங்கள் எனக் கூறிக் கொண்டிருப்பதால் இடம் தேர்வு செய்வது உள்பட அனைத்து விஷயங்களில் தாமதமாகி வருகிறது.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளில் மின் உற்பத்தி திட்டங்களில் கவனம் செலுத்தாததால் தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டிற்கு தமிழக அரசு முழுபொறுப்பேற்க வேண்டும். அதேபோல விலைவாசியை கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு கவனம் செலுத்தவில்லை.
பா.ம.க.வை பழிவாங்கும் நோக்கில் தி.மு.க. செயல்படுகிறது. 3ஆவது அணி பற்றி தற்போது பேச வேண்டியதில்லை. தேர்தல் வந்தால்தான் உண்மை நிலை தெரியும். நவம்பர் அல்லது டிசம்பரில் மக்களவைத் தேர்தல் வரலாம்” என்றார்.









































